ஐநா சபையின் சிறப்பு அவசரக் கூட்டத்திலும் ரஷ்யா மற்றும் உக்ரைன் வார்த்தை போர்!

0
69

உக்ரைன் ரஷ்யா இடையே கடந்த 5 நாட்களாக தொடர்ந்து இடைவிடாமல் போர் நடைபெற்று வருவதால் அங்கு பதற்றம் ஏற்பட்டிருக்கிறது உக்ரைனில் இருக்கக்கூடிய மற்ற நாட்டு மக்கள் வெளியேறி வருகிறார்கள். அதேபோல உக்ரைனிலிருக்கும் இந்தியர்களை பாதுகாப்பாக அழைத்து வரும் பணியில் மத்திய அரசு இரவு பகலாக ஈடுபட்டு வருகிறது.

மேலும் உக்ரைனிலிருக்கும் இந்தியர்களின் பாதுகாப்பு தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிரதமர் நரேந்திர மோடி இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு வேண்டுகோள் வைத்தார்.

அதற்கு பதில் தெரிவித்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் உக்ரைனிலிருக்கும் இந்தியர்களின் பாதுகாப்பு நிச்சயமாக உறுதி செய்யப்படும் என்று வாக்களித்தார்.
இந்த நிலையில் ஐநா சபையில் உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போர் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

அதில் ரஷ்யாவிற்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில் இந்தியா, சீனா உட்பட சில நாடுகள் நடுநிலை வகித்தனர். ஆனாலும் ஐநா சபையில் தீர்மானம் கொண்டு வந்தது ஐ நா சபையின் நிரந்தர உறுப்பு நாடான ரஷ்யா அதனுடைய வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி நீர்த்துப் போகச் செய்தது.

இந்த சூழ்நிலையில், ஐநா சபையின் சிறப்பு அவசரக்கூட்டம் நியூயார்க் நகரில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் ரஷ்யா தன்னுடைய வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்திருக்கின்ற சூழ்நிலையில் இந்த பிரச்னை தொடர்பாக விவாதிக்க ஐநா சபையின் சிறப்பு அவசரக் கூட்டம் நடைபெற்றது. இதில் ரஷ்யா மற்றும் உக்ரைனிடையே மோதல் உண்டானதாக தெரிகிறது.

அதிலும் குறிப்பாக இந்த கூட்டத்தில் பேசிய உக்ரைன் தூதர் ரஷ்யா மீது குற்றம் சுமத்தினார் .அப்போது அவர் இந்த பிரச்சனையில் உக்ரைன் தப்பவில்லை என்றால் ஐநாவும் தப்பாது இந்த பிரச்சனையில் ஜனநாயகம் தோல்வியடைந்தாலும் ஆச்சரியப்பட இயலாது என்று குற்றம் சுமத்தினார்.

அவருடைய இந்த பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் உரையாற்றிய ரஷ்ய தூதர் இந்த பிரச்சினைக்கு மூல காரணமே உக்ரைன் தான் என்று குற்றம் சுமத்தினார். மேன்ஸ் ஒப்பந்தத்தின் கீழ் அதன் நேரடி கடமைகளை பல வருட காலமாக தவறி வருவதாகவும் தெரிவித்தார்.

ஆனாலும் ரஷ்யா உக்ரைன் மீது இப்படி போர்தொடுத்ததற்கு காரணமே உக்ரைன் நேட்டோ அமைப்பில் இடம் பெற முயற்சி செய்ததும், அதற்கு அமெரிக்கா இசைவு அளித்ததும் தான் என்று சொல்லப்படுகிறது.

மேலும் உக்ரைன் நேட்டோ அமைப்பில் சேர்ந்துவிட்டால் ரஷ்யாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்ற காரணத்தை முன்வைத்து தான் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உக்ரைன் மீது போர் தொடுத்தார் என்று தன் பக்க நியாயத்தை முன்பே கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.