சிறப்பான கவர்னர் உரை ஆற்றப்பட்டிருக்கிறது! அமைச்சர் பரபரப்பு பேட்டி!

0
79

தமிழக சட்டசபையில் நேற்று ஆளுநர் ரவி உரை நிகழ்த்தினார் அதன்பிறகு அவைக்கு வெளியே பத்திரிக்கையாளர்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டியளித்தார். அப்போது திமுக ஆட்சி மீது அவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்தார்.

அவருக்கு பதில் அளிக்கும் விதத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு சட்டசபைக்கு வெளியே அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கிய பேட்டியில் தெரிவித்திருப்பதாவது, மிகக் குறைந்த காலத்தில் எவ்வளவு அற்புதமான திட்டங்களை அரசு நிறைவேற்றி இருக்கிறது என்பதையெல்லாம் தொகுப்பாக எடுத்துக்கூறி சிறப்பான கட்டுரை நிகழ்த்தப்பட்டு இருக்கிறது. ஆனால் அதிமுக அதனை ஏற்றுக்கொள்ளாமல் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்து இருக்கிறது என கூறியிருக்கிறார்.

திமுக ஆட்சியில் குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் நடமாட்டம் அதிகரித்திருப்பதாக தெரிவித்தார், குட்கா என்ற போதை பொருள் இருப்பதை பிரபலப்படுத்தி வைத்தது அதிமுகவின் கடந்த ஐந்தாண்டு கால ஆட்சி தான், போதைப்பொருள் தொடர்பாக பேசுவதற்கு எடப்பாடி பழனிச்சாமி அருகதையில்லை என்று தெரிவித்திருக்கிறார்.

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தற்சமயம் பெருகி இருப்பதாக தெரிவித்தார், பொள்ளாச்சியில் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு பெண்கள் கதறி அழுத சம்பவம் எந்த ஆட்சியில் நடைபெற்றது என்பதை அவர் மறந்துவிட்டாரா? என்று கேள்வி எழுப்பியதோடு இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருப்பதாகவும், துப்பாக்கி கலாச்சாரம் தலைதூக்கி இருப்பதாகவும், தெரிவித்து இருக்கிறார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் பிரச்சனை நடந்த சமயத்தில் அப்பாவி மக்கள் 13 பேரை குறிபார்த்து சுட்டுக்கொன்று சட்டம் ஒழுங்கை முற்றிலுமாக சீர்குலைத்து இருந்தது, அதோடு காவல்துறையினரின் கவுரவத்தை குலைத்த ஆட்சி எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சி என்று கூறியிருக்கிறார்.

பொங்கலுக்கான பணம் வழங்கவில்லை என்றும் அவர் விமர்சனம் செய்திருக்கிறார் ,அவர்கள் தேர்தல் வரும் சூழ்நிலையில், சென்ற வருடம்தான் பணம் வழங்கினார்கள் அம்மா கிளினிக் என்று ஆரம்பித்து விட்டு அங்கே மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நியமனம் செய்யாமல் விட்டு விட்டார்கள். அந்த கட்டிடங்களுக்கு வாடகையும் கொடுக்கவில்லை, மருத்துவர்கள் இல்லாத இடத்திற்கு கிளினிக் என்று பெயர் வைத்துவிட்டார்கள். அரசியல் காரணங்களுக்காக அம்மா கிளினிக்கை நாங்கள் மூடினோம் என்றால் அம்மா உணவகங்கள் ஏன் செயல்படுகின்றன? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார் அமைச்சர் தங்கம் தென்னரசு.

நகை கடன்களை நாங்கள் தள்ளுபடி செய்யவில்லை என்று கூறுகிறார், சென்ற ஆட்சிக்காலத்தில் திருவண்ணாமலையில் ஒருவர் 62 பெயர்களில் ஒன்றரை கோடி ரூபாய் நகைக் கடன் வாங்கியிருக்கிறார். அப்படிப்பட்ட தவறுகளை சரி பார்த்து முறைகேடாக கடன் பெற்றவர்களின் பெயரை கண்டறிந்து, அவர்களை நீக்கிவிட்டு சரியான நபர்களுக்கு கடன் தள்ளுபடி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கூறியிருக்கிறார்.

காவல்துறையை பயன்படுத்திக்கொண்டு எவ்வாறெல்லாம் அதிகார துஷ்பிரயோகம் செய்தார்கள் என்பதை கொடநாடு விவகாரம் கண்கூடாக காட்டுகிறது. நீட் தேர்வு விவகாரத்தில் அதிமுகவை போல நாங்கள் இரட்டை வேடம் போடவில்லை, அதில் உளப்பூர்வமாக முதலமைச்சர் உறுதியாக இருக்கிறார். ஆகவே எடப்பாடிபழனிசாமி தெரிவித்த குற்றச்சாட்டுகள் எல்லாம் புறந்தள்ள படவேண்டியவை என்று அவர் தெரிவித்திருக்கிறார்.