சுதந்திர தினத்தை முன்னிட்டு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு!

0
81

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இந்த வருடம் முதல் ஒரு வருடத்திற்கு 6 முறை கிராமசபை கூட்டங்கள் நடத்தப்படும் என்று தமிழக சட்டசபையில் அறிவித்திருந்தார். அந்த விதத்தில் ஜனவரி மாதம் 26 குடியரசு தினம், மே மாதம் 1ம் தேதி தொழிலாளர் தினம், ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி சுதந்திர தினம் அக்டோபர் மாதம் 2ம் தேதி மகாத்மா காந்தி பிறந்த நாள், உள்ளிட்ட நாட்களுடன் இனிவரும் காலங்களில் கூடுதலாக மார்ச் மாதம் 22ஆம் தேதி உலக தண்ணீர் தினம், மற்றும் நவம்பர் மாதம் 1ம் தேதி உள்ளாட்சிகள் தினம், உள்ளிட்ட நாட்களிலும் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதோடு கிராமப்புறங்களை சார்ந்த பொது மக்களிடையே திட்டங்கள் தொடர்பான விழிப்புணர்வை உண்டாக்கவும், அரசின் அனைத்து விதமான செயல்பாடுகளிலும், வெளிப்படை தன்மையை உறுதிப்படுத்தவும், மக்கள் பங்கேற்பை ஊக்குவிக்கும் விதமாகவும், மக்கள் இயக்கமாக மறுபடியும் நவம்பர் மாதம் 1ம் தேதி உள்ளாட்சிகள் தினமாக கொண்டாடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், எதிர்வரும் திங்கள்கிழமை நாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்படவிருக்கின்ற நிலையில், அன்றைய தினம் கிராம சபை கூட்டம் நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. இதனடிப்படையில், கிராம சபை கூட்டத்தினை ஊராட்சி எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி காலை 11 மணியளவில் நடத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

குறைவெண் வரம்பின்படி உறுப்பினர்கள் வருகையை உறுதி செய்து கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும் எனவும், கிராமசபை கூட்டம் நடைபெறவிருக்கின்ற இடம், நேரம், உள்ளிட்டவை கிராம மக்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும் எனவும், கூறப்பட்டுள்ளது. அதோடு கிராமசபை கூட்டம் அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெறுவதற்கு போதுமான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கிராமசபை கூட்டம் தொடர்பான அறிக்கையை எதிர்வரும் 22 ஆம் தேதிக்குள் அனுப்ப அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களுக்கும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கத்தின் ஆணையர் சுற்றறிக்கை ஒன்றை வழங்கியிருக்கிறார்.