பா.ம.க.வின் யோசனைகளில் ஒன்றை திட்டமாக செயல்வடிவம் கொடுத்த அதிமுக அரசு! மகிழ்ச்சியில் பாமகவினர்

0
114
Dr Ramadoss and Edappadi Palanisamy Meet Updates Anbumani Ramadoss as Deputy Chief Minister-News4 Tamil
Dr Ramadoss and Edappadi Palanisamy Meet Updates Anbumani Ramadoss as Deputy Chief Minister-News4 Tamil

பா.ம.க.வின் யோசனைகளில் ஒன்றை திட்டமாக செயல்வடிவம் கொடுத்த அதிமுக அரசு! மகிழ்ச்சியில் பாமகவினர்

தமிழக அரசியல் கட்சிகளில் ஆக்க பூர்வமான சிந்தனைகள் மற்றும் செயல்பாடுகளுடன் இருப்பதில் முன்னணியில் இருப்பது மருத்துவர் ராமதாஸ் நிறுவிய பாட்டாளி மக்கள் கட்சியே. இந்நிலையில் பாமக கூட்டணி அமைத்த அதிமுக அரசு தற்போது பாமகவின் கோரிக்கைகள் மற்றும் அக்கட்சியின் யோசனைகளில் சிலவற்றை சட்டமாக்கி நிறைவேற்றி வருகிறது. அந்த வகையில் தற்போது ஒருங்கிணைந்த உழவர் சந்தை வளாகங்களை 5 மாவட்டங்களில் அமைக்க தமிழக அரசு முன்வந்திருப்பதை பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பாராட்டியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் “ஒருங்கிணைந்த உழவர் சந்தை வளாகம் சிறப்பான திட்டம்: விரிவுபடுத்த வேண்டும்!” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

வேளாண் விளைபொருட்களை விற்பனை செய்வதற்கான சந்தை உள்ளிட்ட விவசாயிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஒரே இடத்தில் வழங்கக்கூடிய ஒருங்கிணைந்த உழவர் சந்தை வளாகங்களை 5 மாவட்டங்களில் அமைக்க தமிழக அரசு முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது. பா.ம.க.வின் யோசனைகளில் ஒன்றான இத்திட்டம் செயல்வடிவம் பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

வேளாண் அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின்படி முதல்கட்டமாக திருவண்ணாமலை, தருமபுரி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் ஒருங்கிணைந்த உழவர் சந்தை வளாகங்கள் அமைக்கப்படும். இந்த வளாகங்களில் உழவர்கள் தங்களின் வேளாண் விளைபொருட்களை விற்பனை செய்வதற்கான கடைகள், வேளாண் விளைபொருட்களுக்கு மதிப்பு கூட்டும் மையங்கள், உழவர்களுக்கு பயிற்சி அளிக்கும் வசதிகள், உழவர்களுக்கு தேவையான உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்யும் நிலையங்கள், மளிகைப் பொருள் விற்பனை நிலையங்கள் ஆகியவை ஏற்படுத்தப்படும். இவை தவிர உழவர்கள் மற்றும் நுகர்வோருக்கு தேவையான தானியங்கி பணம் வழங்கும் மையங்கள், உணவகங்கள் உள்ளிட்ட வசதிகளும் அமைத்துத் தரப்பட உள்ளன.

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இத்தகைய சந்தைகள் ஏற்படுத்தித் தர வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பாட்டாளி மக்கள் கட்சி தாக்கல் செய்து வரும் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கைகளிலும், 2016-ஆம் ஆண்டுக்கான தேர்தல் அறிக்கையிலும் இத்திட்டம் இடம் பெற்றிருந்தது. மேலும், இந்த சந்தைகளை நாடு முழுவதும் உள்ள மற்ற சந்தைகளுடன் மின்வணிக நுழைவாயில் மூலமாக இணைக்க வேண்டும் என்றும் பா.ம.க. கூறியிருந்தது. அந்த வசதியையும் இந்த வளாகங்களில் அரசு ஏற்படுத்தவிருப்பது பா.ம.கவுக்கு கிடைத்த வெற்றியாகும்.

