இரு பிரிவுகளாக வகுப்புகள் நடத்த பள்ளி கல்வித்துறை ஆலோசனை??

0
69

2020-2021 நிகழும் கல்வியாண்டில் பள்ளிகளுக்கு போதுமான வேலை நாட்கள் இல்லாததால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீதான சுமையை குறைக்கும் வகையில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை 30% பாடங்களை குறைப்பது குறித்தும்,தேர்வுகளில் மாறுபாடுகள் கொண்டுவருவதை குறித்தும், வகுப்பு நேரங்களை மாற்றி அமைப்பது குறித்தும் பள்ளி கல்வித்துறை ஆலோசனை நடத்தி வருகிறது.

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழகத்தில் அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் கடந்த மார்ச் 16 ஆம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்பட்டது.இதனையடுத்து மார்ச் மாதத்தில் நடக்கவிருந்த பத்தாம் வகுப்பு பொது தேர்வு நடந்து கொண்டிருந்த 11 மற்றும் 12 வகுப்பு பொதுத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் இரு முறை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டும் கொரோனோ பரவலின் தீவிரம் அதிகரித்துக்கொண்டே இருந்ததனால் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றனர் என்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.

நிகழும் கல்வியாண்டில் கடந்த ஜூன் மாத தொடக்கத்திலேயே பள்ளிகள் திறக்கப்பட்டு இருக்க வேண்டும். கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பள்ளிகள் திறக்கப்படுவதில் சிக்கல் நீடித்து வருகிறது.இச்சூழலில் பள்ளிகள் திறப்பு மேலும் தள்ளி போவதற்கான வாய்ப்புகளே உள்ளநிலையில் புதிய கல்வியாண்டுக்கான பாடங்களை முழுமையாக நடத்துவது என்பது இயலாத காரியம் ஒன்றாகும்.

போதிய வேலைநாட்கள் இல்லாததும், குறுகிய கால கட்டம் போன்ற காரணங்களால் தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு பாடத்திட்டத்தில் பெரிய அளவில் மாற்றம் செய்ய வேண்டும் என கல்வியாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இதனடிப்படையில் பள்ளிக்கல்வித்துறை ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை 30% வரை பாடங்களை குறைப்பது குறித்து ஆலோசித்து வருகிறது அதேவேளையில் பாடங்கள் குறிக்கப்படுவதால் மாணவர்களின் கல்வி திறன்கள் எந்த விதத்திலும் பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்பதனையும் அரசு கவனத்தில் கொண்டுள்ளது.

இதுகுறித்து கல்வி சார்ந்த வல்லுனர்கள்,அரசுப் பள்ளி ஆசிரியர்கள், பேராசிரியர்கள் போன்றவர்களிடம் கருத்து கேட்கப்பட்டு வருகின்றன. மேலும் தேர்வு முறையிலும் சிறிது மாற்றத்தைக் கொண்டு வரலாமா என்று ஆலோசித்து வருகின்றனர்.

இக்கால காட்டத்தில் நோய்ப் பரவலைத் தடுக்கும் வகையில் இரு பிரிவுகளாக வகுப்புகள் நடத்தப்படலாம் என்றும் ஆலோசிக்கப்படுகிறது. இந்த முறை நடைமுறைக்கு வந்தால் 1 முதல் 5 வகுப்பு வரையிலான பள்ளி வேலை நேரம் காலையிலும் 6 முதல் 12 வகுப்பு வரையிலான பள்ளி வேலை நேரம் பிற்பகலிலும் நடத்த பள்ளிக்கல்வித் துறை பரிசீலித்து வருகிறது,என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த மாத இறுதிக்குள் பல கட்டங்களாக ஆலோசனை நடத்தி பாடத்திட்டங்களை குறைப்பது குறித்தும் மற்றும் தேர்வு முறையில் மாற்றம் ஏற்படுவதைக் குறித்தும் பரிந்துரைகளை வல்லுனர் குழு அரசுக்கு தாக்குதல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீக்கப்படும் பாடங்களை குறித்தும் ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

author avatar
Pavithra