Thursday, September 19, 2024
Home Blog Page 4901

உச்சநீதிமன்றத்தில் சிவசேனா தாக்கல் செய்த இரண்டு வழக்கு: திருப்பம் ஏற்படுமா?

0

உச்சநீதிமன்றத்தில் சிவசேனா தாக்கல் செய்த இரண்டு வழக்கு: திருப்பம் ஏற்படுமா?

மகாராஷ்டிர மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆட்சியமைக்க அளவிற்கு தனி மெஜாரிட்டி இல்லை என்பதால் கூட்டணி ஆட்சி அமைக்க அம்மாநில அரசியல் கட்சிகள் தீவிர முயற்சி செய்தன

முதல் கட்டமாக பாஜக-சிவசேனா கூட்டணி ஆட்சி அமைப்பதில் முதல்வர் பதவி யாருக்கு என்பதில் இழுபறி ஏற்பட்டது. இதனையடுத்து சிவசேனா கட்சி தேசிய வாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்க முயற்சி செய்தது. ஆனால் இந்த முயற்சி பலிக்கவில்லை

இந்த நிலையில் பாஜக, சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகிய கட்சிகளுக்கு ஆட்சி அமைக்க மாநில ஆளுநர் தனித்தனியாக அழைப்பு விடுத்தார். மூன்று கட்சிகளுக்கும் கொடுத்த காலக்கெடு முடிவடைந்ததை அடுத்து இன்று குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் படுத்தப்பட்டுள்ளது

இந்த நிலையில் மகாராஷ்டிராவில் சிவசேனாவுக்கு அம்மாநில ஆளுநர் கூடுதல் அவகாசம் வழங்க மறுத்தது குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிவசேனா நிர்வாகிகள் தொடர்ந்த இந்த வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நாளை நடைபெறும் என உச்சநீதிமன்ற பதிவாளர் தகவல் தெரிவித்துள்ளார்

இதுமட்டுமன்றி மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டதை எதிர்த்து சிவசேனா மற்றொரு வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கும் நாளை விசாரணைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு வழக்குகளில் சுப்ரீம் கோர்ட் வழங்கும் உத்தரவால் மகாராஷ்டிர மாநிலத்தில் திருப்பம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது

பெரியார் பல்கலைக்கழக பணியாளர்கள் மீதான பழிவாங்கலை கைவிட வேண்டும்! மருத்துவர் ராமதாஸ் கண்டனம்

0

பெரியார் பல்கலைக்கழக பணியாளர்கள் மீதான பழிவாங்கலை கைவிட வேண்டும்! மருத்துவர் ராமதாஸ் கண்டனம்

உரிமைக்காக போராட்டம் நடத்தும் பல்கலைக்கழக பணியாளர்களை பழிவாங்க பெரியார் பல்கலைக்கழகம் துடிப்பது கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஊதிய உயர்வு, பணி நிலைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வரும் தொழிலாளர் சங்க நிர்வாகிகளை பணி நீக்கம் செய்யும் நோக்கத்துடன், அவர்களிடம் விளக்கம் கேட்டு குறிப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. உரிமைக்காக போராட்டம் நடத்தும் பல்கலைக்கழக பணியாளர்களை பழிவாங்க பல்கலைக்கழகம் துடிப்பது கண்டிக்கத்தக்கது ஆகும்.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் தொகுப்பூதிய பணியாளர்கள், தினக்கூலி பணியாளர்கள், ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் ஆகியோரின் ஊதிய உயர்வு, வருங்கால வைப்பு நிதி, தொழிற்சங்க அங்கீகாரம், பல்கலைக்கழகத்திற்கு முழுநேர பதிவாளர் நியமனம் உள்ளிட்ட 15 கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு கட்ட அறவழிப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த கோரிக்கைகள் மிகவும் நியாயமானவையாகும்.