பாட்டாளி மக்கள் கட்சியின் யோசனையை ஒட்டி அமைக்கப்படும் இந்த சந்தைகளின் சிறப்பம்சமே இவற்றில் இடைத்தரகர்கள் இருக்க மாட்டார்கள் என்பது தான். வழக்கமான சந்தைகளில் உழவர்கள் தங்களின் விளைபொருட்களை விற்பனை செய்யச் செல்லும் போது, அங்குள்ள வணிகர்களும், இடைத் தரகர்களும் நிர்ணயிக்கும் விலைக்கு பொருட்களை விற்று விட்டு வருவதை தவிர வேறு வழியில்லை. இந்த முறையில் சந்தையில் விற்பனை செய்யப்படும் விலையில் பாதி தொகை கூட உழவர்களுக்கு கிடைக்காது. ஆனால், புதிதாக அமைக்கப்படவிருக்கும் ஒருங்கிணைந்த உழவர் சந்தை வளாகங்களில் உழவர்களே தங்களின் விளைபொருட்களை நேரடியாக பொதுமக்களுக்கு விற்பனை செய்ய முடியும். இதனால் உழவர்களுக்கு நல்ல விலை கிடைப்பதுடன், நுகர்வோருக்கும் குறைந்த விலையில் காய்கறி, பழங்கள் உள்ளிட்ட பொருட்கள் கிடைக்கும். இது இரு தரப்பினருக்கும் நன்மை பயப்பதாக அமையும்.

ஒரே நேரத்தில் ஒரே வகையான காய்கறிகள் சந்தையில் குவியும் போது விலை சரியக்கூடும். அதை தடுக்கவும் இந்த வளாகங்களில் வசதிகள் உள்ளன. உழவர்கள் விரும்பினால் வளாகங்களில் உள்ள மதிப்பு கூட்டும் மையங்களில் தங்களின் பொருட்களை மதிப்பு கூட்டி, புதிய பொருளாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய முடியும். அவ்வாறு செய்ய விரும்பாத உழவர்களுக்காக வளாகங்களில் 25 முதல் 50 டன்கள் வரையிலான காய்கறிகளை பாதுகாத்து வைக்கக்கூடிய குளிரூட்டப்பட்ட கிடங்குகள் அமைக்கப்படும். அங்கு தங்களின் பொருட்களை சேமித்து வைத்து, நல்ல விலை கிடைக்கும் போது விற்பனை செய்து கொள்ளலாம். இதனால் வேளாண் விளைபொருட்கள் வீணாவது தடுக்கப்படும்.

இந்த சந்தைகளை சிறு மற்றும் குறு உழவர்கள் இன்னும் சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள வசதியாக மேலும் சில யோசனைகளை நடப்பாண்டிற்கான வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையில் பாட்டாளி மக்கள் கட்சி முன்வைத்துள்ளது. இந்த சந்தைகளுக்கு பொருட்களை கொண்டு செல்ல வசதியாக இரவு 8.00 மணிக்குப் பிறகு வேளாண் விளைபொருட்களை அரசு பேருந்துகளில் ஏற்றிச் செல்ல அனுமதிக்க வேண்டும்; வேளாண் விளைபொருட்களை ஏற்றிச் செல்லும் சிறிய சரக்குந்துகள், இழுவை ஊர்திகள் ஆகியவற்றுக்கு சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது தான் பா.ம.க. முன்வைத்த யோசனைகளாகும். அவற்றையும் செயல்படுத்த அரசு முன்வர வேண்டும்.

ஒருங்கிணைந்த உழவர் சந்தை வளாகங்கள் உழவர்களின் வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. இத்தகைய சந்தை வளாகங்களை தமிழகம் முழுவதும் அரசு விரிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.

author avatar
Ammasi Manickam