நிதியமைச்சர் கார் மீது காலணி வீசிய விவகாரம்! 3 பெண்கள் அதிரடி கைது!

0
91

காஷ்மீரில் நடைபெற்ற தாக்குதலில் வீர மரணமடைந்த ராணுவ வீரர் லக்ஷ்மணனின் உடல் கடந்த சனிக்கிழமை டெல்லியிலிருந்து மதுரை விமான நிலையத்திற்கு வந்தடைந்தது. இதனைத் தொடர்ந்து அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், உள்ளிட்டோர் அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிலையில், அஞ்சலி செலுத்திய பிறகு தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் காரில் ராணுவ வீரரின் சொந்த ஊரான டி புதுப்பட்டிக்கு போய்க்கொண்டிருந்தார். அப்போது பாஜகவை சேர்ந்தவர்கள் திடீரென்று அவருடைய காரை வழிமறித்தனர்.

அவர்கள் அமைச்சரின் கார் மீது காலணியை வீசி அராஜகமாக நடந்து கொண்டதாக தெரிகிறது. அதன்பிறகு அங்கிருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து அப்புறப்படுத்தினர். பின்னர் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார். இதனையடுத்து காலணியை அமைச்சரின் கார் மீது வீசியவர்கள் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

காவல்துறையினரின் தீவிர விசாரணையையடுத்து பாஜகவை சார்ந்த 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 6 பேரும் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்கள். அவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் 26ஆம் தேதி வரையில் நீதிமன்ற காவல் பிறப்பித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்த வழக்கில் தொடர்புடைய இன்னும் சிலரை காவல்துறையினர் தேடி வந்தார்கள். இந்த சூழ்நிலையில், திருமங்கலம் அருகே வாகை குளத்தில் பதுங்கியிருந்த சரண்யா, தனலட்சுமி, தெய்வயானை, உள்ளிட்ட 3 பெண்களை தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். அதன் பிறகு அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையிலடைத்தனர். இவர்களில் தனலட்சுமி வீசிய காலணி தான் அமைச்சரின் கார் மீது பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதோடு பாஜகவின் இந்த அநாகரீகமான செயலை கண்டித்து திமுகவைச் சார்ந்தவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தார்கள். மேலும் பல அரசியல் கட்சித் தலைவர்கள் இது போன்ற ஆணகரிகமான செயலை செய்வதை பாஜக கைவிட வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.

மதுரை மாவட்ட பாஜகவின் தலைவர் மருத்துவர் சரவணன் இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவிலிருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.