இனி தில்லுமுல்லு செல்லாது! தேர்தல் ஆணையத்திற்கு உயர் நீதிமன்றம் திடீர் உத்தரவு!

0
72

தமிழகத்தில் கொரோனா தொற்றின் வேகம் தீயாய் அதிகரித்து வருகிறது. கடந்த 5 நாட்களாகவே ஆயிரத்தைக் கடந்து வந்த கொரோனா தொற்று தற்போது 2 ஆயிரத்தை தொடும் அளவிற்கு நெருங்கியுள்ளது. இந்நிலையில் தமிழகம்,கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் ஆணையம் சட்டமன்ற தேர்தலை அறிவித்துள்ளது.

கொரோனா தொற்று பரவாமல் தேர்தலை நடத்தி முடிப்பது குறித்து பல்வேறு ஆலோசனைகளை தேர்தல் ஆணையம் நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளில் தபால் வாக்குப்பதிவு செய்ய முதன் முறையாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி தேர்தலுக்கு ஒரு வாரத்துக்கு முன்னரே தபால் வாக்கு படிவம் கொடுக்கப்பட்டு அவர்களது வாக்குகள் வீடுகளுக்கே சென்று பெறப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

தமிழகத்தில் தபால் வாக்கு செலுத்துவதற்கான படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டு வாக்காளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். சென்னையில் மட்டும் 7,300 பேர் தபால் வாக்கு அளிக்க தேர்வாகினர். தபால் வாக்குகளை திரும்பப்பெறும் பணியும் சென்னையில் இன்று தொடங்கியது.

இதனிடையே, தபால் வாக்கு அளிப்போரின் பட்டியலைக் கேட்டு, எதிர்க்கட்சிகள் தொடர்ந்த வழக்கு விசாரணை, சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையம், 29 ஆம் தேதிக்குள் தபால் வாக்கு அளிப்போரின் பட்டியல் அரசியல் கட்சியினருக்கு அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், தபால் வாக்குகளை சிசிடிவி கேமரா பொருத்திய அறையில் பாதுகாக்க வேண்டுமென, தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தபால் வாக்குகளில் எந்த ஒரு குற்றச்சாட்டும் இடம்பெறாத வகையில் கண்காணிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

author avatar
CineDesk