Home Blog Page 5793

யாரிடமும் மன்னிப்பு கேட்க முடியாது! பெரியாரிஸ்ட்டுகளுக்கு விபூதி அடித்த ரஜினிகாந்த்..?

0

யாரிடமும் மன்னிப்பு கேட்க முடியாது! பெரியாரிஸ்ட்டுகளுக்கு விபூதி அடித்த ரஜினிகாந்த்..?

கடந்த சில தினங்களுக்கு முன்பு துக்ளக் பத்திரிகையின் பொன்விழாவில், திராவிடர் கழகத்தின் பெயரில் 1971 ஆம் ஆண்டு சேலத்தில் ஒரு பேரணி நடந்தது. அந்த பேரணிக்கு பெரியார் தலைமை தாங்கினார் என்றும், அதில் ராமர் மற்றும் சீதையின் உருவங்கள் ஆடை இல்லாமல் கொண்டு வந்ததாகவும் ரஜினி பேசியிருந்தார்.

இந்த சர்ச்சையான கருத்து தவறானது என்றும், நடைபெறாத ஒன்றை ரஜினிகாந்த் பேசுவதாக திராவிட இயக்கங்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து காவல் நிலையங்களில் நடிகர் ரஜினிகாந்த் மீது புகார் அளித்தனர். மேலும் இந்த விசயத்தில் ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையேல் அவரது வீட்டு முன்பு போராட்டம் நடத்தப்படும் என்று திராவிட அமைப்புகள் அறிவித்தன.

இது சம்பந்தமாக இன்று செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் கூறியதாவது: திராவிட கழகப் பேரணியில் ராமர் மற்றும் சீதையின் படங்கள் ஆடை இல்லாமல் கொண்டு வந்த ஆங்கில பத்திரிகை ஒன்றை காட்டினார். இந்த ஆதாரம் மற்றும் தான் கேள்விப்பட்ட விஷயங்களை வைத்து உண்மையை பேசியுள்ளேன், அதற்காக யாரிடமும் மன்னிப்பு கேட்க முடியாது என்று அதிரடியாக கூறினார்.

பேரணி குறித்து தகுந்த ஆதாரங்களுடன் இணையத்தில் திராவிட கழகத்தினர் பதிவு செய்வது பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது, அவர்களுக்கு தெரிந்ததை அவர்கள் சொல்கிறார்கள், நான் எனக்கு தெரிந்ததை சொல்கிறேன் என்று தெரிவித்துவிட்டு வேகமாக தனது வீட்டின் உள்ளே சென்றார். ரஜினியின் தடாலடியான பேச்சு திராவிட பெரியாரிஸ்ட்டுகளுக்கு விபூதி அடித்ததுபோல ஆகிவிட்டது.

தஞ்சை கோயில் குடமுழுக்கு: தமிழில் நடத்த ஆணையிட வேண்டும்! சீமான் வலியுறுத்தல்!!

0

தஞ்சை கோயில் குடமுழுக்கு: தமிழில் நடத்த ஆணையிட வேண்டும்! சீமான் வலியுறுத்தல்!!

தஞ்சை பெருவுடையார் கோயில் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோயிலாகும். இந்த கோயிலின் குடமுழுக்கு வருகிற பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. இவ்விழாவை தமிழில் நடத்த வேண்டும் என்று தமிழ் மரபு சித்தர்கள், தமிழ் பற்றாளர்கள் மற்றும் பல்வேறு தரப்பில் கோரிக்கை எழுந்து வருகிறது.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்நாடு அரசே! எங்கள் தமிழ்ப் பேரரசன் இராசராச சோழன் கட்டிய தஞ்சை பெருவுடையார் திருக்கோயிலுக்கு தமிழில் தமிழர் மரபுப்படி திருக்குட முழுக்கை நடத்த வேண்டுமாறு ஆணையிடுக என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இது சம்பந்தமாக தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அவர்கள் பல ஆண்டுகளாக உள்ள வழிபாட்டு நடைமுறையை உடனே எப்படி மாற்றுவது என்று கூறினார். தமிழில் குடமுழுக்கு நடந்த வேண்டும் என்பது குறித்து தமிழ் அறிஞர்களின் கருத்துகள் கேட்கப்படும் என்றும் பேசியிருந்தார்.

