வாணியம்பாடியில் வியாபாரிகளிடம் அத்துமீறிய நகராட்சி ஆணையரை கண்டிக்கும் கனிமொழி எம்பி

0
117

வாணியம்பாடியில் வியாபாரிகளிடம் அத்துமீறிய நகராட்சி ஆணையரை கண்டிக்கும் கனிமொழி எம்பி

கொரோனா பாதிப்பினால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து அத்தியாவசிய சேவைகள் தவிர்த்து மற்ற தொழில்கள் அனைத்தும் முடங்கியுள்ளது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு தற்போது கடைபிடித்து வரும் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வாணியம்பாடி சந்தையில் விதிகளை மீறி செயல்படுவதாகக் கூறி,வியாபாரிகள் வைத்துள்ள காய்கறி பழங்களை தரையில் தள்ளி அவர்களிடம் அந்த பகுதி நகராட்சி ஆணையர் அத்துமீறி நடந்துள்ளர். இதனையடுத்து வியாபாரிகளிடம் அத்துமீறியுள்ள நகராட்சி ஆணையர் சிசில் தாமசுக்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் விதிமீறல் நடந்திருந்தாலும், அதை சமூக பொறுப்புணர்வுடன் கண்டிப்பதை விட்டுவிட்டு, எளிய வியாபாரிகளுக்கு இழப்பு ஏற்படும் வகையில் அவர்களின் காய்கறி மற்றும் பழங்களை கீழே தள்ளிவிட்டு இரக்கமற்ற முறையில் அவர் செயல்பட்டிருப்பது பொது மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்நிலையில், சிசில் தாமசின் இந்த அத்துமீறிய செயலுக்கு தி.மு.க மகளிர் அணிச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவில் கூறியுள்ளதாவது, வாணியம்பாடி ஆணையரின் இந்த மனிதத்தன்மையற்ற செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஏழை வியாபாரிகள் என்றால் அவ்வளவு இளக்காரமா ? எளியவர்களிடம் மட்டுமே இவர் போன்றவர்களின் அதிகாரக் கரங்கள் அத்துமீறும். எச்சரிக்கை செய்வதை விடுத்து, இப்படி உணவுப் பொருட்களை கொட்டிக் கவிழ்க்க யார் அதிகாரம் தந்தது ? இவர்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.

author avatar
Ammasi Manickam