ஆப்ரேஷன் கந்துவட்டி தமிழகம் முழுவதும் அதிரடி! காவல் துறையினருக்கு பறந்த உத்தரவு!

0
122

மாநிலம் முழுவதும் கந்துவட்டிக் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் ஆபரேஷன் கந்துவட்டி என்ற பெயரில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று காவல்துறை ஆணையாளர்களுக்கும் மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கு காவல் துறை இயக்குனர் சைலேந்திரபாபு உத்தரவிட்டிருக்கிறார்.

கந்து வட்டி கொடுமை குறித்து புகார்களை விசாரிப்பதற்காக காவல்துறையில் கந்துவட்டி தடுப்பு பிரிவு என்று தனிப்பிரிவு இருந்து வருகிறது, ஆனாலும் கந்து வட்டி குறித்த குற்றங்கள் ஆங்காங்கே நிகழ்ந்து வருகின்றன.

இந்த சூழ்நிலையில், கடலூர் மாவட்டத்தைச் சார்ந்த ஆயுதப்படை காவலர் செல்வகுமார் கந்துவட்டி குறித்த பிரச்சினைகள் தொடர்பாக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் மிகப் பெரிய பரபரப்பை உண்டாக்கியது.

இனிமேலும் இது போன்ற அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்கும் விதத்தில் கந்துவட்டிக்கு இது ஆப்பரேஷன் கந்து வட்டி என்ற பெயரில் சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு உத்தரவிட்டிருக்கிறார்.

இதுகுறித்து அனைத்து காவல் ஆணையாளர்கள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு அனுப்பியிருக்கின்ற சுற்றறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

கந்து வட்டி கொடுமையை தடுப்பதற்கு அனைத்து காவல் ஆணையாளர்கள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டோர் அதிக வட்டி வசூல் தடைச் சட்டம் 2003ன் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.

அனைத்து காவல் நிலையங்களிலும் நிலுவையிலுள்ள கந்துவட்டி புகார்கள் மற்றும் வழக்குகள் மீது சரியான விசாரணை நடத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கந்துவட்டி கும்பலை சேர்ந்தவர்கள் பொதுமக்களிடம் வசூலித்த வட்டித் தொகை எவ்வளவு என்பது தொடர்பாக முறையாக விசாரிக்க வேண்டும் இது குறித்து போதுமான சட்ட ஆலோசனை பெற்று வழக்குப் பதிவு செய்ய வேண்டும். கந்துவட்டிக்கு விடுபவர்கள் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தி அவர்கள் வைத்திருக்கும் கந்துவட்டி குறித்தான ஆவணங்களை கைப்பற்ற வேண்டும் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

கையெழுத்துப் போடப்பட்ட வெற்று பேப்பர்கள் கையெழுத்திடப்பட்ட வெற்று காசோலைகள் மற்றும் அது குறித்த ஆவணங்கள் இருக்குமானால் அவைகளை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கந்துவட்டி குறித்த இந்த நடவடிக்கைகளுக்கு ஆபரேஷன் கந்துவட்டி என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளை காவல்துறையினர் திறம்பட மேற்கொள்ள வேண்டும் என்றும், குறிப்பிடப்பட்டுள்ளது.

கந்துவட்டி குறித்த நடவடிக்கைகளில் சிறப்பாகவும், முன்மாதிரியாகவும், பணியாற்றுபவர்களுக்கு அவருக்குரிய அங்கீகாரம் தனித்தனியாக வழங்கப்படும் என்று அந்த சுற்றறிக்கையில் டிஜிபி சைலேந்திரபாபு குறிப்பிட்டிருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் கந்து வட்டிக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கந்து வட்டியால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்கள் வசிக்கும் எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் புகார் வழங்கலாம் என்றும், அது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், காவல்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.