சொந்த கட்சியையே ஆட்டம் காண வைக்கும் அண்ணாமலை! அதிர்ச்சியில் பாஜக தேசிய தலைமை!

0
163

கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்கு தமிழக அரசும், தமிழக அரசியல் கட்சித் தலைவர்களும், கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள். ஏனென்றால் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டப்பட்டால் நிச்சயமாக அது தமிழகத்தில் விவசாய ரீதியாக மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் தமிழகத்தைச் சார்ந்த பல முக்கிய அரசியல் கட்சி தலைவர்களும், முக்கிய அரசியல் கட்சிகளும், கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள்.

ஆனால் கர்நாடக அரசு அந்த அணை கட்டுவதில் மிக தீவிரமாக இருக்கிறது எடியூரப்பா முதலமைச்சராக இருந்து சமயத்திலும் கூட அவரும் இதில் மிகவும் ஆர்வத்துடன் இருந்தார். தற்சமயம் எடியூரப்பா தன்னுடைய முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பின்னர் புதிய முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி ஏற்றுக்கொண்ட பசவராஜ் பொம்மை அவர்களும் மேகதாது அணை கட்டுவதில் மிகவும் தீவிரமாக இருக்கிறார்.ஆனால் அந்த அணை கட்டக்கூடாது என்று தமிழக அரசு சார்பாக பல விதமான கோரிக்கைகள் மத்திய அரசுக்கு வைக்கப்படுகிறது. அதேபோல எதிர்க்கட்சியான அதிமுகவும் மத்திய அரசிடம் இது தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்து வருகிறது.இருந்தாலும் கர்நாடக அரசை பொறுத்தவரையில் மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என்று விடாப்பிடியாக இருந்து வருகிறது.

இந்த சூழ்நிலையில் தமிழக பாஜகவின் தலைவராக இருக்கும் அண்ணாமலை கர்நாடக அரசின் இந்த முடிவிற்கு தன்னுடைய கடுமையான எதிர்ப்பை தெரிவித்து இருக்கிறார். அவர் இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கை ஒன்றில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டப்போவதாக கர்நாடக மாநிலத்தில் புதிதாக பொறுப்பேற்று இருக்கின்ற முதல் அமைச்சர் பசவராஜ் நம்மை தெரிவித்திருக்கிறார் அவருடைய இந்த செயல் வேதனை அளிக்கிறது இது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்திருக்கிறார்.

மத்திய நீர்வளத்துறை அமைச்சர் அணை கட்டுவதற்கு அனுமதி வழங்கக்கூடாது ஒரே கட்சியாக இருந்தாலும் கர்நாடக அரசின் இந்த முடிவை எதிர்த்து எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி தஞ்சாவூரில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணி சார்பாக உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்த அவர், என்னுடைய தலைமையில் தஞ்சை பனகல் பில்டிங் அருகில் ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரத போராட்டம் நடக்கும். மேகதாது அணையை கட்டுவதற்கு கர்நாடக அரசு ஒரு செங்கல் கூட எடுத்து வைக்க இயலாது என்றும், மேகதாது அணை கட்டுவதற்கு நாங்கள் விடமாட்டோம் இந்த போராட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு தரவேண்டும் எனவும் தெரிவித்திருக்கிறார் அண்ணாமலை.

அதேநேரம் மீனவர்களுக்கான வாக்குறுதிகளை திமுக அரசு தன்னுடைய தேர்தல் அறிக்கையில் கூட தெரிவித்திருந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்த பின்னர் அவர்கள் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் திமுக அரசு நிறைவேற்றவில்லை. மீன்வள கொள்கை தொடர்பாக பொதுமக்களுக்கு விளக்கும் விதத்தில் இன்றைய தினம் மாலை 3 மணி அளவில் சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே தமிழக பாஜக மீனவர் அணியின் சார்பாக என்னுடைய தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்திருக்கிறார்.

கர்நாடகத்தில் ஆள்வதும், மத்தியில் ஆட்சியில் இருப்பதும் பாரதிய ஜனதா கட்சி என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். இருந்தாலும் மேகதாது அணை கட்டக்கூடாது என்று தமிழக பாஜக இவ்வளவு உறுதியாக இருப்பது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு முன்னால் இருந்த பாஜகவின் தமிழக தலைவர்கள் யாரும் இந்த அளவிற்கு எதிர்ப்பு காட்டவில்லை என்று சொல்லப்படுகிறது.

ஏதோ பெயருக்கு ஒரு கண்டனத்தை தெரிவித்து விட்டு பேசாமல் இருந்து விடுவார்கள் ஆனால் தற்போது அந்த கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற இருக்கின்ற அண்ணாமலை இந்த அளவிற்கு விடாபிடியாக இருப்பது அனைவரையும் யோசிக்க வைத்திருக்கிறது. அதேநேரம் அவர் எதிர்வரும் சட்டசபைத் தேர்தலில் பாஜக சுமார் 150 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்ததன் வெளிப்பாடுதான் இந்த எதிர்ப்பு என்று சொல்லப்படுகிறது.

அதேநேரம் கர்நாடக மாநிலத்தில் மேகதாது அணை கட்டுவதற்கு சொந்த கட்சியே முட்டுக்கட்டை போடுவது பாஜகவின் தேசியத் தலைமையை சற்று யோசிக்க வைத்து இருப்பதாக சொல்கிறார்கள். இதன்காரணமாக, மேகதாது அணைப் பிரச்சனையில் பாஜகவின் அடுத்த கட்ட நகர்வு எவ்வாறு இருக்கும் என்பதை அனைவரும் உற்று நோக்கிக் கொண்டு இருக்கிறார்கள்.