Home Blog Page 5657

கொரோனா பாதிப்பை தடுக்க மேலும் ஊரடங்கு நீட்டிப்பு! தெலுங்கானா முதல்வர் அதிரடி நடவடிக்கை!

0

கொரோனா பாதிப்பை தடுக்க மேலும் ஊரடங்கு நீட்டிப்பு! தெலுங்கானா முதல்வர் அதிரடி நடவடிக்கை!

தெலுங்கானா மாநிலத்தில் வருகிற மே 29 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பதாக அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. இதனால் மே 3 தேதியில் இரண்டாம் கட்ட ஊரடங்கு முடிந்த நிலையில் வைரஸ் தொற்றின் தீவிரத்தை தடுக்க மேலும் 14 நாட்கள் நீட்டிப்பதாக மோடி அறிவித்தார். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தெலுங்கானாவில் கொரோனா பாதிப்பை தடுக்கும் வகையில் அமைச்சரவை கூட்டத்தின் ஆலோசனைக்கு பின் ஊரடங்கை நீட்டிப்பதாக அம்மாநில அரசு முடிவு செய்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் முதல்வர் சந்திரசேகரராவ் கூறியிருப்பதாவது ; தெலுங்கானாவில் ஒரே நாளில் 11 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தொற்று எண்ணிக்கை 1,096 ஆக அதிகரித்துள்ளது. மேலும் அன்றைய ஒரே நாளில் 43 பேர் வைரஸ் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மேலும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்று முதலில் வலியுறுத்தியது தெலுங்கானா மாநிலம்தான். இதனை ஏற்று இந்திய பிரதமர் மோடி நாடு முழுவதும் ஊரடங்கை அறிவித்தார். தெலுங்கானாவில் மூன்று மாவட்டங்கள் சிவப்பு மண்டலமாக இருந்து வருகிறது. இம்மூன்று மாவட்டங்களிலும் ஊரடங்கு தளர்வு என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆரஞ்சு மண்டலங்களில் ஓரளவு தளர்வு இருக்கும். மதுவிற்பனையில் 16 சதவீத விலை உயர்வு இருக்கும் என்றும், காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை மதுபானக்கடை திறந்திருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தெலுங்கானாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த வருகிற மே 29 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பதாகவும், பொதுமக்கள் முக கவசம், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.

எலிகளின் அட்டகாசத்தால் சின்னா பின்னமாகிப் போன தேவி திரையரங்கம் – காணொளி இனைக்கப்பட்டுள்ளது

எலிகளின் அட்டகாசத்தால் சின்னா பின்னமாகிப் போன தேவி திரையரங்கம் – காணொளி இனைக்கப்பட்டுள்ளது

கொரோனா பாதிப்பைத் தடுக்கும் வகையில் மார்ச் மாதம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதற்கு முன்னரே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பொதுமக்கள் அதிகம் புழங்கும் மால், கேளிக்கை அரங்கம், திரையரங்கங்கள் மூடப்பட்டன.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன் சென்னையில் உள்ள பிரபல திரையரங்கை திடீரென திறந்து பார்த்தபோது அதிர்ச்சி காத்திருந்தது. அங்கிருந்த அனைத்து இருக்கைகள் , திரை ஆகியவை எலிகளால் கிழித்து நாசப்படுத்தப்பட்டு இருந்தது.

இத்தகவல் மற்ற திரையரங்க உரிமையாளர்களுக்கும் பகிரப்பட்டதையடுத்து, அவர்களும் தங்கள் திரையரங்கங்களைத் திறந்து பார்த்தபோது பல திரையரங்கம் எலிகளால் சூறையாடப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து அனைத்து திரையரங்க உரிமையாளர்களும், திரையரங்க ஊழியர்களை வைத்துச் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Devi Theater in Chennai

தற்போது சென்னை அண்ணாசாலையில் உள்ள பிரபல திரையரங்கமான தேவி திரையரங்கினுள் நிர்வாகத்தினர் ஆய்வு செய்த போது எடுக்கப்பட்ட காணொளி பகிரப்பட்டுள்ளது. அதை நீங்களே பாருங்கள்.

தமிழகத்தில் டாஸ்மாக் திறப்பு – வயது வாரியாக நேரம் ஒதுக்கீடு!

தமிழகத்தில் டாஸ்மாக் திறப்பு – வயது வாரியாக நேரம் ஒதுக்கீடு!

தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வு அற்விக்கப்பட்டதையடுத்து, நாளை முதல் டாஸ்மாக் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதால், சென்னையை தவிர்த்து மற்ற இடங்களில் டாஸ்மாக் கடை திறக்கும் என அறிவிக்கட்டுள்ளது.

இந்நிலையில்,கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், மது வாங்குவதற்கு வயது வாரியாக நேரம் ஒதுக்கீடு செய்து தமிழக காவல்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், நாளை ஒவ்வொரு டாஸ்மாக் கடைகள் முன்பும் 2 போலீசார் மற்றும் 4 ஊர் காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும். மேலும், மதுவாங்குவதற்கு வயது வாரியாக நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, 50-வயதிற்கு மேல் உள்ளவர்கள் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மது வாங்க அனுமதிக்கப்படுவார்கள்.
40 முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் பிற்பகல் 1 மணி முதல் 3 மணி வரை அனுமதிக்கப்படுவார்கள்.
40 வயதுக்கு உட்பட்டவர்கள் பிற்பகல் 03.00 மணி முதல் 5 மணி வரை மதுபானங்கள் வாங்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலியல் தொல்லை கொடுத்த காமெடி நடிகர் – உண்மையைப் போட்டுடைத்த நடிகை

0

பாலியல் தொல்லை கொடுத்த காமெடி நடிகர் – உண்மையைப் போட்டுடைத்த நடிகை

பாக்யராஜின் ‘வீட்ல விசேஷங்க’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி விஜயகாந்த்துடன் பெரிய மருது, பாண்டியராஜனின் சும்மா இருங்க மச்சான் உள்பட பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை பிரகதி.

தமிழில் தாரை தப்பட்டை, இனிமே இப்படித்தான், கெத்து ஆகிய படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளவர் தெலுங்கு திரையுலகில் நிறையப் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தெலுங்கு இணையத்தளத்திற்குப் பேட்டியளித்துள்ள பிரகதி, திரையுலகில் தனக்கு நேர்ந்த மோசமான சம்பவங்கள் பற்றிக் கூறுகையில் தெலுங்கு முன்னணி காமெடி நடிகர் தனக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாகக் கூறியுள்ளார்.
அதில் “மூத்த காமெடி நடிகர் என்னிடம் பாலியல் ரீதியாகத் தகாத முறையில் நடந்த சம்பவத்தை எதிர்கொண்டேன். அந்த நடிகர் நன்றாகவே பழகினார். ஒரு படப்பிடிப்பில் இருவரும் சேர்ந்து நடித்துக்கொண்டு இருந்தபோது அவரது பேச்சும் செயலும் தவறான முறையிலிருந்தன. பாலியல் ரீதியாக மோசமாக அவர் நடந்து கொள்வதை உணர்ந்தேன். ஒரு அளவுக்கு மேல் அவர் தொந்தரவைத் தாங்க முடியவில்லை. இதனால் அவரை எனது கேரவேனுக்குள் அழைத்து உங்கள் நடவடிக்கை கேவலமாக இருந்தது. தவறான முறையில் என்னை அணுகும்படி சிக்னல் கொடுத்தேனா அல்லது எனது உடல்மொழி உங்களை அழைப்பதுபோல் இருந்ததா? படப்பிடிப்பிலேயே உங்களைத் திட்டி இருப்பேன். உங்களுக்கு இருக்கும் மரியாதையைக் கருத்தில் கொண்டு தனியாக அழைத்துச் சொல்கிறேன் என்றேன். அதன்பிறகு அவர் என்னிடம் மோசமாக நடக்கவில்லை”. எனத் தெரிவித்துள்ளார்.

இது தெலுங்கு திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்த இஸ்ரேல்!

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்த இஸ்ரேல்!

கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் பரவத் துவங்கிய கோரோனா வைரஸ் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் மாபெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதுவரையில் உலகம் முழுவதும் 36 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 லட்சத்து 52 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகிய நிலையில், சுமார் 12 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.

