இன்று ஆளுநரை சந்திக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்! முதல்வரின் கோரிக்கையை ஏற்பாரா ஆளுநர்?

0
68

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழக சட்டசபையில் இந்த நீட் தேர்வுக்கு எதிராக கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அந்த தீர்மானம் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் ஆளுநரால் கவனிக்கப்படாமல் தொடர்ந்து அந்த மசோதா கிடப்பில் போடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அந்த மசோதாவிற்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என்று பலமுறை மாநில அரசு சார்பாக அவரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனாலும் அவரிடமிருந்து எந்த விதமான சம்மதமும் வரவில்லை.

இந்த நிலையில் சமீபத்தில் தற்போது தமிழக ஆளுநராக இருக்கின்ற ரவீந்திரன் நாராயணன் ரவி திடீரென்று அந்த நீட் எதிர்ப்பு மசோதாவை மாநில அரசுக்கு திருப்பி அனுப்பினார் இது மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து உடனடியாக சட்டசபை மறுபடியும் கூட்டப்பட்டு மீண்டும் நீட் விலக்கு தொடர்பான மசோதாவை ஒருமனதாக நிறைவேற்றி ஆளுநருக்கு அன்றைய தினமே அனுப்பி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.

இந்த சூழ்நிலையில், இன்று பகல் 12 மணியளவில் கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ரவீந்திர நாராயணன் ரவியை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சந்தித்து பேசவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அவருடன் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செல்வார் என்று சொல்லப்படுகிறது.

இந்த சந்திப்பின்போது சட்டசபையில் 2வது முறையாக நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்ற நீட் தேர்வு விலக்கு மசோதாவிற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்துவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும் இந்த சந்திப்பின்போது முதலமைச்சர் உரையாற்ற இருப்பதாகவும் தகவல் கிடைத்திருக்கிறது.