திரையில் வில்லன் – நிஜத்தில் ஹீரோ..!வானில் பறக்கும் ஐநா புகழ்ந்த நடிகர்..!

0
67

கொரோனா பாதிப்பின் போது ஆயிரக்கணக்கான மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய நடிகர் சோனு சூட்டின் புகைப்படத்தை விமானத்தில் பதித்து தனியார் விமான நிறுவனம் ஒன்று தனது நன்றியை தெரிவித்துள்ளது.

2020ம் ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா பரவலால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் வெளிநாடுகளிலும், வெளி மாநிலங்களிலும் மாணவர்களும், தொழிலாளர்களும் சிக்கித்தவித்தனர். இந்த நிலையில் நடிகர் சோனுசூட் வெளி மாநிலங்களில் சிக்கியவர்களை பேருந்துகள் மூலமாகவும், தனி விமானம் மூலமாகவும் அவரவர் சொந்த ஊர்களுக்கு திரும்ப உதவி புரிந்தார். இதுமட்டுமின்றி ஊரடங்கால் வேலைவாய்ப்பை இழந்த தொழிலாளர்களுக்காகத் தனியாக வேலைவாய்ப்புத் தளம் ஒன்றையும் ஆரம்பித்தார். இதேபோன்று லாக்டவுன் நேரத்தில் ஸ்பெயினில் சிக்கி இருந்த சென்னை மாணவர்களை தமிழகம் திரும்ப உதவிய சோனுசூட், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வி உதவி அளித்தார்.

சண்டிகர் அரசுப் பள்ளி மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க, அவர்களுக்கு ஸ்மார்ட்போன்களை வாங்கி கொடுத்தார். ஹரியானா மாநிலத்தில் உள்ள மலை கிராமத்தில் டவர் கிடைக்காததால் மாணவர்கள் மரத்தில் ஏறி ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்பதை அறிந்த சோனு சூட் உடனடியாக அவர்களுக்கு என தனியாக மொபைல் டவர் அமைத்து கொடுத்தார். தனது இரு மகள்களை கொண்டு நிலத்தை உழுத விவசாயிக்கு தனியாக டிராக்டர் வாங்கி கொடுத்து அனைவரையும் சோனுசூட் நெகிழ செய்தார்.

கொரோனா காலத்தில் ஏழை எளிய மக்களின் தேவைகளை கண்டறிந்து உதவிய சோனு சூட்டிற்கு ’சிறப்பு மனித நேய விருதினை’ ஐநா வழங்கி கவுரவித்தது.  இதேபோன்று சோனு சூட்டை பஞ்சாபின் அடையாளமாக அறிவித்து இந்திய தேர்தல் ஆணையம் கவுரவித்தது. ஆந்திராவில் உள்ள ஒரு ஐ.ஏ.எஸ் பயிற்சி நிறுவனம், சோனு சூட்டை கவுரவிக்கும் விதமாகத் தங்களது பயிற்சி மையத்தின் கலை மற்றும் மனித நேயத்துறைக்கு அவரது பெயரைச் சூட்டியது. தெலுங்கானா மாநிலத்தின் சித்திப்பெட் மாவட்டத்தில் உள்ள துப்பதண்டா கிராமத்தில் சோனு சூட்டிற்கு கோவில் திறக்கப்பட்டது.

இந்த நிலையில் கொரோனா பரவலின் போது ஆயிரக்கணக்கான மக்களுக்கு தேடி சென்று உதவிய சோனு சூட்டிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பிரபல தனியார் விமான சேவை நிறுவனமான ஸ்பைஸ்ஜெட், தனது போயிங் 737 விமானத்தில் சோனு சூட்டின் முகத்தை பதித்து தனது நன்றியை தெரிவித்துக் கொண்டது. நடிகர் ஒருவரின் புகைப்படம் உள்நாட்டு விமானத்தில் இடம்பெற்றது இதுவே முதல் முறை.

இதற்கு நடிகர் சோனு சூட் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.