இந்த கோரிக்கைகள் குறித்து பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் குழந்தைவேலு தங்களை அழைத்து பேச வேண்டும் என்று தொழிலாளர் சங்கம் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால், அதன்பின் இன்றுடன் சரியாக 100 நாட்கள் ஆகும் நிலையில், இதுவரை தொழிலாளர்களை அழைத்து பேச்சு நடத்த துணைவேந்தர் முன்வரவில்லை. மாறாக, புதுப்புது வாய்ப்புகளை உருவாக்கி தொழிலாளர்களை பழிதீர்க்க அவர் முயல்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அந்த வரிசையில் இப்போது உங்களை ஏன் பணிநீக்கக்கூடாது? என்று விளக்கம் அளிக்கும்படி 54 தொழிலாளர்களுக்கு பொறுப்பு பதிவாளர் முனைவர் தங்கவேல் மூலமாக துணை வேந்தர் குழந்தைவேல் குறிப்பாணை (மெமோ) அனுப்பியுள்ளார் . இதற்காக குறிப்பிடப்பட்டுள்ள காரணங்கள் மிகவும் அற்பமானவை ஆகும்.

பெரியார் பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த அக்டோபர் 31-ஆம் தேதி தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்த போது 54 தொழிலாளர்களும் சற்று தொலைவில் அமர்ந்திருந்தனர் என்பது தான் குறிப்பாணையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு ஆகும். இதன் மூலம் உறுதியேற்பு விழாவை அவர்கள் அவமதித்து விட்டதாகக் குற்றஞ்சாட்டி, பணி நீக்கம் செய்வது தான் பல்கலைக்கழக நிர்வாகத்தின் நோக்கம் ஆகும். குறிப்பாணையில் கூறப்பட்டுள்ளவாறு எந்தவித அவமதிப்பிலும் ஈடுபடவில்லை என்று தொழிலாளர்கள் கூறிய போதிலும், அடித்தட்டு வகுப்பைச் சேர்ந்த அவர்களை துணைவேந்தர் பழிவாங்கத் துடிப்பது எத்தகைய மனநிலை என்று தெரியவில்லை.

பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் குழந்தைவேலு சிறந்த கல்வியாளர்; ஊழல் கறை படியாதவர்; எந்த வகையான சர்ச்சைகளிலும் சிக்காதவர். அப்படிப்பட்டவர் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு வரும் போது விருப்பு வெறுப்பின்றி செயல்பட வேண்டும். மனதில் பழிவாங்கும் உணர்வை தேக்கி வைத்துக் கொண்டு, எத்தனை நல்ல குணங்களை வைத்திருந்தாலும் யாருக்கும் எந்த பயனும் இல்லை. தொழிலாளர்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் அனைத்தும் அவர்களின் வாழ்வாதாரம் சம்பந்தப்பட்டவை ஆகும். உதாரணம் காட்ட வேண்டுமானால், தொகுப்பூதிய பணியாளர்களுக்கு கடந்த ஓராண்டாக மாதத்திற்கு 22 நாட்கள் மட்டும் தான் ஊதியம் வழங்கப்படுகிறது; இதை மாற்றி ஏற்கனவே இருந்ததைப் போல 30 நாட்களுக்கு ஊதியம் வழங்கும்படி கோருகிறார்கள். இது மிகவும் நியாயமானது. இந்த கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு பதிலாக, கோரிக்கையை முன்வைத்துப் போராடுபவர்கள் மீது அபாண்டமான பழிகளை சுமத்தி பணிநீக்கம் செய்வது எந்தவகையிலும் அறமல்ல.

எனவே, 54 தொழிலாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள குறிப்பாணைகளை பெரியார் பல்கலைக்கழகம் திரும்பப் பெற வேண்டும். தொழிலாளர்கள் மீதான பழிவாங்கும் போக்கை கைவிட்டு, பணியாளர்களை அழைத்துப் பேசி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற பெரியார் பல்கலைக்கழகம் முன்வர வேண்டும் என்றும் அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி: ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்

0

மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி: ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்

மகாராஷ்டிரா மாநிலத்தில் மத்திய அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். இதனையடுத்து அங்கு குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படுகிறது