அமெரிக்கா, இத்தாலி, ரஷ்யா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் அதிகபட்ச பாதிப்படைந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி கொரோனா வைரசுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டால் மட்டுமே இதிலிருந்து முழுமையாக மீள முடியும் என்ற நிலையுள்ளதால் உலகின் அனைத்து முன்னணி நாடுகளும் கொரோனா தடுப்பு மருந்துகளைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், கொரோனா வைரசுக்கான நோய் எதிர்ப்பு மருந்தை உருவாக்கியுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு உயிரியல் ஆராய்ச்சி ஆய்வகம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் பென்னட் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ஐஐபிஆரில் உருவாக்கப்பட்ட மோனோக்ளோனல் நியூட்ராலைசிங் எதிர்ப்பு மருந்து, பாதிக்கப்பட்டவர்களின் உடலில் நோயை உருவாக்கும் கொரோனாவை அழிக்கிறது. இந்த நோய் எதிர்ப்பு மருந்தின் செய்முறை காப்புரிமையைப் பெற இருக்கிறது. இதன்பிறகு, உலகளவில் உற்பத்தியாளர்கள் இதனை உற்பத்தி செய்வார்கள்.

இந்தியா, அமெரிக்கா ஆகிய உலகின் இரு மிகப்பெரிய சர்வதேச மருந்து நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலில் யெருஹாமில் முதல் தடுப்பூசி உற்பத்தி தொழிற்சாலையைத் திறக்க இஸ்ரேல் அரசு முடிவு செய்துள்ளதாக யெருஹாம் உள்ளூராட்சி மன்றத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இது உலக மக்களிடையே நம்பிக்கையையும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தணிகாசலம் அல்ல ‘Money’காசலம் – போலி மருத்துவரின் முறைகேட்டை அம்பலப்படுத்திய நிருபர்

தணிகாசலம் அல்ல ‘Money’காசலம் – போலி சித்த மருத்துவரின் முறைகேட்டை அம்பலப்படுத்திய நிருபர்

கொரோனா வைரஸ் தொற்று தமிழகத்தில் பரவ தொடங்கிய நாள் முதலாக, ‘என்னிடம் அதற்கு மருந்து உள்ளது,’ என்று கூறி சித்த மருத்துவர் தணிகாசலம் பரபரப்பை ஏற்படுத்தி வந்தார். சமூக ஊடகங்களில் இதுதொடர்பாக அவர் பலவிதமான காணொளிகளையும் பகிர்ந்திருந்தார்.

அவரது பேச்சைத் தமிழக அரசு கேட்க வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வந்த தணிகாசலம், ஒருகட்டத்தில் கொரோனா வைரஸ்க்கான சித்த மருந்தை நானே கண்டுபிடித்தேன் என்றும், அதனைத் தேவைப்பட்டால் சீனாவுக்கு தரவும் தயார், தமிழகத்திலும் பரிசோதிக்கத் தயார் என்றும் தெரிவித்தார்.

எனினும், தமிழக அரசு தணிகாசலம் சொன்ன மருந்தை அங்கீகரிக்கவில்லை என்பதே உண்மை.

தமிழக அரசு ஏற்கனவே கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் போன்றவற்றை கொரோனாவுக்கு எதிரான எதிர்ப்புச் சக்தி அளிக்கக்கூடிய சித்த மருந்துகளாகப் பயன்படுத்தி வருகிறது. இந்த மருந்துகள் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு சித்த மருத்துவமனையின் பரிந்துரைகளின்படியே பொதுமக்களுக்கு விநியோகித்து வருகிறது. ஆனால், தொடர்ச்சியாக, சமூக ஊடகங்கள் வாயிலாக, வித விதமான காணொளிகள், செய்திகளை வெளியிட்டு மக்களைக் குழப்பி வந்த சித்த மருத்துவர் தணிகாசலம் மீது இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குனர் சென்னை போலீசில் புகார் செய்துள்ளார்.

அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை விளக்கம் அளித்துள்ளது. மேலும், தணிகாசலம் பற்றி சமூக ஊடகங்களில் பகிரப்படும் செய்திகள், காணொளிகள் மற்றும் அவர் பரிந்துரைத்த மருந்துகளை யாரும் நம்ப வேண்டாம் எனவும் தமிழக சுகாதாரத் துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. அவர் அரசு அங்கீகாரம் பெறாத நபர் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரபலர் சினிமா நிருபர் ஒருவர் தன்னை எப்படி தணிகாச்சலம் ஏமாற்றினார் என்பதை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவில் கூறியிருப்பதாவது…

“திரு Moneyகாசலம்!
ஒரு திடுக் அனுபவம்!

