உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு! அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சி!

0
93
Staff
Staff

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் ஆகியோர் தபால் மூலம் வாக்களிக்க தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. அதேபோல் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்களும் தபால் ஓட்டு செலுத்தும் பணி கடந்த 14ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என 4.36 லட்சம் பேர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதில் சுமார் 38,000 பேருக்கு அஞ்சல் வழி வாக்குச்சீட்டுக்கள் அனுப்பப்படவில்லை. அப்படி வாக்குச்சீட்டு கிடைக்கப்பெற்றவர்களுக்கும் பதிவு பெற்ற அலுவலரின் கையொப்பம் இல்லாததால், 26 ஆயிரம் வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இதனால் கடந்த எம்.பி. எலெக்‌ஷனின் போது 63 ஆயிரம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

எனவே வர உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலிலும் சுமார் 5 லட்சத்துக்கும் அதிகமான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். நாடாளுமன்ற தேர்தலைப் போல் இந்த முறையும் தமிழகத்தில் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தபால் வாக்குகள் பதிவு செய்வதிலும் நடைமுறைச் சிக்கல் உள்ளதாக கூறி, அவர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் வாக்களிக்க ஏதுவாக தனி வாக்குச்சாவடி அமைக்க கோரி தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மின்னணு மூலம் வாக்களிக்க அனுமதி வழங்க இயலாது எனவும், தபால் மூலம் அவர்கள் வாக்களிக்கலாம் எனவும் தேர்தல் ஆணையம் தரப்பில் அளித்த விளக்கத்தை ஏற்று, அவர்கள் தபால் மூலம் வாக்களிக்க போதிய கால அவகாசம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.

மேலும், வாக்களிக்க தவறியவர்களின் எண்ணிக்கை 10 சதவீதத்துக்கும் குறைவாக இருப்பதையும் உறுதி செய்யவும் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால் இந்த உத்தரவை தலைமை தேர்தல் அதிகாரி வேண்டுமென்றே அவமதித்து விட்டதாக கூறி, தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தபால் வாக்கு பதிவு செய்வதற்காக எடுத்த நடவடிக்கைகளை பட்டியலிட்டுள்ளர். மேலும், தபால் வாக்குப்பதிவு செய்ய விண்ணப்பித்த 114 பேரின் விண்ணப்பங்கள் மட்டும் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும், இது 0.3 சதவீதம் தான் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதை பதிவு செய்த நீதிபதிகள், தலைமைத் தேர்தல் அதிகாரியின் மனு திருப்தி அளிக்கும் வகையில் இருப்பதாகவும், வேண்டுமென்றே நீதிமன்ற உத்தரவை அவமதித்ததாக தெரியவில்லை எனவும் கூறி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து உத்தரவிட்டனர். மேலும், மிகப்பெரிய பணியான தேர்தல் நடத்தும் பணியில் அரிதான தவறுகளை நீதிமன்ற அவமதிப்பாக கருத முடியாது எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

author avatar
CineDesk