மகாராஷ்டிரா மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் அளவுக்கு எம்.எல்.ஏக்களை பெற்றிருந்தும், சிவசேனா கட்சியின் பேராசையால் அந்த கூட்டணி ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டது

சிவசேனா தனித்து ஆட்சி அமைக்க எடுத்த முயற்சியும் தோல்வியில் முடிந்ததால் தற்போது யாருக்கும் இன்றி அம்மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது

மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற சட்டப் பேரவை தேர்தலில் பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களிலும், காங்கிரஸ் 44 இடங்களிலும் வெற்றி பெற்றன. பெரும்பான்மைக்கு தேவையான 145 இடங்கள் எந்தக் கட்சியிடமும் இல்லை என்றாலும் பாஜக-சிவசேனா கூட்டணி அமைந்திருக்கலாம். ஆனால் சிவசேனாவின் பேராசை மற்றும் பிடிவாதம் இன்று குடியரசு தலைவர் என்ற நிலையை கொண்டு வந்துள்ளது

மகாராஷ்டிராவில் திடீர் திருப்பம்: அரசியல் கட்சிகள் அதிர்ச்சி

0

மகாராஷ்டிராவில் திடீர் திருப்பம்: அரசியல் கட்சிகள் அதிர்ச்சி

மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில் இன்னும் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாத சூழல் நிலவுவதால் அம்மாநிலத்தின் ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு பரிந்துரை செய்துள்ளதால் சிவசேனா உள்ளிட்டஅரசியல் கட்சிகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.

இன்று மதியம் மகாராஷ்டிர ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது: அரசியலமைப்புக்கு உட்பட்டு மாநிலத்தில் ஆட்சி அமைக்க முடியாது என்பதால், அரசியலமைப்பு சட்டப்பிரிவு 356வது பிரிவின் சரத்துகளை அடிப்படையாகக் கொண்டு குடியரசுத் தலைவருக்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளார்

தனிப்பெரும் கட்சியான பாஜக, இரண்டாவது இடத்தை பெற்ற சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளுக்கும் தனித்தனியே ஆட்சி அமைக்க ஆளுனர் அழைப்பு விடுத்தார். ஆட்சி அமைக்க தங்களுக்கு விருப்பம் இல்லை என்று பாஜக தெரிவித்துவிட்ட நிலையில் தங்களுக்கு பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதைக் காட்ட ஆளுநர் தங்களுக்கு வழங்கிய காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று சிவசேனா கோரிக்கை விடுத்தது. ஆனால் ஆளுனர் அவகாசம் கொடுக்க மறுத்துவிட்டார். அதேபோல் இன்று இரவுடன் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்ட காலக்கெடுவும் முடிவடைகிறது

இதனையடுத்தே மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த ஆளுனர் பரிந்துரை செய்துள்ளார். மேலும் மத்திய அமைச்சரவையும் மகாராஷ்டிராவில் குடியரசு தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை செய்து கடிதம் கொடுத்துள்ளது. இந்த கடிதத்தை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

செல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: தமிழக அமைச்சர்

0

செல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: தமிழக அமைச்சர்

செல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும் போல் உள்ளதாக தமிழக அமைச்சர் பாஸ்கரன் ஆவேசமாக பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

இன்று சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக கதர்த்துறை அமைச்சர் பாஸ்கரன் கலந்துகொண்டு மடிக்கணினிகளை வழங்கினார். அதன்பின்னர் அவர் பேசியதாவது:

செல்போன்களால் தான் பல இளைஞர்கள் தவறான பாதைக்கு செல்வதாகவும், செல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும் போல் உள்ளதாகவும், மாணவர்கள் மடிக்கணினியை சரியான தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்

மேலும் செல்போன் நல்ல நோக்கத்திற்காக கண்டுபிடிக்கப்பட்டாலும், அவற்றை பல இளைஞர்கள் தவறாக பயன்படுத்தி வருவதாகவும் செல்போனால்தான் மாணவர்களிடையே படிப்பில் ஆர்வம் குறைந்து வருவதாகவும் அமைச்சர் பாஸ்கரன் ஆதங்கத்துடன் கூறினார்

அமைச்சரின் இந்த பேச்சு ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

சூப்பர் ஹிட் படத்தின் ரீமேக்கில் நடிக்கும் சந்தானம்!

