ஆந்திரா செல்லும் பேருந்துகள் மாதவரம் பேருந்து நிலையத்துக்குள் நுழைய வேண்டும்! போக்குவரத்து துறை செயலாளர் உத்தரவு!
கோயம்பேட்டில் இருந்து ஆந்திரா செல்லும் பேருந்துகள் அனைத்தும் மாதவரம் பேருந்து நிலையத்துக்குள் நுழைந்து செல்ல வேண்டும் என்று போக்குவரத்து துறை செயலாளர் பணீந்திர ரெட்டி அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை கோயம்பேட்டில் இருந்து வட சென்னை பகுதிகளுக்கும், தமிழகம் மற்றும் ஆந்திர எல்லையோற பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகள் அனைத்தும் மாதவரம் பஸ் நிலையத்துக்குள் நுழையாமல் ஜி.என்.டி சாலை வழியில் சென்று பயணிகளை ஏற்றிச் செல்வதாக புகார்கள் வந்ததது. இதனால் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளானார்கள்.
இதை அடுத்து போக்குவரத்து துறை செயலாளர் பணீந்திர ரெட்டி அவர்கள் ஆய்வு செய்தார். அங்கு ஆய்வு செய்த போது விழுப்புரத்தின் அரசு கழக பேருந்துகள், திருவள்ளூர் மண்டலத்தின் பணிமனைகளில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள்மாதவரம் பேருந்து நிலையத்துக்குள் நுழையாமல் செல்வதை போக்குவரத்து துறை செயலாளர் மணீந்திர ரெட்டி அவர்கள் அறிந்தார்.
இதையடுத்து கோயம்பேட்டில் இருந்து சுண்ணாம்பு குளம், தேர்வாய், அண்ணாமலை சேரி, சத்தியவேடு, கல்லூர், பிளேஸ்பாளையம், முக்கரம்பாக்கம், மையூர், புத்தூர் ஆகிய இடங்களுக்கு செல்லும் தமிழக அரசு பேருந்துகள் நாளை முதல் அதாவது ஜூன் 4ம் தேதி முதல் கோயம்பேடு காய்கனி அங்காடி பஸ் நிலையம் வந்து செல்லும் பொழுது மாதவரம் பேருந்து நிலையத்தின் உள்ளே சென்று பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.