ராஜ் டிவி, தமிழன் டிவி, விண் டிவி போன்ற ‘டெல்லி செட்’டுகளின் புண்ணியத்தில் வண்டி ஓட்டிக் கொண்டிருந்த பலருக்கு, யு ட்யூப் பெரிய கொடுப்பினை. மொத்த டுபாக்கூர்களும் இப்போ ஒரே வண்டியில்!

நல்ல மாதிரியாக இருந்த நாட்டு வைத்தியத்துக்கு வேட்டு வைத்த புண்ணியவான்களின் லிஸ்ட் பெருகிக் கொண்டே போவது ஒருவகையில் வேதனைதான். பெயருக்கு பின்னால் இங்கிலீஷ் எழுத்துகள் சேர சேர, அம்மருத்துவர்கள் எழுதும் பிரஸ்கிருப்ஷன்கள் பிருஷ்டத்தை பதம் பார்த்துவிடுகிறது. நாட்டு வைத்தியர்கள் வளம் பெற இத்தகைய பணம் பிடுங்கிகளும் ஒரு வகையில் காரணம். (காலப்போக்கில் இவர்களும் அலோபதியர்களை மிஞ்சிவிட்டார்கள்)

பேய்க்கும் நோய்க்கும் பெரிய வித்தியாசமில்லை. பேய்க்கு வேப்பிலை! நோய்க்கு பச்சிலை! அங்கே பூசாரி. இங்கே மருத்துவர். நல்ல மருத்துவர்கள் அமைவது அவரவர் அதிர்ஷ்டம். ‘சுண்டு விரல் நகம் பேர்ந்துருச்சுன்னு போனேன். கட்டை விரலையே கழட்டி எடுத்துட்டான்’ என்று புலம்புகிற அளவுக்கு போய் கொண்டிருக்கிறது நிலைமை.

அப்படியொரு துரதிருஷ்ட துரியோதன தினத்தில்தான் நான் டாக்டர் Moneyகாசலத்தை சந்தித்தேன். இருபது வயது நிரம்பிய என் மகன் அபிஷேக் இரண்டு வயதிலிருந்தே ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டுள்ளான். போகாத டாக்டரில்லை. பார்க்காத வைத்தியம் இல்லை. கட்ட கடைசியில் இங்கிலீஷ் மருந்துக்குதான் அடங்குகிறது எல்லாம். இருந்தாலும் நோயை கட்டுப்படுத்துவதை விட இல்லாமல் செய்வதுதானே இன்பம்? தேடிக் கொண்டேயிருக்கிறேன் ஒரு சிறப்பான வைத்தியத்தை.

ஒரு முறை பேஸ்புக்கில் மேயும்போதுதான் டாக்டர் Moneyகாசலத்தை பற்றி அறிய நேரிட்டது. இதுவரை நான் படித்தவர்களை விட பழகியவர்களை விட இவர் சற்று உண்மையாக இருப்பாரோ? அறிவுக்கண்ணை திறக்கிற அளவுக்கு இருந்தது அவரது அனுபவ ஹிஸ்ட்டிரிகளும், அறிவின் மிஸ்ட்ரிகளும்! நல்லவேளை… Moneyகாசலத்தின் ஃபிரண்ட் லிஸ்ட்டில் எனக்கு நெருங்கிய நண்பரும் பத்திரிகையாளருமான டி.வி.எஸ்.சோமு இருந்தார். நான் சட்டென சோமுவுக்கு போன் அடித்தேன். விஷயத்தை சொன்னவுடன், பையனுக்காக உச் கொட்டினார். ‘இதைவிட எனக்கு என்னங்கய்யா பெரிய வேலை. இப்பவே பேசுறேன்’ என்றார். அடுத்த ஐந்தாவது நிமிஷம் லைனுக்கு வந்தவர், ‘எல்லாத்தையும் சொல்லிட்டேன். இந்தாங்க நம்பரு. போன் அடிச்சுட்டு போயிருங்க’ என்றார்.

வாசலில் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் காத்திருக்க, தெய்வம் இன்னோவாவில் வந்திறங்கியது. ஒரு அரசியல்வாதியின் கம்பீரத்தோடு உள்ளே போனவர், போன வேகத்தில் அழைத்தார் என்னை. ‘சோமு சொன்னாரு. பையனுக்கு வயசு என்னா?’ என்றார். அவனை மேலே கீழே பார்த்தவர் தொட்டுக் கூட பார்க்கவில்லை என்பதுதான் கூடுதல் அம்சம்.