0

சூப்பர் ஹிட் படத்தின் ரீமேக்கில் நடிக்கும் சந்தானம்

இந்த ஆண்டு நடிகர் சந்தானம் ஹீரோவாக நடித்த ‘தில்லுக்கு துட்டு’ மற்றும் ஏ1’ ஆகிய இரண்டு படங்களும் வெற்றி பெற்றதை அடுத்து அவருடைய படங்கள் வரிசையாக ரிலீசுக்கு தயாராகி வருகின்றன

ஏற்கனவே டகால்டி, சர்வர் சுந்தரம், ஓடி ஓடி உழைக்கணும் ஆகிய படங்களில் நடித்து முடித்துவிட்ட நடிகர் சந்தானம் தற்போது கார்த்திக் யோகி இயக்கி வரும் ஒரு படத்தில் மூன்று வேடங்களிலும் நடித்து வருகிறார். அதேபோல் பிரபல இயக்குனர் கண்ணன் இயக்கி வரும் டைட்டில் வைக்கப்படாத ஒரு படத்தில் சந்தானம் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்புகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால் இந்த ஆண்டுக்குள் இந்த இரண்டு படங்களும் ரிலீஸுக்கு தயாராகி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் தெலுங்கில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ‘ஏஜண்ட் சாய் ஸ்ரீனிவாஸ் ஆதரய்யா’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் சந்தானம் நடிக்கவிருப்பதாகவும், காமெடி கலந்த சஸ்பென்ஸ் த்ரில் படமான இந்த படம் சந்தானத்திற்கு பொருத்தமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

மகாராஷ்டிராவில் அரசியல் நிலை: அமித்ஷாவின் சாணக்கியத்தனம்

0

மகாராஷ்டிராவில் அரசியல் நிலை: அமித்ஷாவின் சாணக்கியத்தனம்

மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைக்க வருமாறு கவர்னர் அழைத்தபோது அக்கட்சி அமைக்க முன்வரவில்லை என்பது தெரிந்ததே. சிவசேனா ஆதரவு அளித்தால் மட்டுமே ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலையில், சிவசேனா தொடர்ந்து முதல்வர் பதவியை கேட்டு பிடிவாதம் செய்ததால் பாஜக பின்வாங்கியது

இதனையடுத்து சிவசேனாவை ஆட்சியமைக்க அழைத்த ஆளுநர், அக்கட்சிக்கு 2 நாள் கெடு விதித்தார். இந்த இரண்டு நாட்களில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஆதரவு கடிதங்களை அக்கட்சியால் பெற முடியவில்லை. எனவே சிவசேனாவுக்கு அளித்த வாய்ப்பும் வீணானது

தற்போது தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுத்து ஒரு நாள் கெடு விதித்துள்ளார் ஆளுநர். தேசியவாத காங்கிரஸ் கட்சியும் காங்கிரஸ் கட்சியும் இணைந்து ஆட்சி அமைக்க வாய்ப்பு இல்லை. ஒருவேளை சிவசேனா இந்த கூட்டணி சேர்ந்தாலும் சிவசேனா வெளியிலிருந்து ஆதரவு கொடுக்கும் அல்லது அமைச்சர் பதவிகளை மட்டுமே பெற்றுக் கொண்டு ஆதரவு தரவேண்டிய நிலை இருக்கும். சிவசேனாவுக்கு முதல்வர் பதவி கிடைக்க வாய்ப்பில்லை என்பதால் அக்கட்சி இந்த கூட்டணிக்கு ஆதரவு கொடுக்குமா என்பது சந்தேகமே

