சந்திர தோஷம் நீங்க வேண்டுமா? அப்படியானால் உடனடியாக இதை செய்யுங்கள்!

0
136

ஆடிப்பெருக்கு எனும் ஆடி பதினெட்டாம் பெருக்கு விழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. அன்றையதினம் எந்த நட்சத்திரம், எந்த திதியில் வந்தாலும், செய்யும் புதிய முயற்சிகள் வெற்றி பெறும்.

இயற்கை சக்திகளில் சூரியனுக்கு அடுத்தபடியாக அதீத முக்கியத்துவம் வழங்கப்படும் கிரகம் சந்திரன். கால புருஷனுக்கு 4ம் இடமான கடக ராசி சந்திரனின் ஆட்சி வீடாகும். காலச்சக்கரத்தின் 4வது ராசி அதிபதி சந்திரனுக்கு சொத்து, சுகம், வண்டி, வாகனங்கள், உள்ளிட்டவற்றை தருகின்ற அதிகாரமுண்டு சந்திரன் மனோகாரகன் அதாவது மனதை ஆள்பவன்.

சந்திரன் சுப கிரகங்களுடன் இணையும்போது யோகமாகவும், அதுவே ராகு, கேது, சனி உள்ளிட்ட பாவ கிரகங்களுடன் இணையும்போது அவயோக தோஷமாகவும் மாறுகின்றது. சந்திரன் கொடுக்கும் யோகங்கள் ஒருவரை வாழ்க்கையின் உச்சத்திற்கு கொண்டு செல்லும்.

வறுமை நிலையிலிருக்கும் குடும்பத்தில் பிறக்கும் குழந்தைக்கு சந்திரனால் யோகம் உண்டு என்றால் அந்த குழந்தையின் ஜாதகத்தால் அந்த குடும்பம் செல்வ வளத்துடன் கூடிய கோடீஸ்வரர் குடும்பமாக மாறிவிடும். அந்தளவுக்கு யோகத்தை வழங்க கூடிய அமைப்பு சந்திரனுக்கு உண்டு. சந்திரனால் பாதிக்கப்பட்டால் வறுமை, தண்ணீரில் கண்டம், திருமண தடை தோல்வி, மனநிலை பாதிப்பு உள்ளிட்டவை ஏற்படுகின்றன.

கடக ராசி கடலும், கடல் சார்ந்த இடமுமான நீர் ராசியாகும். ஆகவே கால புருஷ தத்துவத்தின் படி 5ம் அதிபதி சூரியன், கால புருஷ 4ம் அதிபதி சந்திரன் வீட்டில் சஞ்சரிக்கும் ஆடி மாதத்தில் தென்மேற்கு பருவ மழை பெய்து காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருவதைத் தான் ஆடிப்பெருக்கு என்று கொண்டாடுகிறார்கள். தமிழகத்தில் இருக்கின்ற நீர் நிலைகளில் ஆடி மாதத்தில் நீர் வரத்து அதிகமாகி பெருக்கெடுத்து ஓடும் அனைத்து நதிகளும் நீர் நிரம்பி காணப்படும்.

பயிர் செழிக்க வளமருளும் அன்னை காவிரிக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் ஆடி மாதம் 18ம் நாளில் பதினெட்டாம் பெருக்கு விழா நதிக்கரைகளிலும், ஆற்றங்கரைகளிலும், கொண்டாடப்படுகிறது. உழவர்கள் இந்த நாளில் நம்பிக்கையுடன் பட்டம் பார்த்து விதை விதைப்பர்.

நெல் கரும்பு உள்ளிட்டவற்றை ஆடி மாதம் விதைத்தால் தை மாதத்தில் அறுவடை செய்ய முடியும். அதற்கு வற்றாத நதிகளை தங்கள் கடவுளாக போற்றி மகிழ்ந்து பூஜைகள் செய்து அதன் பிறகு உழவு வேலைகளை ஆரம்பிப்பார்கள். புனித நதிகளுக்கு இந்த நாளில் சீர் செய்து வணங்குவது மிகவும் சிறப்புடையது என்கிறார்கள்.

நதிக்கரைகளில் இருக்கின்ற கன்னி தெய்வங்களை கன்னிப் பெண்கள் வழிபாடு செய்தால் சிறப்பான கணவர் அமைவார். கன்னி தெய்வங்களை சுமங்கலி பெண்கள் தாலி கயிறு மாற்றி, புது கயிறு அணிந்து வழிபட்டால் கணவருக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும். அதோடு சப்த கன்னிகளை வழிபட்டால் திருமண தடை நீங்கும்.

நீர்நிலைகளுக்கு செல்ல இயலாதவர்கள் ஆடிப்பெருக்கு பூஜையை நதிக்கரை மட்டுமல்லாமல் வீட்டிலும் எளிய முறையில் கடைபிடிக்கலாம். நிறைகுடத்திலிருந்து ஒரு செம்பு தண்ணீர் எடுத்து அதில் அரைத்த மஞ்சள் சிறிதளவு சேர்த்தால் போதும், வழிபாட்டுக்குரிய தீர்த்தம் தயாராகிவிடும். திருவிளக்கேற்றி அந்த தீர்த்தத்தை விளக்கின் முன்பு வைக்க வேண்டும்.

ஒரு அம்மன் படத்திற்கு பூக்களை தூவி தெரிந்த மந்திரங்களை சொல்லி வணங்க வேண்டும். கற்பூர ஆரத்தி செய்து கங்கை, யமுனை, நர்மதை, காவிரி, வைகை, தாமிரபரணி, உள்ளிட்ட புண்ணிய நதிகள் அகத்தியர் உள்ளிட்டோரை மனதார நினைத்து வணங்க வேண்டும். சர்க்கரை பொங்கல் படைத்து பூஜை செய்ய வேண்டும் என சொல்லப்படுகிறது.

செம்பில் இருக்கின்ற தண்ணீரை கால் மிதிபடாத இடத்திலோ அல்லது செடி,கொடியிலோ ஊற்றி விட வேண்டும். இந்த பூஜையால் வீட்டில் வளம் பெருகும் என்பது ஐதீகமாக இருக்கிறது.

ஜனன கால ஜாதகத்தில் சந்திர தோஷம் இருப்பவர்கள், சந்திர தசை மற்றும் சந்திர புக்தி உள்ளிட்டவை நடப்பவர்கள் சந்திரனுக்கு சனி, ராகு, கேது, சம்பந்தம் இருப்பவர்கள், ஆடிப்பெருக்கில் புனித நீராடினால் சந்திரதோஷம் நீங்கும். தாய், தந்தை மற்றும் முன்னோர்களின் நல்லாசி கிடைக்கும் வீடு, வாகன, யோகம் கிடைக்கும் என்கிறார்கள்.