‘மாசம் பத்தாயிரம் ஆவும். மூணு வருஷத்துக்கு கொடுக்கணும். முடியுமா?’

‘அது ஒண்ணும் பிரச்சனையில்ல சார்’ என்றேன்.

‘சோமு அனுப்புனதால மூவாயிரம் டிஸ்கவுன்ட். ஏழாயிரம் கொடுங்க. வெளியில் வெயிட் பண்ணுங்க’ என்றார் இயந்திரம் போல. அதிகபட்சமாக இரண்டு நிமிஷங்களில் முடிந்து போனது டெஸ்ட்டிங். ரேட் பிக்சிங் எல்லாம்.

மனுஷன் பேசாட்டி என்ன. மருந்து பேசும் என்ற முடிவோடு ஏழாயிரத்தை கொடுத்து விட்டு வெளியே வந்தேன். போத்தீஸ், சரவணாஸ் ஸ்டைலில் ஒரு பெரும் பை. உள்ளே பாட்டில் பாட்டிலாக மாத்திரைகளும் திரவங்களும். ‘எல்லாத்துக்கும் மேலேயே அளவும் எப்பப்போ கொடுக்கணும்னு எழுதியிருக்கேன். அடுத்த மாசம் வாங்க’ என்றார். பை கை மாறியது.

அதற்கப்புறம் நான்கு மாதங்கள். ஒரே சீன் திரும்ப திரும்ப ஓடியது

‘பணம் கொடுங்க’.
‘வெளியில் உட்காருங்க’.
‘பை இந்தாங்க’

‘சார்… பையன்ட்ட வர்ற மாறுதல் அப்படியே வேற மாதிரி இருக்கு. நோய் இன்னும் முத்திகிட்டே வருது. அமைதியா இருந்தவன் அரகன்ட்டா மாறிட்டே வர்றான். ரொம்ப ரெஸ்ட்லெஸ்சா இருக்கான்’ என்று ஒவ்வொரு மாதமும் நான் சொல்வதும், ‘அதுக்கு வேற கொடுத்துருக்கேன்’ என்று அவர் சொல்வதுமாக இருக்க, மகனின் நிலைமை அரக்கனின் நிலைமைக்கு போய் கொண்டிருந்தது.

நான் குடியிருக்கும் தெருவின் கடைசியிலிருந்த ஒரு வீட்டுக்காரர், ‘பையன் ரொம்ப கத்துறான் போலிருக்கே?’ என்றார். அவனின் கூச்சலில் வீடே அமைதியிழந்தது. இந்த முறை அவரை சந்திக்கும் போதும் சற்று அழுத்தமாகவே சொன்னேன். சார் இப்படி இப்படி என்று. ‘ம்… அப்படியா? பணம் கொண்டு வந்திருக்கீங்களா?’ என்றார் வழக்கம்போலவே.

இயற்கை வைத்தியம் யானை மாதிரி. பாகன்கள்தான் பிச்சையெடுக்க வைக்கிறார்கள். எட்டணாவோ, நாலணாவோ… வைத்தால்தான் ஆசி! பணம் ஒரு மேட்டரே அல்ல என்பதை எப்படி நான் அவருக்கு உணர வைப்பேன்?

சரி… சில மருந்துகள் நோயை கிளப்பிவிட்டு அடக்கும் போல… என்று நினைத்து அமைதி கொண்டாலும், வீடு அமைதியாக இல்லை. உலகம் தெரியா குழந்தையை மருந்து என்ற பெயரில் கஷ்டப்படுத்துகிறோம் என்று மட்டும் புரிந்தது. திடீரென நள்ளிரவில் உள் மனசு என்னவோ சொல்ல, விழித்துக் கொண்டேன். அருகில் படுத்திருந்த மகனை காணவில்லை. பதற்றத்தோடு எழுந்தால் நட்ட நடுராத்திரியில் குளித்துவிட்டு ஈரம் சொட்ட சொட்ட நின்று கொண்டிருந்தான். அவ்வளவுதான்… இனி Moneyகாசலத்தை பார்ப்பதில்லை என்ற முடிவுக்கு வந்தேன்.

மறுநாளே கிளம்பி ஓடினேன். வில்லிவாக்கத்திலிருக்கும் ஒரு நீரோ சைக்காலஜி மருத்துவரிடம் நடந்தவற்றையெல்லாம் சொன்னேன். அரை மணி நேரம் மகனை சோதித்தார். ‘பதற்றம் வேண்டாம். இதைக் கண்ட்டினியூ பண்ணுங்க’ என்று சில மருந்துகளை எழுதிக் கொடுத்தார். சில நாட்களுக்கு பிறகு வீடு அமைதி நிலைக்கு திரும்பிவிட்டது.

