ஊரடங்கு தளர்வு! சென்னை மாநகராட்சி ஆணையர் போட்ட அதிரடி உத்தரவு!

0
76

நோய்த் தொற்று பரவல் காரணமாக, ஊரடங்கு தளர்வுகளுடன் வருகின்ற 14ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்களுக்கு மட்டுமே கோயம்பேடு காய்கறி சந்தையில் அனுமதி வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககந்தீப்சிங் பேடி பேட்டி கொடுத்திருக்கிறார்.

சென்னை கோயம்பேடு சந்தையில் மளிகை மற்றும் காய்கறி பழம் பூ மொத்த மற்றும் சில்லரை விற்பனை கடைகள் செயல்பட்டு வருகின்றன. சென்ற வருடம் இந்த சந்தையில் வியாபாரிகள் மற்றும் ஊழியர்கள் தொழிலாளர்கள் மற்றும் சந்தைகளுக்கு பொருட்கள் வாங்க வந்த சில்லரை வியாபாரிகள் பொதுமக்கள் என்று பலரும் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டார்கள்.

இதனை அடுத்து கோயம்பேடு காய்கறி சந்தை முழுமையாக மூடப்பட்டிருந்தது. காய்கறி, பழம், பூ, போன்ற சந்தைகள் போன்றவற்றை வேறு இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டு வியாபாரம் நடைபெற்றது. இந்த நிலையில், 6 மாத கால இடைவெளிக்குப் பிறகு படிப்படியாக மறுபடியும் திறக்கப்பட்ட இந்த சந்தையை தற்சமயம் மிகக் கடுமையான கட்டுப்பாடுகளுடன் செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

சில்லரை வியாபாரிகள் மட்டும் இந்த மார்க்கெட்டிற்கு பொருட்கள் வாங்கி செல்ல அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது தனியார் வாகனங்கள் மோட்டார் வாகனங்களுக்கும் இந்த சந்தையில் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

காய்கறி மற்றும் பழங்கள் சந்தையில் இருக்கின்ற மொத்தவிற்பனை கடைகளைத் தவிர்த்து சிறு மற்றும் மொத்த விற்பனை கடைகள் நாள்தோறும் 30 சதவீதம் அளவிற்கு சுழற்சி முறையில் செயல்பட இயலும் என்று அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த சூழ்நிலையில், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கோயம்பேடு காய்கறி சந்தையில் ஆய்வு மேற்கொண்டார். அதோடு வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் எல்லோரும் நோய்த்தொற்று வழிகாட்டு நெறிமுறைகளை சரியான முறையில் பின்பற்றுகிறார்களா என்பது தொடர்பாகவும் ஆய்வு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்பிறகு சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி ஊரடங்கு காலத்தில் அளிக்கப்பட்டிருக்கின்ற தளர்வுகளை இன்றியமையாத தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும், தேவையில்லாமல் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என்றும், கேட்டுக் கொண்டார். அதேபோல கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வருகைதரும் எல்லோருக்கும் தடுப்பு ஊசி போட்டுக் கொண்டால் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.