தஞ்சை கோயிலின் சிற்பம், கல்வெட்டு, அமைப்பு என தமிழனின் கட்டடக் கலையை இன்றும் உலகிற்கு பறைசாற்றுகிறது. மேலும் கோயிலின் சிறப்பு வாய்ந்த அம்சங்களும் ஒட்டுமொத்த தமிழ் இனத்திற்கும் பெருமை சேர்ப்பதாகும். இத்தகைய பெருமை வாய்ந்த திருத்தலத்தில் தமிழில் வழிபாடு செய்யாமல் போனால் அது சரியானதாக இருக்காது என்று சமூக வலைதளம் மற்றும் பல்வேறு தரப்பில் கருத்து கூறப்படுகிறது. மேலும், தமிழ் குடமுழுக்கு வேண்டும் என்று டுவிட்டரில் தற்போது டிரெண்ட்டாகி வருகிறது.

175 கி.மீ வேகத்தில் பந்துவீசி வியக்க வைத்த இலங்கை வீரர்:17 வருட சாதனை முறியடிப்பு !

0

175 கி.மீ வேகத்தில் பந்துவீசி வியக்க வைத்த இலங்கை வீரர்:17 வருட சாதனை முறியடிப்பு !

சமீபத்தில் நடந்த போட்டி ஒன்றில் இலங்கையைச் சேர்ந்த 17 வயது மத்திஷா பதிரானா என்ற பவுலர் 175 கி மீ வேகத்தில் பந்து வீசி அசத்தியுள்ளார்.

உலகளவில் வேகமாக பந்துவீசும் பவுலர்களுக்கு என்று தனியாக ரசிகர் பட்டாளம் உள்ளது. அந்த வகையில் சோயிப் அக்தர், மிட்செல் ஸ்டார்க், பிரெட் லி மற்றும் ஷான் டைட் போன்றோர் மிக வேகமாகப் பந்துவீசி பேட்ஸ்மேன்களை கதறடித்துள்ளனர்.

இதில் கடந்த 2003 ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானின் சோயிப் அக்தர் இங்கிலாந்துக்கு எதிராக வீசிய பந்து 163.1 கி. மீ வேகத்தில் பதிவாகி இன்றளவும் மிக வேகமான பந்து என்ற சாதனையைத் தக்கவைத்துள்ளது. ஆனால் இந்த சாதனை 17 ஆண்டுகளுக்குப் பிறகு 17 வயது இளம் வீரர் ஒருவரால் தகர்க்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி 19 ஆம் தேதி இந்தியா மற்றும் இலங்கைக்கு எதிரான 19 யதுக்குட்பட்டோர் போட்டி நடந்தது. அப்போது பந்து வீசிய மத்திஷா பதிரானா 175 கி.மீ வேகத்தில் வீசியதாக பதிவு செய்யப்பட்டது.  இதைப் பார்த்த கிரிக்கெட் ரசிகர்கள் ஆச்சர்யத்தில் மூழ்கினர். இதன் மூலம் பாகிஸ்தானின் ஷோயப் அக்தர் கைவசமிருந்த 17 ஆண்டுக்கால சாதனை ஒன்றைத் தகர்த்துள்ளார்.

ஆனால் இது உண்மையான வேகமில்லை; ஏதேனும் இயந்திரக் கோளாறு காரணமாக இப்படி தவறாக பதிவாகியிருக்கலாம் என இந்திய ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் போட்டி முடிந்து 3 நாட்களுக்கு மேலாகியும்  ஐசிசி இதுவரை இயந்திரக் கோளாறு என எதையும் அறிவிக்காததால் அது உண்மையான வேகம்தான் என்ற முடிவுக்கு வர வேண்டியுள்ளது.

பிறரை சந்திக்கும் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும்..? சின்ன சின்ன டிப்ஸ்!!

0

பிறரை சந்திக்கும் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும்..? சின்ன சின்ன டிப்ஸ்!!

பிறரை சந்திக்கும் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும்..? சின்ன சின்ன டிப்ஸ்!!
  • பிறருடன் பேசும்போது அவரது கண்களைப் பார்த்து பேசுங்கள். குற்ற உணர்வு உள்ளவர்கள்தான் பார்வையை தாழ்த்திக் கொண்டோ அல்லது வேறு திசையை பார்த்தோ பேசுவார்கள்.
  • மற்றவருடன் கை குலுக்கும் போது உங்கள் கைகளில் உறுதி தெரியட்டும். இது உங்கள் மீதான நம்பிக்கையை அதிகரிக்கும்.
  • உங்களைவிட வயது குறைந்தவர்களை பெயர் சொல்லி அழைப்பது உங்கள் மீதான நெருக்கத்தை அதிகரிக்கும்.
  • உங்களுக்கு நெருக்கமான நபராக இருந்தாலும் அவரது தனிப்பட்ட கேரக்டரை விமர்சிக்க வேண்டாம். சிலர் இதை விரும்புவதில்லை.
  • யாரை சந்தித்தாலும் சிறு புன்னகையோடு பேசுங்கள். சிரித்த முகமே நீங்கள் வெற்றி பெறுவதற்கான அடையாளம்.
  • பிறரிடம் தேவையற்ற கோபத்தை காட்டாமல் அன்பாக பேசி உங்கள் வேலையை முடித்துக் கொள்ளுங்கள். இதுவே சரியான வழி.
  • பலருக்கு முன்னால் உங்களை திட்டினால் கோபம் வரும்தானே, அதனால் மற்றவரையும் பலர் முன்பு திட்டாதீர்கள். தனியே சந்திந்து பொறுமையாக எடுத்து கூறுங்கள்.
  • நல்ல உடைகளை அணிந்து கொண்டு வெளியே செல்லுங்கள், வேலைக்கு செல்லும் நேரத்தில் பேண்ட், சர்ட் டக் இன் செய்ய வேண்டியது அவசியமான ஒன்று.
  • சந்திக்கும் நபரை நீ , வா, போ என ஒருமையில் பேசாமல் வாங்க, போங்க அல்லது சார், மேடம் என்று அழைத்தால் உங்கள் சந்திப்பு இனியதாக இருக்கும்.
பிறரை சந்திக்கும் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும்..? சின்ன சின்ன டிப்ஸ்!!

குறிப்பு : எப்போதும் நீங்கள் நீங்களாகவே இருங்கள். உங்கள் மீது தவறு இருந்தால் திருத்திக் கொள்ளுங்கள். யாருக்காகவும் உங்களுடைய இயற்கையான குணத்தை மாற்றிக் கொள்ள வேண்டாம்.

ஹிட் கொடுத்த இயக்குனருடன் மீண்டும் கைகோர்த்த சந்தானம் : பூஜையுடன் தொடக்கம் !

0

ஹிட் கொடுத்த இயக்குனருடன் மீண்டும் கைகோர்த்த சந்தானம் : பூஜையுடன் தொடக்கம் !

சந்தானத்துக்கு ஹிட் படமாக அமைந்த ஏ 1 படத்தின் இயக்குனர் ஜான்சனுடன் ஒரு படத்தில் இணைந்துள்ளார்.

சந்தானம் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த பிறகு அவர் நடித்த படங்கள் பெரிதாக ஓடவில்ல. அதேப்போல காமெடிக்கு பெயர் போன அவர் படங்களில் காமெடி பஞ்சமும் உருவானது. இதையடுத்து சில வருடங்களாக ஒரு ஹிட்டுக்காக காத்திருந்த சந்தானத்துக்கு ஏ 1 படம் மூலம் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தினார்.

அதேப்போல இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்களும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன. இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருந்தார். அந்த படத்தின் காமெடிக் காட்சிகள் பலதரப்பட்ட ரசிகர்களாலும் விரும்பி பார்க்கப்பட்டது. அதனால் படம் அனைத்துத் தரப்பினருக்கும் லாபத்தைக் கொடுத்தது. இதையடுத்து இப்போது மீண்டும் இயக்குனர் ஜான்சனுடன் அவர் கைகோர்த்துள்ளார்.

ஏ 1 படத்தில் பணிபுரிந்த அதேக் கூட்டணி இந்த படத்திலும் பணியாற்ற உள்ளது. சந்தானம் – ஜான்சன்.கே – சந்தோஷ் நாராயணன்  கூட்டணியில் உருவாக உள்ள இந்த படத்தின் பூஜை இன்று போடப்பட்டது. இதில் சந்தானத்துடன் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

ஏ 1 படம் ரசிகர்களிடம் ஆதரவைப் பெற்றாலும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை கேலி செய்வதாக சொல்லி அவர்கள் படக்குழுவினருக்குக் கண்டனம் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பதவி விலகிய அமித் ஷா : புதிய தலைவர் தேர்வு ! பாஜக தலைவர்கள் வாழ்த்து !

0

பதவி விலகிய அமித் ஷா : புதிய தலைவர் தேர்வு ! பாஜக தலைவர்கள் வாழ்த்து !

பாஜகவின் புதிய தேசிய தலைவராக ஜே பி நட்டா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பாஜகவின் தேசிய தலைவராக இருந்து வந்த அமித் ஷா மத்திய உள்துறை அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டார். பாஜகவில் ஒரு நபருக்கு ஒரு பதவி என்ற விதி உள்ளதால் அமித்ஷா தனது கட்சிப் பொறுப்புகளில் இருந்து விலக வேண்டிய சூழல் உருவானது.

பதவி விலகிய அமித் ஷா : புதிய தலைவர் தேர்வு ! பாஜக தலைவர்கள் வாழ்த்து !

ஆனாலும் அவர் சில மாதங்கள் தேசிய தலைவர் பதவி வகித்து வந்தார். இதனால் பாஜக தலைவர் தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானது. இதனால் பிப்ரவரி 8 ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆனால் பாஜக தலைவர்கள் அனைவரும் ஏகமனதாக ஜே பி நட்டாவைத் தேர்ந்தெடுக்க முடிவு செய்தனர்.

இதனால் தேர்தல் நடத்த வேண்டிய சூழல் உருவாகாமல் போனது. இந்நிலையில் இன்று கட்சியின் பல்வேறு நிர்வாகிகளும் பங்கேற்ற கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பாஜக நிர்வாகிகள் ஜே.பி. நட்டாவின் பெயரை பரிந்துரை செய்து முன்மொழிந்தனர். அவரை தவிர வேறு யாரும் தலைவர் பதவிக்கு நிற்காததால் அவர் ஏக மனதாக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதையடுத்து பாஜக தலைவர்கள் மற்றும் அதன் தோழமைக் கட்சி தலைவர்கள் ஜே பி நட்டாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தாமதமாக வந்த அரவிந்த் கெஜ்ரிவால் : புறப்பட்டு சென்ற அதிகாரிகள் ! வேட்புமனுத் தாக்கலில் சிக்கல் !

0

தாமதமாக வந்த அரவிந்த் கெஜ்ரிவால் : புறப்பட்டு சென்ற அதிகாரிகள் ! வேட்புமனுத் தாக்கலில் சிக்கல் !

டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்காக வேட்புமனுத் தாக்கல் செய்ய சென்ற டெல்லி முதல்வர் தாமதமாக சென்றதால் அவரால் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்ய முடியவில்லை.

டெல்லியில் இப்போது அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. டெல்லி சட்டமன்றத்துக்கான தேர்தல் வரும் பிப்ரவரி 8 ஆம் தேதி நடக்க இருக்கிறது. அதன் வாக்கு எண்ணிக்கை 11 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

தாமதமாக வந்த அரவிந்த் கெஜ்ரிவால் : புறப்பட்டு சென்ற அதிகாரிகள் ! வேட்புமனுத் தாக்கலில் சிக்கல் !

இந்நிலையில் இன்று ஆம் ஆத்மி கட்சி முதல்வர் வேட்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் வேட்புமனுத் தாக்கல் செய்ய சென்றார். தனது தாய் தந்தையரிடம் ஆசி வாங்கி வீட்டில் இருந்து புறப்பட்ட அவர், வாகனத்தில் வாக்கு சேகரித்தவாறே வேட்புமனுத் தாக்கல் செய்ய புறப்பட்டார்.

அவர் செல்லும் வழியெல்லாம் தொண்டர்கள் சூழ்ந்து கொள்ள அவர்களிடம் நின்று பேசிவிட்டு சென்றார். இதுபோல பல இடங்களில் நடந்ததால் அவரால் 3 மணிக்குள் அலுவலகத்துக்குள் செல்ல முடியவில்லை. இதையடுத்து அதிகாரிகள் புறப்பட்டு சென்றுவிட்டதால் அவரால் இன்று வேட்புமணுத் தாக்கல் செய்ய முடியவில்லை.

இதுபற்றி பத்திரிக்கையாளர்களிடம் பேசிய கெஜ்ரிவால் ‘எனக்கு மக்கள் தான் முக்கியம். அவ்ர்களிடம் உரையாடிவிட்டு வந்ததால் தாமதமாகி விட்டது. காலதாமதத்தை பற்றி நான் கவலைப்படவில்லை. நாளை வந்து வேட்புமனு தாக்கல் செய்வேன். ‘எனக் கூறியுள்ளார். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பான சூழல் உருவானது.

பிரசாந்துக்கு அடித்தது ஜாக்பாட் : அந்தாதூன் ரீமேக்குக்கு இவர்தான் சரியான இயக்குனர் !

0

பிரசாந்துக்கு அடித்தது ஜாக்பாட் : அந்தாதூன் ரீமேக்குக்கு இவர்தான் சரியான இயக்குனர் !

பிரசாந்த் நடிக்க இருக்கும் அந்தாதூன் படத்தின் தமிழ் பதிப்பை இயக்க மோகன் ராஜா ஒப்பந்தம் ஆகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த 2018 ஆம் வருடம் அக்டோபர் மாதம் பிரபல இந்தி நடிகர் ஆயுஷ்மான் குர்ரானா, தபு மற்றும் ராதிகா ஆப்தே ஆகியோர் நடிப்பில் வெளியானத் அந்தாதூன் திரைப்படம் வெற்றி பெற்றது.

நெட்பிளிக்ஸில் வெளியான பின்பு அது உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்தது.  இதையடுத்து அந்த படத்தை பிற மொழிகளில் ரீமேக் செய்ய மிகப்பெரிய போட்டி நிலவ, தமிழ் ரீமேக் உரிமையை தயாரிப்பாளர் மற்றும் நடிகர் தியாகராஜன் கைப்பற்றினார்.

தமிழில் கதாநாயகனாக யார் நடிக்கப் போவது என்ற ரசிகர்களுக்கு சந்தேகம் எழ தனது மகன் பிரசாந்தை அதில் நடிக்க வைக்கப் போவதாக அறிவித்தார். பல ஆண்டுகளாக வெற்றிக்காக பிரசாந்த் இந்த படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். இதனால் இந்த படத்தை பிரபல இயக்குனர் யாராவதுதான் இயக்க வேண்டும் என்று முடிவெடுத்தார்.

பிரசாந்துக்கு அடித்தது ஜாக்பாட் : அந்தாதூன் ரீமேக்குக்கு இவர்தான் சரியான இயக்குனர் !

அதனால் முதலில் கௌதம் மேனனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அவர் தனது வேறு படங்களின் வேலையில் இருப்பதால் இப்போது அந்த படத்தை  இயக்க மோகன் ராஜாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. தனி ஒருவன், வேலைக்காரன் ஆகிய படங்களுக்குப் பிறகு  இயக்குனர் மோகன் ராஜா இயக்க இருப்பதால் படத்தின் மேல் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

மோகன் ராஜா ரீமேக் படங்களை இயக்குவதில் கில்லாடி எனப் பெயர் பெற்றவர். அவர் இயக்கத்தில் உருவான ஜெயம், எம் குமரன், சம்திங் சம்திம்ங், சந்தோஷ் சுப்ரமண்யம் மற்றும் தில்லாலங்கடி ஆகிய படங்கள் தெலுங்கில் இருந்து ரீமேக் செய்யபட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

தோனியின் ஒப்பந்த நீக்கம் ! பின்னணியில் பாஜகவா ? வைரலாகும் டிவிட் !

0

தோனியின் ஒப்பந்த நீக்கம் ! பின்னணியில் பாஜகவா ? வைரலாகும் டிவிட் !

தோனியின் பிசிசிஐ ஒப்பந்த நீக்கத்துக்குப் பின்னணியில் பாஜக செயல்படுவதாக டிவிட் ஒன்று வெளியாகி வைரல் ஆகியுள்ளது.

பிசிசிஐ நிர்வாகம் ஆண்டு தோறும் இந்திய அணி வீரர்களுக்கான ஊதியப் பட்டியல் விவரங்களை ஆண்டு தொடக்கத்தில் வெளியிடும். இதில் இந்த ஆண்டுக்கான பட்டியல் தோனி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. கடந்த ஆண்டு ஏ பிரிவில் இருந்த தோனி ஆண்டுக்கு 5 கோடி ரூபாய் சம்பளம் பெற்றார். ஆனால் இந்த ஆண்டு அவர் எந்த பிரிவிலும் இடம்பெறவில்லை. இதன் மூலம் தோனியின் கிரிக்கெட் வாழ்க்கை கிட்டதட்ட முடிவுக்கு வந்துள்ளது.