இங்குதான் அமித்ஷாவின் அரசியல் சாணக்கியத்தனம் ஆரம்பமாகிறது. தேசியவாத காங்கிரஸ் கட்சியும் ஆட்சி அமைக்க முடியாத பட்சத்தில் மீண்டும் ஆட்சி அமைக்க பாஜக வுக்கு ஒரு வாய்ப்பை கவர்னர் அளிப்பார் அல்லது குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் படுத்தப்படும் என்ற இரண்டை நிலைதான் உள்ளது. மீண்டும் பாஜகவுக்கு ஆளுனர் வாய்ப்பு கொடுத்தால் 25 ஆண்டுகால நட்பு கட்சி என்றும் பார்க்காமல் சிவசேனாவை உடைப்பதுதான் அமித்ஷாவின் கணக்கு என கூறப்படுகிறது. ஆனால் உடைக்க வேண்டிய அவசியமே இருக்காது என்றும், பாஜக ஆட்சி அமைக்க சிவசேனா எம்.எல்.ஏக்களே பாஜகவிடம் வலிய வருவார்கள் என்றும் கூறப்படுகிறது

அதுமட்டுமின்றி இம்முறை ஆட்சி அமைக்க முடியாமல் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டால் சிவசேனாவின் இமேஜ் டேமேஜ் ஆகும் என்பதில் சந்தேகம் இல்லை. அக்கட்சிக்கு இருக்கும் செல்வாக்கு பெருமளவு சரியும் என்றும், மீண்டும் தேர்தல் நடந்து தனித்து போட்டியிட்டால் இப்போது கிடைத்திருக்கும் தொகுதிகளில் பாதிகூட கிடைக்காது என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்

பாஜக, சிவசேனா கட்சிகளுக்கு கெடு முடிந்தது: ஆளுனர் எடுத்த அதிரடி நடவடிக்கை!

0

பாஜக, சிவசேனா கட்சிகளுக்கு கெடு முடிந்தது: ஆளுனர் எடுத்த அதிரடி நடவடிக்கை!

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஒரு மாதமாக எந்த கட்சியும் ஆட்சி அமைக்காமல் இழுபறி நிலை நீடித்து வரும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆட்சி அமைக்க வருமாறு பாஜகவிற்கு அம்மாநில ஆளுநர் அழைப்பு விடுத்தார். தனிப்பெரும் கட்சி என்ற முறையில் பாஜகவிற்கு அவர் அழைப்பு விடுத்த போதிலும், ஆளுனர் அழைப்பை ஏற்று ஆட்சி அமைக்க பாஜக முன்வரவில்லை

இதனை அடுத்து சிவசேனா கட்சிக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார். சிவசேனா ஆட்சி அமைக்க முன் வந்தாலும் அந்தக் கட்சியால் தனது கட்சியின் ஆதரவு எம்எல்ஏக்கள் பட்டியல் மற்றும் தங்களுக்கு ஆதரவு தரும் கட்சிகளின் ஆதரவு கடிதங்கள் ஆகியவற்றை ஆளுனர் கொடுத்த காலக்கெடுவுக்குள் சமர்ப்பிக்க முடியவில்லை. இதனையடுத்து நேற்று சிவசேனா தலைவர்கள் ஆளுநரை சந்தித்து மேலும் 48 மணி நேரம் கால அவகாசம் கேட்டனர். இந்த கால அவகாசத்தை கொடுக்க ஆளுநர் மறுத்ததை அடுத்து சிவசேனாவுக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பும் முடிந்தது

இந்த நிலையில் பாஜக, சிவசேனா ஆகிய இரண்டு கட்சிகளும் ஆட்சி அமைக்காததை அடுத்து மூன்றாவதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். இக்கட்சிக்கு இன்று இரவு 8.30 மணி வரை மட்டுமே ஆளுநர் கெடு கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தேசியவாத காங்கிரஸ் கட்சி குறிப்பிட்ட கெடுவிற்குள் ஆட்சி அமைக்க முன் வருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் தனது வாய்ப்பை இழந்தால் அடுத்ததாக குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது

மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது ஏன் என்ப​து குறித்து ஆளுநர் மாளிகை அளித்த விளக்கத்தில் கூறியிருப்பதாவது: சிவசேனா தரப்பில் ஆட்சி அமைக்க விருப்பம் தெரிவிக்கப்பட்டதாகவும் ஆனால் கூட்டணி கட்சியினரின் ஆதரவு கடிதங்கள் தரப்படவில்லை.

