மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்படும் உபரி நீரின் அளவு அதிகரிப்பு!

0
61

கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் பரவலாக மழை பெய்து வருவதன் காரணமாக, அங்கே இருக்கக்கூடிய கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு இருக்கிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று வினாடிக்கு 25 ஆயிரத்து 400 கன அடி வீதம் வந்துகொண்டிருந்தது, இதனை தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் அதே அளவு நீர்வரத்து வந்து கொண்டு இருக்கின்றது.

இதன் காரணமாக, அணையில் இருந்து நீர் மின் நிலையங்கள் மூலமாக காவிரியில் 22 ஆயிரம் கன அடி தண்ணீரும் கிழக்கு, மேற்கு கால்வாயில் 400 கன அடி தண்ணீரும், 16 கண் மதகுகள் பாலம் மூலமாக 3 ஆயிரம் கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டு இருக்கின்றன.

அணை முழு கொள்ளளவான 120 அடியை கடந்த மாதம் 13ஆம் தேதி எட்டியது இதனை தொடர்ந்து மறுநாள் முதல் அணைக்கு வரும் நீர் அப்படியே காவிரி மற்றும் கால்வாயில் வெளியேற்றப்பட்டது.

இந்த நிலையில், அணைக்கு வரும் நீரும், அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரும், சமமாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் கடந்த 24 நாட்களாக 120 அடியாகவே நீடித்து வருகிறது. இதன் காரணமாக, மேட்டூர் அணை தொடர்ந்து கடல் போல காட்சி தருகிறது. நீர்வரத்து அதிகரித்து இருப்பதால் அணைக்கு வரும் தண்ணீரை 24 மணி நேரமும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.