வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே வெற்றி வாகை சூடினார் அதிமுக வேட்பாளர்?

0
121

தமிழ்நாட்டில் இருக்கின்ற 234 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை மே மாதம் இரண்டாம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. இதற்கிடையில் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சட்டசபை தொகுதியில் அதிமுக வேட்பாளராக ராமலிங்கம் அவர்களும், திமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் சாமிநாதன் அவர்களும், போட்டியிட்டனர்.

இந்த சூழ்நிலையில், வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதற்கு முன்னரே அதிமுக வேட்பாளர் ராமலிங்கம் வெற்றி பெற்றதாக தெரிவித்து காங்கேயம் தொகுதிக்கு உட்பட்ட பழையகோட்டை கிராமத்தில் நேற்று அதிமுக வேட்பாளர் ராமலிங்கத்தின் புகைப்படத்துடன் கூடிய பேனரை வைத்ததால் பரபரப்பு உண்டானது. அந்த பேனரில் சுமார் 13483 வாக்கு வித்தியாசத்தில் ராமலிங்கம் வெற்றி பெற்றதாகவும், அவரை வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டதால் அந்த பகுதியில் மிகப்பெரிய பரபரப்பு உண்டானது.

இது தொடர்பாக, அதிமுக வேட்பாளர் ராமலிங்கத்திற்கு தகவல் தெரிய வரவே உடனடியாக அதிமுகவைச் சேர்ந்த தொண்டர்கள் அந்த பேனரை அப்புறப்படுத்தினார்கள். இதுதொடர்பாக தன்னுடைய வலைதளப் பக்கத்தில் விளக்கம் கொடுத்திருக்கிற அதிமுக வேட்பாளர் ராமலிங்கம், ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார்.

அதில் அந்தப் பேனருக்கும் எனக்கும் எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது என்றும், இது தேர்தல் விதிமுறைகளுக்கும்,கட்சியின் கொள்கைகளுக்கும் எதிராக இருக்கிறது என்று ராமலிங்கம் தெரிவித்திருக்கிறார். அதோடு தன்னுடைய நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக புகைப்படம் சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டி இருக்கிறார்.