எனவே அதிக இடங்களில் வெற்றி பெற்ற 3-வது பெரிய கட்சி என்ற அடிப்படையில் தேசியவாத காங்கிரசுக்கு, ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது’ என கூறப்பட்டுள்ளது.

டாக்டர் மன்மோகன் சிங்குக்கு நிதித்துறை சார்ந்த முக்கிய பதவி! காங்கிரஸ் நிலைப்பாடு என்ன?

0

டாக்டர் மன்மோகன் சிங்குக்கு நிதித்துறை சார்ந்த முக்கிய பதவி! காங்கிரஸ் நிலைப்பாடு என்ன?

மத்திய அரசின் கீழ் செயல்படும் அனைத்து துறை அமைச்சங்களுக்கும் வழிகாட்டவும் கொள்கை ரீதியான செயல்பாடுகள் குறித்து விவாதித்து ஆலோசனை வழங்கவும் நாடாளுமன்ற நிலைக் குழுக்கள் இருந்து வருகின்றன.

இக்குழுவில் கட்சி பாகுபாடின்றி நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களை துணை குடியரசுத் தலைவரும் மாநிலங்களவை சபாநாயகருமாகிய இருப்பவர் நியமனம் செய்வது வழக்கத்தில் இருந்து வருகிறது,.

அந்த வகையில் நிதித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவில் முன்னாள் பிரதமரும், முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநரும் காங்கிரஸ் மூத்த தலைவருமாகிய டாக்டர்.மன்மோகன் சிங் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார், அவருடன் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங் அவர்கள் நகர்ப்புற மேம்பாட்டு துறைக்கான நிலைக்குழுவின் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று நாடாளுமன்ற அமைச்சகம் அறிவித்துள்ளது. அவருடைய அனுபவமும் ஆற்றலும் நிதித்துறைக்கு மீண்டும் கிடைத்தது மகிழ்ச்சி தான் என்று காங்கிரஸ் கட்சி இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளது.

சுஜித் தாயாருக்கு அரசு வேலை: திருச்சி கலெக்டர் அறிவிப்பு

0

சுஜித் தாயாருக்கு அரசு வேலை: திருச்சி கலெக்டர் அறிவிப்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டி என்ற கிராமத்தில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சுஜித்தின் பெற்றோரை சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். சுஜித் வீட்டில் வைக்கப்பட்ட்டிருந்த சுஜித்தின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய முதல்வர், சுஜித் பெற்றோருக்கு அதிமுக சார்பில் ரூ.10 லட்சமும், அரசு சார்பில் ரூ.10 லட்சமும், சுஜித்தின் குடும்பத்தினர் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்ட 10 லட்ச ரூபாய் காசோலையை, அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், சுஜித் பெற்றோரிடம் இன்று வழங்கினார். மேலும் சுஜித்தின் தாய் கலாராணி பிளஸ் 2 படித்துள்ளதால் அவரது தகுதிக்கு ஏற்ப அரசு பணி கிடைப்பதற்கு விரைவில் ஏற்பாடு செய்யப்படும் என்று அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்தார்.

இதனையடுத்து பேசிய திருச்சி கலெக்டர் சிவராசு , சுஜித்தின் தாய் கலாராணிக்கு, அரசு பணி கிடைப்பதற்கு விரைவில் ஏற்பாடு செய்யப்படும் என்றார். அனேகமாக இன்னும் ஒரிரு நாட்களில் சுஜித்தின் தாய் கலாராணிக்கு அரசு வேலை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது

ஏற்கனவே சுஜித்தின் குடும்பத்திற்கு திமுக சார்ப்பில் ரூ.10 லட்சம் வழங்கப்படும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது