60 ரூபாய்க்கு ஒரு கிலோ தக்காளி விற்பனை… தக்காளியை வாங்க கூட்டம் கூட்டமாக சென்ற மக்கள்…!

0
33

 

60 ரூபாய்க்கு ஒரு கிலோ தக்காளி விற்பனை… தக்காளியை வாங்க கூட்டம் கூட்டமாக சென்ற மக்கள்…

 

சந்தையில் 60 ரூபாய்க்கு தக்காளி விற்பனை செய்யப்படும் என்று அறிவிப்பு வெளியானதை அடுத்து தக்காளியை வாங்குவதற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக சென்றனர்.

 

சமையலில் அத்தியாவசியமான ஒரு பொருளாக இருக்கும் தக்காளியானது நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக விண்ணைத் தொடும் அளவுக்கு நாடு முழுவதும் உயர்ந்து வருகின்றது. இதனால் நடுத்தர மக்கள் தக்காளியை வாங்கி சமையலுக்கு பயன்படுத்துவதை குறைத்துக் கொண்டனர்.

 

தமிழகத்தில் தக்காளியின் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக தமிழக அரசு ரேஷன் கடைகள் மூலமாக ஒரு கிலோ தக்காளி 60 ரூபாய்க்கு விற்பனை செய்ய தொடங்கியது. எனினும் தக்காளியின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. அதே சமயம் தக்காளியின் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. மக்களின் தக்காளி தேவையை பூர்த்தி செய்யும் விதமாக திண்டுக்கல் மாவட்டம் காந்தி காய்கறி சந்தையில் இன்று(ஜூலை28) ஒரு கிலோ தக்காளி 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என்று காந்தி காய்கறி சந்தையை சேர்ந்த வியாபாரி சந்தோஷ் முத்து என்பவர் அறிவிப்பு வெளியிட்டார். இந்த அறிவிப்பு வெளியானவுடன் மக்கள் காலையிலேயே கூட்டம் கூட்டமாக நீண்ட வரிசையில் தக்காளியை வாங்குவதற்கு காந்தி காய்கறி மார்க்கெட்டில் குவிந்தனர்.

 

திண்டுக்கல் மாவட்டம் ஆர்.எம் காலனியை சேர்ந்த சந்தோஷ் முத்து என்பவர் காந்தி காய்கறி சந்தையில் தக்காளி மொத்த வியாபரம் செய்து வருகிறார். கடந்த ஒரு மாதமாக தக்காளியின் விலை அதிகரித்து வருவதால் நடுத்தர மக்கள் தக்காளி வாங்குவதை குறைத்துக் கொண்டதை கருத்தில் கொண்டு மொத்த வியாபாரி சந்தோஷ் முத்து அவர்கள் சேவை எண்ணத்துடன் அனைத்து தரப்பினரும் தக்காளியை வாங்கி பயன்படுத்தும் வகையில் ஒரு கிலோ தக்காளியை 60 ரூபாய்க்கு விற்பனை செய்ய முன்வந்துள்ளார்.

 

இந்த அறிவிப்பை மொத்த வியாபாரி சந்தோஷ் முத்து அவர்கள் வெளியிட்டவுடன் காலை 6 மணிக்கே தக்காளியை வாங்குவதற்கு மக்கள் கடையில் குவிந்தனர். மேலும் ஆண்கள் பெண்கள் என மக்கள் பலரும் தக்காளியை மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றனர்.

 

இது குறித்து தக்காளி வியாபாரி சந்தோஷ் முத்து அவர்கள் “நான் கடந்த 23 ஆண்டுகளாக தக்காளி வியாபாரம் செய்து வருகின்றேன். வரலாறு காணாத வகையில் தக்காளியின் விலை தற்சமயம் அதிகரித்து வருகின்றது. இதனால் தக்காளியின் பயன்பாட்டை பெண்கள் சமையலில் குறைத்துக் கொண்டுள்ளனர். இதை கருத்தில் கொண்டு அனைவரும் பயன்பெறும் வகையில் கிலோ 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் தக்காளியை பாதிக்கு பாதியாக குறைத்து கிலோ 60 ரூபாய்க்கு இன்று ஒரு நாள் மட்டும் விற்பனை செய்து வருகிறேன்.

 

ஆந்திரா மாநிலத்தில் இருந்து தரமான தக்காளியை கொள்முதல் செய்து நான் மக்களின் நலனுக்காக தக்காளியின் விலையை குறைத்து விற்பனை செய்து வருகிறேன். இன்று மாலை வரை நான் தக்காளி விற்பனை இருக்கும் என்று அவர் கூறினார்.

 

இது குறித்து பொதுமக்கள் “இன்று மலிவு விலையில் தக்காளியை விற்பனை செய்வதற்காக 5 டன் தக்காளி வரவழைக்கப்பட்டது. ஒரு நபருக்கு இரண்டு கிலோ தக்காளி மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றது. இந்த மலிவு விலை தக்காளி வியாபாரிகளுக்கு வழங்கப்படுவது இல்லை. 120 ருபாய்க்கு விற்பனை செய்யப்படும் அதே தரமான தக்காளியை இங்கு கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்கிறார். இதனால் கால் கிலோ, அரை கிலோ வாங்க வந்த மக்கள் அனைவரும் 2 கிலோ தக்காளி வாங்கி செல்கின்றோம்” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.