இப்பவும் மன்னாரங் கம்பெனியிலிருந்து மாதம் தோறும் நினைவூட்டல் எஸ்.எம்.எஸ் வரும். அண்மைக்காலமாக யு ட்யூப்களிலும் டி.விகளிலும் ‘கொரானோவுக்கு மருந்து எங்கிட்ட இருக்கு. நம்புங்கடா, இல்லேன்னா செத்துப்போவீங்க’ என்கிறார் Moneyகாசலம்.

மருந்தைவிட வீரியமாக இருக்கிறது Moneyகாசலத்தின் வாய்!” என்று தெரிவித்துள்ளார்.

சந்திரமுகி 2வில் ஜோதிகா?

0

சந்திரமுகி 2வில் ஜோதிகா?

மலையாளத்தில் மோகன்லால், ஷோபனா நடிப்பில் உருவான ‘மணிசித்திரத்தாழு’ எனும் படத்தை தொலைக்காட்சி ஒளிபரப்பில் கண்ட பி.வாசு அதன் உரிமையை சில லட்சங்கள் கொடுத்து வாங்கினார். பின்னர் அதில் முக்கியமான பகுதிகளை வைத்துக் கொண்டு திரைக்கதையை மாற்றியமைத்து ‘ஆப்தமித்ரா’ என்ற பெயரில் கன்னட சூப்பர்ஸ்டாரான விஷ்ணு வரதனை வைத்து இயக்கினார். பாபா படத்தின் தோல்வியால் மிகவும் துவண்டு போயிருந்த ரஜினி, இனி திரைப்படங்களில் நடிப்பதா வேண்டாமா என்ற குழப்பத்திலிருந்த சமயம் அது. வழக்கமாக ஓய்வெடுக்கப் பெங்களூர் செல்லும் ரஜினி, அங்கு மாறு வேடத்தில் உலா வருவது வழக்கம். அப்படி அவர் மாறு வேடமணிந்து திரையங்கிற்க்கு சென்று ‘ஆப்தமித்ரா’ படத்தினை பார்த்து ரசித்துள்ளார். அவருக்கு அந்த படம் மிகவும் பிடித்துப் போக உடனடியாக பி.வாசுவை தொடர்பு கொண்டவர் தனக்கு அந்த அப்படத்தினை தமிழில் நடிக்க தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

சிவாஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் ‘மன்னன்’ உள்ளிட்ட படங்களில் ரஜினி நடித்திருந்தாலும் நீண்ட வருடங்களாக தங்கள் நிறுவனத்திற்கு அவர் படம் நடித்துத் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டே இருந்துள்ளனர் அதன் நிர்வாகிகள். ரஜினியுடன் ‘படையப்பா’ படத்தில் நடித்த போது சிவாஜியும் ரஜினியிடம் தனது நிறுவனத்துப் படம் நடித்துத் தர கேட்கத் தான் நிச்சயம் நடித்துத் தருவதாகக் கூறியுள்ளார். 2001ம் ஆண்டு சிவாஜி உடல்நல குறைவால் மறைந்து போனார். அப்பொழுது ரஜினி ‘பாபா’ படத்தின் நடித்துக் கொண்டிருந்தார். இதனால் தான் அடுத்த படம் நடிக்க வேண்டு என முடிவு செய்தவுடன் சிவாஜி புரொடக்ஷன்சை தொடர்பு கொண்டு தேதிகளைக் கொடுத்தார்.

கன்னடத்தில் ‘ஆப்தமித்ரா’ படத்திற்காக பி.வாசு திரைக்கதையை மாற்றியிருந்தாலும் தமிழுக்காக மீண்டும் திரைகதைய மாற்றி எழுதிய பி.வாசுவிடம், கதையில் நிறைய மாற்றங்கள் செய்தார். வடிவேலுவின் கதாபாத்திரம், வேட்டையன் வேடம் போன்றவை கன்னடத்தில் கிடையாது. முதலில் சந்திரமுகி வேடத்திற்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டவர் சிம்ரன். அவர் ஒப்பந்தமான சில நாட்களிலேயே கர்ப்பம் திரிந்திருந்ததால், படத்திலிருந்து விலகினார். அதனைத் தொடர்ந்து ஒப்பந்தம் செய்யப்பட்டவர் தான் ஜோதிகா.

இப்படி உருவான இப்படம் மாபெரும் வெற்றி பெற்றதையடுத்து கடந்த சில வருடங்களாகவே சந்திரமுகி இரண்டாம் பாகத்தை இயக்க முயன்று வந்தார். சந்திரமுகி 2வில் நடிக்க ரஜினியை தொடர்பு கொண்டவர், அவர் மறுத்த பின்னர் தற்போது ராகவா லாரன்சை நடிக்க வைக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கவிருக்கும் இப்படத்தின் திரைக்கதை வேட்டையன் மன்னனுக்கும், சந்திரமுகிக்கும் இடையே ஆன மோதலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாம். இதனால் சந்திரமுகி கதாபாத்திரத்தை ஜோதிகாவே ஏற்று நடித்தால் நன்றாக இருக்கும் என எண்ணிய பி.வாசு அவரிடம் பேச்சுவார்த்தையைத் துவக்கியுள்ளாராம். ஜோதிகா இதில் நடிப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

வரிசைகட்டி நின்ற புதுமை பெண்கள், 90000 ரூபாய்க்கு சோம பானம் வாங்கிய ‘குடி’மகன் – இது பெங்களூரு கலாட்டா

வரிசைகட்டி நின்ற புதுமை பெண்கள், 90000 ரூபாய்க்கு சோம பானம் வாங்கிய ‘குடி’மகன் – இது பெங்களூரு கலாட்டா

கொரோனா பரவுவதைத் தடுக்கு பொருட்டு, கடந்த மார்ச் 21ம் தேதி ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. முதற்கட்ட ஊரடங்கு ஏப்ரல் 14ம் தேதி முடிவுக்கு வந்த நிலையில் இரண்டாம் கட்டமாக மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.

இதனால் அத்தியாவசிய பொருட்களை விற்கும் மளிகைக் கடைகள், காய்கறி கடைகள், மருந்தகங்கள், அடுமனைகள், உணவகங்கள் மட்டுமே குறிப்பிட்ட நேரத்திற்குச் செயல்பட அனுமதிக்கப்பட்டனர்.

ஒரு சிலர் மொத்தமாக மது பாட்டில்களை வாங்கி இருப்பு வைத்துக் கொண்டாலும் மதுக் கடைகள் மூடப்பட்டதால் குடிமகன்கள் திண்டாடிப் போனார்கள். இதனால் மே 3ம் தேதிக்காகக் காத்திருந்தனர்.

கொரொனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கை மே 17ம் தேதி வரை நீட்டிப்பதாக மத்திய அரசு அறிவித்தது. கொரோனா பாதிப்பை ஆராய்ந்து அதற்கு ஏற்றார் போல் ஊரடங்கைத் தளர்த்திக் கொள்ள மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது.

இதனையடுத்து கர்நாடகா, ஆந்திரா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் இன்று முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அதிகாலை முதலே மதுக்கடைகளில் நீண்ட வரிசையில் நின்று கொண்டிருந்தனர் குடிமகன்கள். இதில் பெண்களும் அதிக அளவில் காணப்பட்டது அனைவரையும் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருந்தது.

இந்நிலையில் மீண்டும் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டால் மதுக்களை வாங்க முடியாதோ என எண்ணிய ஒரு குடிமகன் 52000 ரூபாய்க்கு மது பாட்டில்களை வாங்கியுள்ளார். இது குறித்து நாம் நேற்று செய்தி வெளியிட்டிருந்தது நினைவிருக்கலாம்.

இந்நிலையில் மேலும் ஒரு பெங்களூரில் இவரையும் விஞ்சும் வகையில் சுமார் 95 ரூபாய்க்கு ஒருவர் சோம பானத்தை வாங்கி பத்திரப்படுத்தியிருப்பது தெரிய வந்துள்ளது. இப்படிப்பட்ட குடிமகன்களின் தேச பக்தியால் ஒரே நாளில் 45 கோடி ரூபாய் அளவுக்கு மது பானங்கள் மூலம் வசூலாகியுள்ளதாக கரநாடக அரசு அறிவித்துள்ளது.

