மக்களவையில் நிறைவேற்றப்பட்ட முக்கிய சட்ட மசோதா! எதிர்க்கட்சிகள் கடும் அமளி!

0
154

வாக்காளர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருக்கின்ற அவலம் இதுவரையிலும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. அதிலும் குறிப்பாக ஒரு நபர் சொந்த ஊரிலும் தற்போது வசிக்கின்ற ஊரிலும், வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருப்பதை எல்லோராலும் பார்க்க முடிகிறது.

இந்த அவலத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்க மத்திய பாஜக அரசு முடிவு செய்திருக்கிறது. இதன்மூலமாக ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில் ஒருவர் இடம் பெற இயலாது என்ற நிலை தானாகவே ஏற்பட்டு விடும்.

இதற்கான தேர்தல் சீர்திருத்த சட்டம் மசோதா ,வாக்காளர் பதிவு அதிகாரிகள் ஏற்கனவே வாக்காளர்களாக இருப்பவர்களிடமும், புதிதாக வாக்காளர்களாக இணைபவர்களிடமும், ஆதார் எண்ணை கேட்டு பெற வழிவகை செய்யும் இந்த மசோதாவை மக்களவையில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு நேற்று தாக்கல் செய்து இருக்கிறார்.

இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டதாக தெரிகிறது. எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே மசோதா மக்களவையில் குரல் வாக்கெடுப்பின் மூலமாக நிறைவேற்றப்பட்டது. மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு இருக்கிறது.

வழக்கமாக எதிர்க்கட்சிகள் என்றாலே நாடாளுமன்றத்திலும் சரி, சட்டமன்றத்திலும் சரி, ஆளும் கட்சி கொண்டுவரும் எந்தவிதமான தீர்மானத்தையும் எதிர்ப்பதையே தன்னுடைய வேலையாக வைத்திருப்பார்கள்..

இதுதான் எதிர்க்கட்சியை சார்ந்தவர்களின் அரசியல் தந்திரம் என்று தான் சொல்ல வேண்டும். அவர்களுக்கு ஏதாவது ஒரு காரணம் சிக்கிவிட்டால் போதும் அதனை வைத்து ஒரு வருடம் முழுவதும் அரசியல் செய்வதையே தங்களுடைய வேலையாக கொண்டிருப்பதுதான் இன்றைய அரசியல்வாதிகளின் வழக்கம்.

இதேபோன்று பல சட்ட மசோதாக்களை நிறைவேற்ற விடாமல் அமளியில் ஈடுபட்டு இருக்கிறார்கள் எதிர்க்கட்சியைச் சார்ந்தவர்கள். குறிப்பாக சொல்லவேண்டும் என்று சொன்னால் ஆதார் மசோதா, குடியுரிமை திருத்த சட்ட மசோதா, உள்ளிட்ட பல்வேறு முக்கிய சட்ட மசோதாக்களை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதில் மிகப்பெரிய முட்டுக்கட்டையாக இருந்திருக்கிறார்கள் எதிர்க்கட்சியைச் சார்ந்தவர்கள்.

ஆனால் ஆதார் சட்ட மசோதாவை கடுமையாக எதிர்த்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தற்போது அந்த சட்டத்தை ஆதரிக்கும் நிலைக்கு வந்துவிட்டார்கள். இப்படி ஏதாவது ஒரு காரணத்தை வைத்து ஆளும் கட்சியை குறை சொல்ல வேண்டும் என்ற காரணத்திற்காகவே அரசியல் செய்யும் எதிர்க்கட்சிகள் காலப்போக்கில் தாங்கள் எதிர்ப்பு தெரிவித்த சட்டத்தையே தாங்களும் ஆயுதமாக கையில் எடுப்பது காலம் காலமாக நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது.