ஒரே ஒரு தேங்காயை வைத்து லட்சங்களில் கொள்ளை… மார்க்கெட்டிங் டீம் வைத்து மந்திர வேலை… நூலிழையில் சிக்கி சேதாரம்..!!

0
75

உலகமே கொரோனா வைரஸின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கும் வேளையில் இங்கு ஒருவர் தேங்காய் சுற்றவிட்டு புதையல் இருப்பதாக கூறி லட்சங்களில் கொள்ளையடித்த சம்பவம் கமூதி அருகில் நிகழ்ந்துள்ளது. கமூதியை அடுத்துள்ள தொப்படையை சேர்ந்த மந்திரவாதி செல்வகுமார், இவர் புதையல் எடுப்பதாக கூறி ஏமாற்றியதாக பல புகார்கள் வந்துள்ளன.

உழைக்காமல் திடீர் பணக்காரன் ஆகும் எண்ணம் கொண்ட சிலரை கண்டுபிடித்து புதையல் ஆசை காட்டி பணம் பறிக்கும் கும்பல் ஒன்று நடமாடி வருகிறது. இவர்கள் மதுரையிலிருந்து வாங்கிவந்த போலியான கற்கள் மற்றும் நாணயங்களை வைத்து அதனைத் தோண்டி எடுத்து புதையல் எடுத்ததாக கூறி மக்களை நம்ப வைத்துள்ளனர்.

இதற்கு இவர்கள் பயன்படுத்துவது ஒரு தேங்காய் மட்டும்தான் அதன் ஒரு முனையில் மெல்லிய நூலை கட்டி சுற்றவைத்து மந்திரம் என்று கூறி வந்துள்ளனர். இது மாதிரியான நிகழ்வுகளை வீடியோவாக எடுத்து வைத்துக்கொண்டு மந்திரவாதி சக்தி மிக்கவர் புதையல் எடுப்பதில் வல்லவர் என்று மக்களிடம் காட்டி நம்ப வைத்துள்ளனர்.

இவர்கள் தேங்காயை சுற்ற வைக்க மட்டும் தங்கள் மோசடி டெக்னிக்கை பயன்படுத்தவில்லை கூடவே இந்த மந்திரவாதியை பற்றி மக்களிடம் கொண்டு சேர்க்கவும் ஒரு மார்க்கெட்டிங் டீமே வைத்துள்ளனர். அந்த டீமில் கிராம நிர்வாக அலுவலர் செல்லப்பாண்டி, கிராம உதவியாளர் மகாதேவன், முருகராஜ், தூத்துக்குடி அருள்சாமி, ஏனாதியை சேர்ந்த முத்து என்ற பெண் உட்பட பலர் உள்ளனர்.

இந்த மோசடி கும்பல் பற்றி புகார் வரவே காவல் கண்காணிப்பாளர் அருண்குமாரின் உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் கிராம நிர்வாக அலுவலர் செல்லப்பாண்டியிடம் புதையல் தேடுவதாக கூறியுள்ளனர். இது பற்றி அறியாத அந்த கும்பல் தேங்காய் மந்திரவாதி செல்வகுமார் இடம் அவரது மார்க்கெட்டிங் டீம் அழைத்துச் சென்றுள்ளது.

இவர்கள் போலீஸ் என்று அறியாத மந்திரவாத கும்பல் வழக்கம் போல நூலை கட்டி தேங்காய் சுற்றவிட்டு தங்கம் மற்றும் வைர புதையல் இருப்பதாக கூறி எடுத்து கொடுத்துள்ளனர். இதனை சோதித்து பார்த்த போலீஸ் தரப்பினர் போலி என்று அறிந்ததும் மந்திரவாதி மற்றும் உடன் வந்தவர்களை சுற்றிவளைத்து பிடித்துள்ளனர்.

போலீசாரின் விசாரணையில் இவர்கள் தேங்காயில் நூலை சுற்ற விட்டு புதையல் எடுத்துத் தருவதாக கூறி பலரிடம் லட்ச லட்சமாக கொள்ளையடித்தது அனைவரையும் திடுக்கிட வைத்தது. காவல்துறையினர் ஊரடங்கு பணியில் தீவிரமாக இருந்து வரும் வேளையில், நாட்டில் இதுபோன்ற திருட்டு புள்ளிங்கோவிடம் இருந்து மக்கள் தான் கவனமாக இருக்க வேண்டும் என்று மட்டும் தெரிகிறது.

author avatar
Parthipan K