தவறுகளை திருத்தி சிறப்பாக பந்துவீசிய துஷார் தேஷ்பாண்டே! ஹைதராபாத் அணியை தோற்கடித்த சென்னை அணி! 

0
152
dushar-deshpande-who-corrected-the-mistakes-and-bowled-well-chennai-team-defeated-hyderabad-team
dushar-deshpande-who-corrected-the-mistakes-and-bowled-well-chennai-team-defeated-hyderabad-team
தவறுகளை திருத்தி சிறப்பாக பந்துவீசிய துஷார் தேஷ்பாண்டே! ஹைதராபாத் அணியை தோற்கடித்த சென்னை அணி!
நேற்று(ஏப்ரல்28) நடைபெற்ற ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில் தன்னுடைய தவறுகளை திருத்தி சிறப்பாக பந்துவீசி துஷார் தேஷ்பாண்டே 4 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றியதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது.
நேற்று(ஏப்ரல்28) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் லீக் ஆட்டத்தில் ருத்துராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதியது. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரஹானே சிற்ப ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். பின்னர் களமிறங்கிய டேரில் மிட்செல் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ருத்துராஜ் கெய்க்வாட் அவர்களுடன் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
தொடர்ந்து அதிரடியாக விளையாடிய டேரில் மிட்செல் 32 பந்துகளில் அரைசதம் அடித்து 57 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். டேரில் மிட்செல்லை அடுத்து களமிறங்கிய ஷிவம் தூபே ருத்ராஜ் கெய்க்வாட்டுடன் இணைந்து சிக்சர்களை அடிக்கத் தொடங்கினார். சதத்தை நோக்கி விளையாடிக் கொண்டிருந்த ருத்துராஜ் கெய்க்வாட் கடைசி நேரத்தில் 98 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தங்கராசு நடராஜன் வீசிய பந்தில் நித்திஷ் ரெட்டியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஷிவம் தூபே 20 பந்துகளில் 39 ரன்கள் சேர்த்தார். இறுதியாக களமிறங்கிய எம்.எஸ் தோனி அவருடைய ஸ்டைலில் ஒரு பவுண்டரியை அடித்தார். இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் சேர்த்தது. புவனேஷ்வர் குமார், தங்கராசு நடராஜன், ஜெயதேவ் உனத்கட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் அசைக்க முடியாத தொடக்க ஆட்டக்காரர்கள் ட்ராவியாஸ் ஹெட்,  அபிசேக் ஷர்மா, அன்மோல்பிரீத் சிங் ஆகியோர்களின் விக்கெட்டுகளை துஷார் தேஷ்பாண்டே அடுத்தடுத்து கைப்பற்றினார். இதையடுத்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தோல்வி தொடங்கியது.
அதன் பின்னர் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஒவ்வொரு பேட்ஸ்மேனும் ரன்களை எடுக்க தடுமாறினர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிறப்பான பந்துவீச்சினால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
இதையடுத்து 18.5 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் அதிகபட்சமாக எய்டன் மார்க்ரம் 32 ரன்களையும், ஹெய்ன்ரிச் கிளாசன் 20 ரன்களையும் சேர்த்தனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சிறப்பாக பந்துவீசிய துஷார் தேஷ்பாண்டே 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மதீஷா பதிரானா, முஸ்டபிசூர் ரஹ்மான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், ஜடேஜா, ஷர்தல் தக்கூர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன் விருது சதத்தை இரண்டு ரன்களில் தவறவிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் அவர்களுக்கு வழங்கப்பட்டது.