மழைநீர் வடிகால் பணிக்காக செலவிடப்பட்ட 4000 கோடி கடலோடு கலந்து விட்டதா? திமுகவுக்கு செல்லூர் ராஜு கேள்வி!

0
71
4000-crores-spent-on-rainwater-drainage-works-mixed-with-the-sea-sellur-raju-question-to-dmk
4000-crores-spent-on-rainwater-drainage-works-mixed-with-the-sea-sellur-raju-question-to-dmk

மழைநீர் வடிகால் பணிக்காக செலவிடப்பட்ட 4000 கோடி கடலோடு கலந்து விட்டதா? திமுகவுக்கு செல்லூர் ராஜு கேள்வி!

கடந்த 26 ஆம் தேதி தமிழகத்தின் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவான மிக்ஜாம் புயல் டிசம்பர் 5 ஆம் தேதி ஆந்திரா மாநிலம் அருகே கரையை கடந்தது. இந்த புயலால் சென்னை மாநகர் முழுவதும் மழை வெள்ளம் சூழ்ந்து மக்கள் தவித்து வருகின்றனர்.

மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மழை காலங்களில் சென்னையில் மழை நீர் தேங்காமல் இருக்க கடந்த 2 வருடங்களாக ரூ.4000 கோடி செலவில் மழை நீர் வடிகால் பணியை ஆளும் திமுக அரசு மேற்கொண்டு வந்தது. ஆனால் ஒரு நாள் பெய்த மழைக்கே மழைநீர் வடிகால் திட்டம் தோல்வி அடைந்து விட்டது.

திமுக அரசின் அலட்சியத்தால் தான் இன்று சென்னை வாசிகள் கடும் துயரை சந்தித்து வருகின்றனர் என்று தொடர் விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இதனிடையே புயலால் பாதிப்பை சந்தித்த சென்னை மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் பணியை மதுரை மாவட்ட பேரவை அதிமுகவினர் சார்பில் முன்னாள் அமைச்சரும் அதிமுகவின் முக்கிய நிர்வாகியுமான செல்லூர் ராஜு அவர்கள் தொடக்கி வைத்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் மிக்ஜாம் புயலால் ஓரளவு தான் மழை பெய்தது, பெரிய அளவில் காற்று கூட வீசவில்லை. இந்த மழை பாதிப்பை கூட சரியாக கையாளத் தெரியாமல் திணறி வருகிறது திமுக அரசு.

தாங்கள் ஆட்சிக்கு வந்தால் சென்னையில் 1 சொட்டு மழை நீர் கூட தேங்காது என்று சொன்ன ஸ்டாலின் தற்பொழுது எப்படி மக்களை சந்திப்பார்? மழைநீர் வடிகால் பணிக்காக ரூ.4000 கோடி செலவிடப்பட்டதாக கதை விடும் ஸ்டாலின் அவர்களே தற்பொழுது சென்னையின் நிலையை பார்த்தால் ரூ.4 கோடிக்கு கூட அந்த பணி நடைபெற வில்லை என்பது அப்பட்டமாக தெரியவந்துள்ளது.

மழைநீர் வடிகால் பணிக்காக செலவிடப்பட்டதாக சொல்லப்படும் அந்த 4000 கோடி கடலுக்குள் அடித்து சென்று விட்டதா? மக்கள் பணத்தில் ஊழல் செய்யும் இந்த திமுக ஆட்சியால் மக்களுக்கு எந்த ஒரு பயனும் இல்லை.

திமுகவின் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மக்களுக்கு திருப்த்தி அளிக்கவில்லை. மக்கள் மீது அக்கறை செலுத்தாத திமுக அரசின் மீது அவர்கள் கடும் கொந்தளிப்பில் இருக்கின்றனர்.

ரூ.4000 கோடிக்கு அப்படி என்ன மழைநீர் வடிகால் பணி நடைபெற்றது? மழை வெள்ளத்தால் உயிரிழந்தவர்கள் குறித்து விவரம் உள்ளிட்டவற்றை திமுக அரசு வெளிப்படையாக வெளியிட வேண்டும் என்று செல்லூர் ராஜு அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்தார்.