காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கமா? பாஜக அரசின் துணிச்சலான முடிவு

0
123

காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கமா? பாஜக அரசின் துணிச்சலான முடிவு

மக்களவை தேர்தலில் தேசிய அளவில் எதிர்பார்த்ததை விட அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற பாஜக தேர்தல் வாக்குறுதியில் கொடுத்த திட்டங்கள் அனைத்தையும் விரைவாக நிறைவேற்ற திட்டமிட்டுள்ளதாக கூறுகிறார்கள்.

அந்த வகையில் பாஜக மக்களவை தேர்தலுக்காக வெளியிட்ட தங்களது தேர்தல் வாக்குறுதி அறிக்கையில் கூறிய படி, காஷ்மீருக்கு அளிக்கபட்டிருக்கும் சிறப்பு அதிகாரத்தை பறிப்பது, நாடு முழுவதும் என்சிஆர் பதிவை செயல்படுத்துவது போன்ற கடினமான துணிச்சல் மிக்க முடிவுகளை இந்த முறை மோடி தலைமையிலான பாஜக அரசு அமல்படுத்தும் என தெரிகிறது.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலுக்காக பாஜக கட்சி சார்பில் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், நாட்டின் பாதுகாப்பு, இந்தியாவில் பெரும்பான்மையான மாநிலங்களில் நடைபெறும் சட்ட விரோத குடியேற்றங்கள் தொடர்பாக சில உறுதிமொழிகளை வாக்குறுதிகளாக அளித்திருந்தது.

இது பற்றி தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்ததாவது: தேசத்தின் பாதுகாப்பே முக்கியம். அதை உறுதி செய்வதற்காகவே சமீபத்தில் சர்ஜிக்கல் ஸ்டிரைக், வான்வழி தாக்குதல்கள் போன்ற துணிச்சலான தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதேபோல், தீவிரவாதத்திற்கு எதிராக எந்த சமரசமும் இல்லாத கொள்கையே பின்பற்றப்படும்.

நாட்டிற்கு எதிரான தீவிரவாதத்தை எதிர்த்து போரிட இந்திய பாதுகாப்பு படைக்கு முழு சுதந்திரம் வழங்கப்படும். 

காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டப்பிரிவு 35ஏ, அம்மாநிலத்தின் வளர்ச்சிக்கு தொடர்ந்து தடையாக இருக்கிறது. எனவே, அம்மாநிலத்தின் அனைத்து தரப்பினரும், பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் வாழ்வதை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

காஷ்மீர் பண்டிட்கள் மீண்டும் தங்களின் சொந்த மாநிலத்திற்கு திரும்பி பாதுகாப்புடன் வாழ நடவடிக்கை எடுக்கப்படும். சட்ட விரோத குடியேற்றங்களால் பல பகுதிகளில் மொழி அடையாளங்கள், கலாசாரங்களில் பாதிப்பு ஏற்படுகிறது. அது அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்பிலும் எதிர்விளைவை ஏற்படுத்துகிறது.

எனவே, தேசிய குடிமக்கள் பதிவை (என்சிஆர்) அமல்படுத்துவது விரைவுபடுத்தப்படும். நாட்டின் மற்ற பகுதிகளுக்கும் இது விரிவுபடுத்தப்படும் என்றும் அதில் கூறப்பட்டிருந்தது.

எனவே, நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள பாஜக அரசு, தாங்கள் அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி தனது ஒவ்வொரு வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவதற்கான மிகவும் கடினமான முடிவுகளை கூட எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக நேரு பிரதமராக இருந்த போது, சட்டப்பிரிவு 35ஏ அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டது. இந்த சட்ட பிரிவின் படி, காஷ்மீரில் வேறு மாநிலத்தை சேர்ந்த யாரும் நிரந்தரமாக தங்க முடியாது. நிலம் வாங்க முடியாது. அம்மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே சிறப்பு உரிமைகளும், வேலைவாயப்பில் சலுகைகளும் கிடைக்கும். இதேபோல், காஷ்மீருக்கு தனி கொடி, அரசியலமைப்பை வலியுறுத்தும் சட்டப்பிரிவு 370 யையும் நீக்குவதற்கான நடவடிக்கையை பாஜக அரசு மேற்கொள்ளலாம்.

வங்கதேசத்திலிருந்து சட்ட விரோதமாக அசாமில் நுழைபவர்களை கண்டுபிடிக்க என்சிஆர் வரைவு பதிவு கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் வெளியிடப்பட்டது. அதில், 40.7 லட்சம் நபர்களின் பெயர்கள் நீக்கப்பட்டது பெரும் சர்ச்சையானது. இதில், தற்போது 2.9 லட்சம் நபர்களின் பெயர்கள் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் இறுதி பதிவு வரும் ஜூலை 31ம் தேதி வெளியிடப்பட உள்ளது. இதேபோன்ற பதிவேட்டை தான் நாடு முழுவதும் கொண்டு வர பாஜக அரசு முயற்சிக்கிறது.

author avatar
Parthipan K