தோனியின் ஒப்பந்த நீக்கம் ! பின்னணியில் பாஜகவா ? வைரலாகும் டிவிட் !

தோனி, கடைசியாக 2019 ஆம் ஆண்டு நியுசிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் விளையாடினார். அதன் பின்னர் எந்த ஒரு சர்வதேசப் போட்டியிலும் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தோனி இந்திய அணிக்காக இனிமேல் தொடர்ந்து விளையாடுவது பகல்கனவுதான் என்ற சூழ்நிலை உருவாகியுள்ள நிலையில் அவரது ரசிகர்களுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் சி எஸ் கே அணிதான்.

தோனியின் வயது காரணமாகவே அவர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக நினைத்த வேளையில் அதற்குப் பின்னால் பாஜகவின் செயல் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஸ்வீடிஷ் வாழ் பேராசிரியரான அஷோக் ஸ்வெய்ன் தனது டிவிட்டில், ‘தோனியை தனது தேச பக்தியை நிருபிக்க ராணுவத் தொப்பியை அணிந்தது, ராணுவச் சின்னத்தை கிளவுஸில் அணிந்தது என பலவற்றையும் செய்துவிட்டார். ராணுவத்திலும் சேர்ந்தது பணியாற்றிவிட்டார். ஆனால் அவர் ஜார்கண்ட் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யாததால் அவர் தனது ஒப்பந்தத்தை இழந்துள்ளார். இந்தியனாக இருக்க பாஜகவில் சேருங்கள்’ எனத் தெரிவித்து சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளார்.

திமுக காங்கிரஸ் கூட்டணி தொடருமா? பரபரப்பான சூழ்நிலையில் திமுக செயற்குழு அவசரக் கூட்டம்

0

திமுக காங்கிரஸ் கூட்டணி தொடருமா? பரபரப்பான சூழ்நிலையில் நாளை திமுக செயற்குழு அவசரக் கூட்டம்

உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினரிடையே உரசல் ஏற்பட்டுள்ள இந்த பரபரப்பான அரசியல் சூழலில் நாளை திமுக செயற்குழு அவசரக் கூட்டம் சென்னையில் நடைபெறவுள்ளது. சென்னையிலுள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நாளை காலை 10 மணி அளவில் கூட்டம் நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த செயற்குழு அவசரக் கூட்டத்தில் கூட்டணி உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்த முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதில் காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி, மண்டலம் வாரியாக மாநாடு நடத்துவது மற்றும் திமுகவில் கட்சியின் அமைப்பில் மாற்றம் செய்வது என்பன உள்ளிட்ட பல முக்கியமான முடிவுகள் குறித்து விவாதிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாளை காலை 10 மணிக்கு சென்னையில் நடைபெறவுள்ள இந்த திமுக செயற்குழு அவசரக் கூட்டம் தொடர்பான அறிவிப்பை அக்கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்திருக்கிறார்.திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினரிடையே மோதல் ஆரம்பித்துள்ள இந்த நிலையில் மேலும் காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணியை தொடரலாமா வேண்டாமா என திமுக செயற்குழு உறுப்பினர்களின் கருத்தை அறிந்து கொள்ளும் வகையில் தான் திமுக தலைவர் ஸ்டாலின் இந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

திமுக காங்கிரஸ் கூட்டணி தொடருமா? பரபரப்பான சூழ்நிலையில் திமுக செயற்குழு அவசரக் கூட்டம்

மேலும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுக்கு இடம் கொடுப்பது பற்றியும் நாளை நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை வருடங்களே உள்ள நிலையில் கட்சியை பலப்படுத்தும் வகையில் மண்டல வாரியாக மாநாடுகள் நடத்துவது பற்றியும் இந்த செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. அதேபோல், கட்சியின் அமைப்புகளில் சில மாற்றங்களை ஏற்படுத்துவது குறித்தும் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிராமப்புறங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் முடிந்து தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் அடுத்து வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சி, நகராட்சிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்குவது குறித்தும் நாளைய தினம் நடைபெறும் இந்த செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி தொடருமா இல்லையா என்பதை இந்த செயற்குழு கூட்டம் முடிவு செய்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.