சண்முகநாதன் மறைவு! கோபாலபுரத்து தூணை இழந்து விட்டேன் முதலமைச்சர் ஸ்டாலின் உருக்கம்!

0
105

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நிழலாக இருந்தவர் சண்முகநாதன் அவர் அரசியலில் காலடி எடுத்து வைத்து திமுகவின் தலைமை பொறுப்புக்கு வந்த காலத்திலிருந்து அவர் இறுதி மூச்சு வரையில் கருணாநிதியின் அருகிலேயே அவர் நிழல்போல இருந்து வந்தவர் சண்முகநாதன்.

இந்தநிலையில், அவர் வயது மூப்பு காரணமாக, சில வாரங்களுக்கு முன்னர் சென்னையில் இருக்கின்ற காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது இது தொடர்பான விவரம் அறிந்த திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவரை மருத்துவமனையில் சென்று சந்தித்து வந்தார்.

இந்தநிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் உயிரிழந்தார் 80 வயதை அடைந்த இவர் உடல் நலக் குறைவு காரணமாக, சென்னை காவேரி மருத்துவமனையில் காலமானார். சென்னை தேனாம்பேட்டையில் இருக்கும் அவருடைய இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த சண்முகநாதன் உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று கண்ணீர் விட்டு அஞ்சலி செலுத்தி இருக்கிறார்.

இந்தநிலையில், சண்முகநாதன் மறைவு தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டு இருக்கின்ற அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, சண்முகநாதன் மறைவு செய்தி எனக்கு தீராத மனத் துயரத்தை உண்டாக்கி விட்டது. நேற்று நான் அவரை காவிரி மருத்துவமனையில் நேரில் சென்று சந்தித்த சமயத்தில் அடிக்கடி என்னை எதற்காக வந்து சந்திக்கிறார்? நீ உன்னுடைய பணிகளை கவனி என்று உரிமையுடன் தெரிவித்தார். அத்தகைய அன்பு உள்ளத்தை இவ்வளவு சீக்கிரமாக இழப்போம் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை என கூறியிருக்கிறார்.

அவருடைய திருமணத்திற்காக பெண் பார்க்க சென்ற சமயத்தில் மாப்பிள்ளைத் தோழனாக மணமேடையில் இருந்தது, என அவருடன் நெருக்கமாக பழகி இருக்கின்றேன். இன்று அவரை இந்த கோலத்தில் பார்க்கும் சூழல் ஏற்பட்டுவிட்டது என்று வருத்தத்துடன் தெரிவித்திருக்கிறார் முதலமைச்சர்.

அண்ணன் என்ற உறவையும் கடந்து அவரை என்னுடைய உயிராகத்தான் நான் கருதுகிறேன். எப்போது எந்தக் கூட்டத்தில் நான் பேசினாலும் பேசி முடிந்தவுடன் அவருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு நேரில் பார்த்தீர்களா என்று அவருடைய கருத்தை கேட்பேன். அவரும் பாராட்டுவார் திருத்தம் சொல்வார், உற்சாகப்படுத்துவார், தன்னுடைய உணர்ச்சியை வெளிப்படுத்துவார், எல்லாவற்றிலும் அவருடைய அன்பும், என் மீதான பாசமும், கருணாநிதி மீதான மரியாதையும் தான் பொங்கி வரும் என கூறியிருக்கிறார்.

உதவியாளர் செயலாளர் என்பதை எல்லாம் கடந்து கருணாநிதியின் நிழலாக இருந்தவர் அண்ணன் சண்முகநாதன். கருணாநிதிக்கு மற்றொரு கையாக இருந்தவர் சுமார் 50 வருட காலம் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியுடன் பயணம் செய்தவர், அதிகாலை தொடங்கி நள்ளிரவு வரையில் கோபாலபுரம் வீட்டிலேயே இருப்பார் என கூறியிருக்கிறார்.

கோபாலபுரம் வீட்டிற்குள் நுழைந்தவுடன் வலது புறம் அவரின் அறை இருக்கும், அங்கு இருக்கின்ற கணினி முன் அமர்ந்து எப்போதும் வேலை செய்து கொண்டே இருப்பார், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை பார்க்க நிர்வாகிகள் வந்தாலும் நானும் அவரும் அந்த அறையில் தான் இருப்போம். கருணாநிதியை பிரிந்து அவரால் இருக்க இயலாது அவரை பிரிந்து கருணாநிதியாலும், இருக்க முடியாது என்பது தான் உண்மை.

கருணாநிதி மறைந்த பிறகும் அவர் இருந்த காலத்தில் கோபாலபுரம் வீட்டிற்கு எப்படி வருவாரோ அதே போல வந்து எழுதுவது, அச்சிடுவது மெய்ப்பு திருத்தம் செய்வது என்று இருப்பார் கருணாநிதி உடன்பிறப்புகளுக்கு எழுதிய அனைத்து கடிதங்களையும் பல்வேறு தொகுதிகளாக தொகுத்து வெளியிடும் அரிய பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அவை எல்லாம் அச்சில் இருக்கும் சூழ்நிலையில், அவர் மறைந்தது அதிர்ச்சி அடைய வைக்கிறது.

கருணாநிதி வரலாற்றின் அனைத்து பக்கங்களையும் எழுதும் தகவல் களஞ்சியம் சண்முகநாதன், அரைநூற்றாண்டு கால தமிழக அரசியலை முழுமையாக அறிந்த வரலாற்று புத்தகம் அவர் எல்லாவற்றிற்கும் மேலாக எங்களது கோபாலபுர குடும்பத்தின் ஒரு முக்கியமான தூண் சரிந்துவிட்டது.

எங்கள் குடும்பத்தில் அனைவரும் அவரை குட்டி பிஏ என்றுதான் அழைப்போம். இருப்பதிலேயே அவர்தான் வயதால் இளைஞர் என்ற காரணத்தால், அப்படி அழைப்போம். இன்று எங்கள் அனைவருக்கும் மூத்த அண்ணன் என்ற நிலையில் இருந்தார். தனிப்பட்ட முறையில் எனக்கு ஏற்பட்ட மாபெரும் இழப்பு அவருடைய மரணம் என்று குறிப்பிட்டிருக்கிறார் முதலமைச்சர்.

இந்த பிறவி தலைவருக்கானது என வாழ்ந்த பாச சகோதரரை இழந்திருக்கிறோம். அவர் இன்றி நான் இல்லை என்று வாழ்ந்த அன்பு மனிதரை இழந்திருக்கிறோம். தன் குடும்பம் மறந்து எங்கள் குடும்பத்திற்காக உழைத்த தியாகியை இழந்திருக்கிறோம் .

யாருக்கு நான் ஆறுதல் சொல்வது? என்னை நானே ஆறுதல் சொல்லி ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அண்ணன் சண்முகநாதன் குடும்பத்தினர் அனைவருக்கும் அந்த குடும்பத்தின் சகோதரனாக என்னுடைய இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன், நாடுமுழுவதும் அவரை அறிந்தவர்கள் தொகை அதிகம்.

அவர் மீது பாசம் கொண்டவர் எண்ணிக்கை அதிகம் அவர்கள் எல்லோருக்கும் என்னுடைய இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றேன். உழைப்பு, உண்மை, விசுவாசம், அர்ப்பணிப்பு உள்ளிட்ட நான்கின் அடையாளமாக அண்ணன் சண்முகநாதன் நீடுவாழ்வார் என்று கூறியிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.