உத்திரபிரதேசத்தில் கிங்மேக்கர் ஆன யோகி ஆதித்யநாத்!

0
65

நாட்டிலேயே மிகப் பெரிய பரப்பளவை கொண்ட அதோடு, அதிக சட்டசபை தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேச மாநிலத்தில் 7 கட்டங்களாக நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் சுமார் 60 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. தேர்தலுக்கு பின்பான கருத்துக்கணிப்பில் உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சியை தக்கவைக்கும் என்றே பெரும்பாலும் தெரிவிக்கப்பட்டது.

தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்குகளை எண்ணும் பணி நேற்று காலை 8 மணியளவில் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் ஆரம்பமானது. தொடக்கம் முதலே பாஜக வேட்பாளர்கள் முன்னிலை பெற்றார்கள்.

அந்த மாநிலத்தில் மொத்தமிருக்கின்ற 403 சட்டசபைத் தொகுதியில் பெரும்பான்மையான பகுதிகளை கைப்பற்றி பாஜக கூட்டணி மறுபடியும் ஆட்சியை கைப்பற்றியிருக்கிறது. யோகி ஆதித்யநாத் மறுபடியும் முதலமைச்சராக வரவிருக்கிறார்.

பாஜக மட்டும் தனித்து 255 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. அப்னா தள் 12 தொகுதிகளிலும் நிஷாத் 6 தொகுதிகளிலும், என்று ஒட்டுமொத்தமாக 273 தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது.

ஆட்சியை கைப்பற்றும் கனவுடன் களமிறங்கிய சமாஜ்வாதி கட்சி கூட்டணி 111 பகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. காங்கிரஸ் கட்சி 2 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் கட்சி 1 இடத்திலும் வெற்றி பெற்றிருக்கிறது.

உத்தரப்பிரதேசத்தில் ஒரு முதலமைச்சராக 5 வருட காலம் முழுமையாக பதவி வகித்து மறுபடியும் முதலமைச்சராக பதவி ஏற்பது 37 வருட கால அரசியல் வரலாற்றில் இதுவே முதல் முறை என சொல்லப்படுகிறது.

உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் பாஜகவின் வெற்றியை அந்த கட்சியின் தொண்டர்கள் மேள தாளங்களுடன் ஆடிப்பாடி இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும், கொண்டாடினர்.

இந்தத் தேர்தலில் பெற்ற வெற்றியின் மூலம் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தன்னுடைய செல்வாக்கை மீண்டும் நிரூபித்திருக்கிறார் என்றே தோன்றுகிறது.

சாதாரண நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஒருவரை சென்ற முறை முதலமைச்சர் என அறிவித்தது பாஜக தலைமை. ஆனால் அவருடைய இந்த ஐந்தாண்டு கால ஆட்சியின் முடிவில் மீண்டும் அவரே வெற்றி வாகை சூடி மறுபடியும் பாஜகவை ஆட்சியில் அமர்த்தியிருக்கிறார் இது அவருக்கு மிகப்பெரிய செல்வாக்கைப் பெற்றுத் தந்திருக்கிறது.