கொரோனா தொற்று – புதிய உச்சத்தை தொட்ட தமிழகம்

0
68

தமிழகத்தில் கொரோனா பரவ துவங்கிய சில நாட்கள் மிகவும் குறைந்த அளவிலான எண்ணிக்கையிலேயே பாதிப்புகள் இருந்தன. ஆனால் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது

நேற்று தமிழகத்தில் புதிய உச்சமாக ஒரே நாளில் 805 பேர் கொரோனால் பாதிக்கப்பட்டுள்ளனர், 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17,082 ஆகவும், பலி எண்ணிக்கை 118 ஆகவும் அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது “தமிழகத்தில் இன்று 805 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 491 ஆண்கள், 314 பெண்கள். மொத்த பாதிப்பு 17082 ஆக அதிகரித்துள்ளது. இன்று மேலும் 7 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 118 ஆக உயர்ந்துள்ளது.

இதில், 5 பேர் அரசு மருத்துவமனையிலும், 2 பேர் தனியார் மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இன்று மொத்தம் 407 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 8,731 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் குணமடைந்தோர் விகிதம் 51.11 சதவீதமாகவும், உயிரிழப்பு விகிதம் 0.69 சதவீதமாகவும் உள்ளது.

இந்தியாவிலேயே அதிகபட்ச மாதிரிகள் சோதனையிட்ட மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இதுவரை 4,21,480 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன. தமிழகத்திற்குள் இ-பாஸ் பெற்றுக்கொண்டு வெளிமாநிலத்திலிருந்து வருபவர்களால் கொரோனா எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இது புது சவாலாக இருக்கிறது. அந்தவகையில் இன்று மட்டும் 93 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. வெளிமாநிலத்திலிருந்து தமிழகம் வந்தவர்களில் இதுவரை 942 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 726 பேரும், குஜராத்திலிருந்து வந்தவர்கள் 26 பேரும் உள்ளனர்.

கொரோனா பாதித்தவர்களில் 88 சதவீதத்தினருக்கு எந்த அறிகுறியும் இல்லை. விமானத்தின் மூலம் தமிழகம் வரும் பயணிகளில் அறிகுறி இருப்பவர்களை உடனடியாக பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் கையில் தனிமைப்படுத்தலுக்கான அச்சிடப்பட்டு, 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்த அறிவுறுத்தப்படுகின்றனர். தமிழகத்திலிருந்து வெளிமாநிலம் செல்பவர்களும் பரிசோதனை செய்யப்பட்டே அனுப்பப்படுகிறார்கள்” என்று கூறினார்.

author avatar
Parthipan K