துக்கடா கட்சிகளுக்கு தக்க பாடம் கற்பிக்கப்படும்; அமித் ஷா

0
86

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக நாடு முழுக்க போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. அதிலும் தலைநகர் டெல்லியில் ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதலுக்கு பிறகு, அனைத்துத்தரப்பினரும் தங்களது எதிர்ப்பை பல்வேறு வகையிலும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி போன்ற காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களும் டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கெடுத்தனர்.

இந்த நிலையில் டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “குடியுரிமை சட்டம் தொடர்பாக பொதுமக்களுக்கு தவறான கருத்துக்களை தெரிவித்து டெல்லியில் எதிர்க்கட்சிகள் வன்முறையை தூண்டி வருகின்றன, இதுபோன்ற துக்கடா கேங்குகளுக்கு, உரிய பாடம் கற்பிக்கப்படும்” என்று தெரிவித்தார்.

மேலும் அவர் பேசுகையில், “குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றி டெல்லி மக்களை தவறாக வழிநடத்துவதன் மூலம் டெல்லியின் அமைதியைக் காங்கிரஸ் குலைத்துள்ளது. இந்த சட்டத் திருத்தம் பற்றி நாடாளுமன்றத்திற்குள் விவாதிக்கப்பட்டது. அங்கு யாரும் எதுவும் பேசத் தயாராக இல்லை. நாடாளுமன்றத்தை விட்டு வெளியே வந்தவுடன், குழப்பத்தை ஏற்படுத்தத் தொடங்கி, டெல்லியை கலவர பூமியாக மாற்றிவிட்டனர். பிரதம மந்திரி அவாஸ் யோஜனாவின் பலன்களை, ஏழை மக்களுக்கு, முதல்வர் கெஜ்ரிவால் வழங்கவில்லை. ஏனெனில் அந்த திட்டத்தில் பிரதமரின் பெயர் இணைக்கப்பட்டுள்ளது. மோடி வேகமாக செயல்பட விரும்புகிறார், ஆனால் இந்த ஆம் ஆத்மி அரசு, அதற்கு ஒரு பெரிய தடையாக உள்ளது.

கெஜ்ரிவால் முதல்வராகி, சுமார் 60 மாதங்கள் ஆகிவிட்டன, வாக்குறுதிகள் அனைத்தையும் ஏன் நிறைவேற்றவில்லை. இனியும்கூட இந்த வாக்குறுதிகள் நிறைவேறப் போவதில்லை, விளம்பரத்தால் மட்டுமே அவர்கள் மக்களை ஏமாற்றுகிறார்கள். அவர்கள் வாழ்க்கையில் செய்யும் ஒரே வேலை எதிர்ப்பு மற்றும் மறியல் ஆகியவைதான்” என்று அமித் ஷா தெரிவித்தார்.

author avatar
Parthipan K