ஓணம் பண்டிகை பம்பர் பரிசு லாட்டரி சீட்டு… கடந்த ஆண்டை விட விற்பனை அதிகம் என்று தகவல்!!

0
48

 

ஓணம் பண்டிகை பம்பர் பரிசு லாட்டரி சீட்டு… கடந்த ஆண்டை விட விற்பனை அதிகம் என்று தகவல்…

 

 

ஓணம் பண்டிகையை முன்னிட்டு முதல் பரிசாக 25 கோடி ரூபாய் உள்ள லாட்டரி சீட்டுகள் விற்பனை சிறப்பாக நடந்து வருவதாகவும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு லாட்டரி சீட்டுகளின் விற்பனை அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.

 

கேரளம் மாநிலத்தில் ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதை முன்னிட்டு கேரள மாநில லாட்டரி துறையின் சார்பில் லாட்டரி சீட்டுகள் விற்பனை சிறப்பாக நடந்து வருகின்றது.

 

கேரளம் மாநிலத்தில் முக்கிய பண்டிகை நாட்களில் அதிக பரிசுத் தொகையுடன் கூடிய லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் கேரளம் மாநிலத்தில் வெகு விமர்சியாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றான திருவோணம் பண்டிகைக்கான பம்பர் குலுக்கல் லாட்டரி சீட்டு விற்பனை கடந்த ஜூலை மாதம் 27ம் தேதி கேரளா மாநிலத்தில் தொடங்கியது.

 

25 கோடி ரூபாய் என்ற முதல் பரிசாக கொண்ட இந்த லாட்டரி சீட்டின் விலை 500 ரூபாய் ஆகும். இந்த சீட்டுக்கான குலுக்கல் அடுத்த மாதம் அதாவது செப்டம்பர் மாதம் 20ம் தேதி நடக்கின்றது. நாட்டிலேயே இந்த பரிசு தொகைதான் அதிகபட்ச பரிசுத் தொகை என்று கூறப்படுகின்றது.

 

பம்பர் குலுக்கல் லாட்டரி சீட்டு விற்பனை தொடங்கியதில் இருந்து கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி வரை 20 லட்சத்து 50 ஆயிரம் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த பம்பர் லாட்டரி சீட்டு விற்பனையில் பாலக்காடு மாவட்டம் முதலிடத்திலும், திருவனந்தபுரம் மாவட்டம் இரண்டாவது இடத்திலும், திருச்சூர் மாவட்டம் மூன்றாவது இடத்திலும், எர்ணாகுளம், கோட்டயம் ஆகிய மாவட்டங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளது.

 

கடந்த ஆண்டு அதாவது 2022ம் ஆண்டு இதே காலத்தில் 12 லட்சத்து 83 ஆயிரம் லாட்டரி சீட்டுகள் தான் விற்பனை ஆகி இருந்தது. இது பற்றி லாட்டரி சீட்டுத் துறை அதிகாரி ஒருவர் “இதுவரை 30 லட்சம் லாட்டரி சீட்டுகள் அச்சடிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 90 லட்சம் லாட்டரி சீட்டுகள் அச்சடிக்க அனுமதி தரப்பட்டுள்ளது. முதல் பரிசான 25 கோடியை பெறுபவருக்கு 30 சதவீதம் வருமான வரி பிடித்த பிறகு 17.5 கோடி ரூபாய் அளிக்கப்படும்” என்று கூறினார்.