கோவையில் வீடு இடிந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி: முதலமைச்சர் அறிவிப்பு!!

0
82

கோவையில் நேற்று இரவு பெய்த கனமழையால் அடுக்குமாடி வீடு இடிந்து விழுந்ததில் உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

கோவை செட்டி வீதி கே.சி. தோட்டம் பகுதியில் கண்ணன் என்பவருக்கு சொந்தமான அடுக்குமாடி வீடு, நேற்று இரவு பெய்த மழையினால் திடீரென்று இடிந்து விழுந்தது. இந்த வீட்டின் முதல் தளத்தில், கண்ணன் தனது மனைவி ஸ்வேதா, ஆறு வயது குழந்தை தன்வீர் மற்றும் அவரது தாய் வனஜா, தங்கை கவிதா ஆகியோர் வசித்து வந்தனர். தரை தளத்தில் ஒரு குடும்பம் வாடகைக்கு வசித்து வந்தனர்.

நேற்றிரவு பெய்த கன மழையில் பலத்த சத்தத்துடன் வீடு இடிந்து விழுந்ததில் அருகில் இருந்த ஓட்டு வீடும் பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும், மாவட்ட ஆட்சியர் ராஜாமணி, மாநகர காவல்துறை ஆணையர் சுமித்சரண் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர். இடிபாடுகளில் சிக்கியிருந்த 6 பேரை பலத்த காயங்களுடன் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும், ஸ்வேதா, கோபால்சாமி ஆகிய இருவரும் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர்.

இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்தில் 6 நபர்கள் காயமடைந்துள்ளனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இவர்கள் அனைவரும் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற எனது விருப்பத்தை தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார்.

author avatar
Parthipan K