தமிழகத்தில் உச்சகட்டத்தை எட்டிய காங்கிரஸ் கோஷ்டி மோதல்! கே எஸ் அழகிரிக்கு எதிராக டெல்லிக்கு பறந்த புகார்!

0
75

தமிழக காங்கிரஸ் கட்சிக்குள் கோஷ்டி மோதல் உச்சகட்டத்தை எட்டி இருக்கின்றது. இந்த நிலையில், அந்த கட்சியின் மாநில தலைவர் கே எஸ் அழகிரிக்கு எதிராக டெல்லி தலைமையிடம் காங்கிரஸ் கட்சியினரே புகார் அளித்துள்ளதாக தெரிகிறது.

பிரிக்கவே முடியாதது காங்கிரஸ் கட்சியும், கோஷ்டி மோதலும் என்று வெளிப்படையாகவே சொல்லிவிடலாம். அதன் ஒரு பகுதியாக சமீபத்தில் ஒரு சம்பவம் நடைபெற்றது. கடந்த 15ஆம் தேதி சென்னை சத்தியமூர்த்தி நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் உட்கட்சி மோதலே இதற்கு சாட்சியாக நிற்கிறது.

அந்த கட்சியின் மாநில பொருளாளர் ரூபி மனோகரனின் ஆதரவாளர்கள் என்று தெரிவிக்கப்படும் ஒரு சிலர் மாவட்ட தலைவர் கே பி கே ஜெயக்குமாரை மாற்ற வேண்டும் என்று தெரிவித்து அந்த கட்சியின் மாநில தலைவர் கே எஸ் அழகிரியை முற்றுகையிட்டனர். இதனை தொடர்ந்து இருதரப்பினருக்கும் இடையே கைகலப்பு உண்டாகி ரத்த காயம் ஏற்படும் அளவிற்கு மோதல் அதிகரித்தது.

இதனைத் தொடர்ந்து ரூபி மனோகரன் உள்ளிட்டோர் மீதான விசாரணை வருகின்ற 24-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற இந்திராகாந்தி பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தை சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப் பெருந்தகை, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்கள் கே.வி. தங்கபாலு, திருநாவுக்கரசர், இ கே எஸ் இளங்கோவன், கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் புறக்கணித்தனர். இவர்கள் எல்லோரும் எழும்பூரில் விடுதி ஒன்றில் கே எஸ் அழகிரிக்கு எதிராக ஆலோசனைகள் ஈடுபட்டதாகவும் சொல்லப்படுகிறது.

இதன் ஒரு கட்டமாக கே எஸ் அழகிரி மீது டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை நேரில் சந்தித்து அந்த கட்சியை சார்ந்தவர்களே புகார் அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விவகாரத்தில் டெல்லி தலைமை என்ன விதமான முடிவை எடுக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.