நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று தொடங்கும் வேட்புமனுத்தாக்கல்! எங்கெங்கு வேட்புமனுக்கள் தாக்கல் செய்யலாம்?

0
65

தமிழ்நாட்டில் இருக்கின்ற 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள், என்று 642 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்றையதினம் ஆரம்பமாகிறது பிப்ரவரி 4 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

வேட்புமனு தாக்கல் செய்வதற்கு 8 நாட்கள் மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது, குறுகிய கால இடைவெளியில் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருப்பதால் கூட்டணி கட்சிகள் வார்டு பங்கீடு பேச்சுவார்த்தை உள்ளிட்டவற்றை வேகப்படுத்தி இருக்கிறது. வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியிலும் அரசியல் கட்சிகள் மும்முரமாக இறங்கியிருக்கின்றன.

இன்றைய தினம் வேட்புமனுத்தாக்கல் ஆரம்பிப்பதால் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி, பகுதிகளில் எங்கெங்கு வேட்புமனுத் தாக்கல் செய்யலாம் என்று அந்தந்த பகுதிகளில் தேர்தல் அலுவலர்கள் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்கள்.

அதனடிப்படையில் வேட்பு மனுக்களை பெறுவதற்கு தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் இன்று காலை 10 மணி முதல் வேட்பு மனு தாக்கலை தொடங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பொங்கல் பண்டிகையின் போது கடந்த 17ஆம் தேதி விடுமுறை வழங்கப்பட்டது, இந்த விடுமுறைக்கு பதிலாக ஜனவரி மாதம் 29ஆம் தேதி அதாவது நாளைய தினம் அரசு அலுவலகங்கள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

அதனடிப்படையில், நாளை சனிக்கிழமை அன்று வேலை நாள் என்ற காரணத்தால், நாளையும் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.