36 கிலோ மீட்டர் இங்கிலீஷ் கால்வாய்! நீச்சலடித்து கடந்து தேனி மாணவர் உலக சாதனை!!

0
40

36 கிலோ மீட்டர் இங்கிலீஷ் கால்வாய்! நீச்சலடித்து கடந்து தேனி மாணவர் உலக சாதனை!!

 

தேனியை சேர்ந்த மாணவன் ஒருவர் 36 கிலோ மீட்டர் தூரம் உள்ள இங்கிலீஷ் கால்வாயை நீச்சலடித்து கடந்து உலக சாதனை படைத்துள்ளார்.

 

தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் 10ம் வகுப்பு படித்து வரும் சினேகன் என்ற மாணவன் கடந்த 2015ம் ஆண்டு முதல் நீச்சல் பயிற்சியாளர் விஜயகுமார் என்பவரிடம் நீச்சல் பயிற்சி பெற்று வருகிறார். இதையடுத்து இங்கிலாந்து நாட்டின் இங்கிலீஷ் கால்வாயை நீச்சலடித்து சாதனை படைக்க வேண்டும் என்று நீச்சல் பயிற்சியாளர் விஜயகுமார் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் கடந்த ஜூலை 18ம் தேதி இங்கிலாந்து நாட்டில் உள்ள டோவர் ஹோ கடற்கரைக்கு சென்றனர்.

 

டோவர் ஹோ கடற்கரையில் இருந்து 36 கிலோ மீட்டர்.தூரம் உள்ள இங்கிலீஷ் கால்வாயில் நீச்சலடித்துக் கொண்டே பிரான்ஸ் நாட்டின் ஹாலீஸ் கடற்கரைக்கு சென்றனர். பிறகு பிரான்ஸ் நாட்டில் கரையேறாமல் மீண்டும் நீச்சலடித்தபடியே மறுநாள் அதாவது 19ம் தேதி காலை 10.30 மணியாளவில் இங்கிலாந்து நாட்டை வந்தடைந்தனர்.

 

இதற்கு முன்பு இங்கிலீஷ் கால்வாயில் நீச்சலடித்து பிரான்ஸ் நாட்டுக்கு வந்தவர்கள் அனைவரும் கரையேறி படகின் மூலமாக திரும்பிவிடுவார்கள். ஆனால் பயிற்சியாளர் விஜயகுமார்.தலைமையிலான குழு பிரான்ஸ் நாட்டில் கரையேறாமல் தொடர்ந்து நீச்சலடித்துக் கொண்டே இங்கிலாந்து திரும்பியுள்ளனர்.

 

மொத்தம் 72 கிலோ மீட்டர் தூரத்தை நீச்சல் அடித்த இந்தியாவை சேர்ந்த முதல் அணி என்ற பெருமையை பயிற்சியாளர் விஜயகுமார் தலைமையிலான குழு பெற்றுள்ளது.

 

இது தொடர்பாக நீச்சல் பயிற்சியாளர் விஜயகுமார் அவர்கள் “இங்கிலாந்து நாட்டில் இந்த கடல் பகுதியில் அதிக நீரோட்டம் உள்ளது. மேலும் குறைந்தபட்சம் 14 டிகிரி முதல் 15 டிகிரி வரை சீதோஷ்ண நிலையும் உள்ளது. அது மட்டுமில்லாமல் கடல் நாய்கள், சுறா மீன்கள் அதிகளவில் உள்ள கடல் பகுதி இதுவாகும். மேலும் இந்த கடல் பகுதியில் ஜெல்லி மீன்களும் அதிகளவு உள்ளது.

 

தமிழ்நாட்டை சேர்ந்த குற்றாலிஸ்வரன் இதற்கு முன்பு இந்த இங்கிலீஷ் கால்வாயை நீச்சலடித்து கடந்துள்ளார். அதன் பிறகு இரண்டாவது முறையாக 10ம் வகுப்பு படிக்கும் மாணவன் சினேகன் இந்த ஆங்கில கால்வாயை நீச்சலடித்து கடந்துள்ளார். குற்றாலீஸ்வரனுக்கு அடுத்து ஆங்கிலக் கால்வாயை கடந்த இரண்டாவது தமிழர் மாணவன் சினேகன் என்பது குறிப்பிடத்தக்கது” என்று கூறியுள்ளார்.

 

இதையடுத்து உலக சாதனை விருது வழங்கும் குளோபல் அவார்ட் நிறுவனமானது உலக சாதனை படைத்த பயிற்சியாளர் விஜயகுமார், மாணவன் சினேகன் மற்றும் அணியை சேர்ந்தவர்களுக்கும் சான்றிதழ்களை வழங்கியுள்ளது.