தலைநகர் சென்னையில் தொடங்கப்பட்ட ஒமைக்ரான் மரபணு பகுப்பாய்வு!

0
80

தமிழ்நாட்டில் நோய்தொற்று திடீரென்று அதிகரிக்க ஆரம்பித்திருக்கிறது. இந்த சூழ்நிலையில், தமிழ்நாட்டில் புதிய வகை நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இந்த நோய் தொற்று அறிகுறிகள் இருப்பவர்களின் எண்ணிக்கையும், அதிகரித்தவாறு உள்ளது. தமிழ்நாடு முழுவதும் அனைத்து மருத்துவமனைகள், மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் புதிய வகை நோய் தொற்று சிகிச்சைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருக்கின்றன.

இந்த சூழ்நிலையில், புதிய வகை நோய் தொற்று பாதிப்பு இருக்கிறதா என்பதை உறுதி செய்வதற்காக தமிழகத்தில் அறிகுறி இருப்பவர்களின் மாதிரிகள் புனே மற்றும் ஐதராபாத்தில் இருக்கின்ற மரபணு ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு வந்தது. இதன்காரணமாக, பரிசோதனை முடிவுகள் வருவதில் தாமதம் ஏற்பட்டது. நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு மரபணு பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்ட நோயாளிகளின் மாதிரி முடிவு வருவதற்குள் அந்த நோயாளி குணமடைந்து வீடு திரும்பும் நிலை தமிழகத்தில் இருந்து வந்தது.

இவ்வாறான நிலையில், ஆல்பா டெல்டா வகை நோய்த்தொற்றை கண்டறியும் விதத்தில் சென்னை தேனாம்பேட்டையில் இருக்கின்ற மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கத்தில் நான்காயிரம் கோடி மதிப்பீட்டில் அதிநவீன மரபணு பரிசோதனை மையத்தை முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆரம்பித்து வைத்தார். புதிய வகை நோய் தொற்றை கண்டறியும் விதத்தில் நிறுவப்பட்டிருக்கும் இந்த மையத்தில் ஒமைக்ரான் மரபணு பகுப்பாய்வு மேற்கொள்வதற்கு அனுமதி வழங்க கோரி தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் மற்றும் உயர் அதிகாரிகள் தொடர்ந்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், சென்னையில் இருக்கின்ற மரபணு பரிசோதனை மையத்தில் புதிய வகை நோய் பற்றிய பகுப்பாய்வு மேற்கொள்வதற்கு மத்திய அரசு நேற்று முன்தினம் அனுமதி வழங்கியது. இதனை தொடர்ந்து சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் இருக்கின்ற மரபணு ஆய்வு மையத்தில் நேற்று புதிய வகை நோய் பரிசோதனை ஆரம்பமானது.

இந்த ஆய்வகத்தில் ஒரே சமயத்தில் 150 மாதிரிகள் ஒமைக்ரான் பகுப்பாய்வு மேற்கொள்ளும் அளவுக்கு அதிநவீன எந்திரங்கள் இருக்கிறது. இந்த பகுப்பாய்வின் முடிவுகள் 5 முதல் 7 நாட்களில் தெரியவரும் என்றும், மேலும் நோய் தொற்று வரவிருக்கின்ற நோயாளிகளின் சிகிச்சை முடிவதற்குள் இந்த புதிய வகை நோய்த்தொற்றின் பகுப்பாய்வு முடிவுகளை தெரிவித்து விடலாம் என்றும் ஆய்வகப் பணியாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.