திமுக எம்பிக்கு எதிராக திரும்பிய கார்த்தி சிதம்பரம்! அதிர்ச்சியில் தொண்டர்கள் 

0
118
Congress MP Karti Chidambaram Against DMK MP Dr Senthilkumar
Congress MP Karti Chidambaram Against DMK MP Dr Senthilkumar

திமுக எம்பிக்கு எதிராக திரும்பிய கார்த்தி சிதம்பரம்! அதிர்ச்சியில் தொண்டர்கள்

தருமபுரி திமுக எம்.பி. செந்தில்குமார் சமூக ஊடகங்களில் ஆக்டிவாக இருப்பவர்.அந்த வகையில் பிரபலமாகும் நோக்கத்தில் எதாவது பேச அது அவருக்கே எதிராக அமையும் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வந்துள்ளது.குறிப்பாக அவர் தேர்தலில் எதிர்த்து போட்டியிட்ட அன்புமணி ராமதாஸ் மற்றும் அவர் சார்ந்த பாமகவை தொடர்ந்து விமர்சனம் செய்வதும், அதற்கு அக்கட்சி தொண்டர்கள் இவரை விமர்சிப்பதும் தொடர்கதையாக நடந்து வருகிறது.

இந்நிலையில் ஆர்வக் கோளாறில் அரசு விழாவின் போது பாரம்பரியமாக நடத்தப்பட்டு வரும்  பூமி பூஜை நிகழ்ச்சியை தடுத்து நிறுத்தி இந்துக்களுக்கு எதிராக பேசியது மக்கள் மத்தியில் மட்டுமல்லாமல் அக்கட்சியினர் மத்தியிலும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து பதிலளித்த காங்கிரஸ் கட்சியின் எம்.பி.கார்த்திக் சிதம்பரம் திமுக எம்பியின் இந்த செயல் தேவையற்றது என்று கூறியது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அதாவது கூட்டணி கட்சியின் எம்பியின் செயலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளது பொதுவெளியில் அரசியல் நாகரிகமாக கருதப்பட்டாலும் இரு கட்சியினர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவிலுள்ள  ஆலாபுரத்தில், ஏரி சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டது . இதைத்தொடர்ந்து அந்த துறை சார்ந்த நீர்வள ஆதார அலுவலர்கள் இந்த சீரமைப்பு பணியை துவங்குவதற்காக பூமி பூஜைக்கு ஏற்பாடு செய்தனர்.மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள திமுக எம்.பி. செந்தில்குமார் அவர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தனர்.

இதனைத்தொடர்ந்து இந்த விழாவில் கலந்து கொண்ட தர்மபுரி திமுக எம்.பி. செந்தில்குமார், அங்கு இந்து முறைப்படி பூமி பூஜை செய்ய எதிர்ப்பு தெரிவித்ததுடன், பூஜைக்கான ஏற்பாடு செய்திருந்த அரசு அதிகாரிகளையும் கடுமையாக திட்டினார்.

அப்போது அரசு விழாவில் இந்து மத பூஜை எதற்காக செய்ய வேண்டும்,அதற்கான அரசு நடைமுறை எதாவது இருக்கா என கேள்வி எழுப்பினார். மேலும் அவர், அங்கு கிறிஸ்தவ, இஸ்லாமிய சம்பிரதாயங்களை செய்யாதது ஏன்? கடவுள் மறுப்பு கொள்கையுடைய திராவிட கழகத்தினரை அழைக்காதது ஏன்? என மத ஒற்றுமையை குலைக்கும் வகையில் பல்வேறு கேள்விகளை கேட்டு அந்த பூஜை நிறுத்தியுள்ளார். இந்நிலையில் இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதை ஒரு தரப்பு ஆதரித்தும் மற்றொரு தரப்பு எதிர்த்தும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் எம்பி  கார்த்திக் சிதம்பரம் செந்தில்குமாரின் செயலை எதிர்த்து கருத்து தெரிவித்துள்ளது அக்கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கார்த்தி சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘இது முற்றிலுமாக தேவையற்ற செயல். இது போன்ற நிகழ்ச்சி இல்லாமல் உங்கள் (திமுக) கட்சி உறுப்பினர் ஒருவரின் இல்லத்தில் திருமணம், புதுமனை புகுவிழா நடந்துள்ளதா? மக்கள் தங்களுக்கு வாக்களிப்பதால், அனைத்து சடங்குகளையும் மறுப்பதாக திராவிட அமைப்புகளின் தலைவர்கள் எண்ணிக் கொள்கின்றனர்.” என்று அவர் அதில் கூறியுள்ளார்.