NEET, JEE தேர்வுகள் தேதி அறிவிப்பு

NEET, JEE தேர்வுகள் தேதி அறிவிப்பு

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், ஐ.ஐ.டி. என்.ஐ.டி. மற்றும் மத்திய அரசின் நிதி உதவி பெறும் உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் மாணவர்களை சேர்ப்பதற்கான ஜே.இ.இ. (மெயின்) நுழைவுத்தேர்வும், மருத்துவ கல்லூரிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான ‘NEET’ நுழைவுத்தேர்வும் தள்ளிவைக்கப்பட்டிருந்தது.

அதற்க்கு தாங்கள் தயாராகும் பொருட்டு, தேர்வுகள் எப்போது நடத்தப்படும்? என்ற எதிர்பார்ப்பு மாணவர்களிடையே இருந்து வந்தது.

இந்த நிலையில், ஜே.இ.இ. (மெயின்) மற்றும் ‘NEET’ நுழைவுத் தேர்வுகள் நடைபெறும் புதிய தேதிகளை மத்திய மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால் இன்று அறிவிப்பார் என்று அந்த அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கடந்த 3ம் தேதி டெல்லியில் தெரிவித்தார்.

இந்நிலையில் மருத்துவப் படிப்புகளுக்கான NEETநுழைவுத் தேர்வு ஜூலை 26 ஆம் தேதி நடைபெறும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மருத்துவப் படிப்புகளுக்கான NEET நுழைவுத் தேர்வு ஜூலை 26 ஆம் தேதி நடைபெறும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதேபோன்று JEE தேர்வு ஜுலை 18, 20, 21, 22, 23 ஆகிய தேதிகளிலும் JEE advance தேர்வு ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என்றும் மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் தெரிவித்துள்ளார்.

சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது – தமிழக அரசு அறிவிப்பு

சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது – தமிழக அரசு அறிவிப்பு

கொரோனா பரவுவதைத் தடுக்கும் பொருட்டு, கடந்த மார்ச் 21ம் தேதி ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. முதற்கட்ட ஊரடங்கு ஏப்ரல் 14ம் தேதி முடிவுக்கு வந்த நிலையில் இரண்டாம் கட்டமாக மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இதனால் அத்தியாவசிய பொருட்களை விற்கும் மளிகைக் கடைகள், காய்கறி கடைகள், மருந்தகங்கள், அடுமனைகள், உணவகங்கள் மட்டுமே குறிப்பிட்ட நேரத்திற்குச் செயல்பட அனுமதிக்கப்பட்டனர்.

ஒரு சிலர் மொத்தமாக மது பாட்டில்களை வாங்கி இருப்பு வைத்துக் கொண்டாலும் மதுக் கடைகள் மூடப்பட்டதால் குடிமகன்கள் திண்டாடிப் போனார்கள். இதனால் மே 3ம் தேதிக்காகக் காத்திருந்தனர். கொரொனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கை மே 17ம் தேதி வரை நீட்டிப்பதாக மத்திய அரசு அறிவித்தது. கொரோனா பாதிப்பை ஆராய்ந்து அதற்கு ஏற்றார் போல் ஊரடங்கைத் தளர்த்திக் கொள்ள மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது.

இதனையடுத்து கர்நாடகா, ஆந்திரா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் இன்று முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அதிகாலை முதலே மதுக்கடைகளில் நீண்ட வரிசையில் நின்று கொண்டிருந்தனர் குடிமகன்கள். மற்ற மாநிலங்களில் மதுக்கடைகள் திறந்து விடத் தமிழகத்தில் எப்போது மது கடைகள் திறக்கப்படும் என ஏக்கத்துடன் காத்திருந்த ‘குடி’மக்களுக்கு வரும் 7ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் இயங்கும் எனத் தமிழக அரசு நேற்று அறிவித்திருந்தது.

இதற்க்கு எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின், பாமக தலைவர் மருத்துவர் ராமதாஸ் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் தங்கள் கண்டனங்களை தெரிவித்திருந்தனர். கொரோனா தொற்று அதிகரித்து வரும் இந்த நிலையில் மதுகடை திறப்பது ஆபத்தில் முடியும் என எச்சரித்திருந்தனர்.

இந்நிலையில் கொரோனா அதிகமாக பரவி வரும் சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் “சென்னை மாநகர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள அரசு மதுபானக் கடைகள் 07.05.2020 அன்று திரக்கப்படமாட்டாது. இந்த கடைகள் திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.” என்று கூறப்பட்டுள்ளது.