கோவை கார் வெடிப்பு சம்பவம் தேசிய புலனாய்வு முகமை கைக்கு வந்த பட்டியல்! கோவையை அலசும் என்.ஐ. ஏ!

0
77

கோவை உக்கடம் பகுதியில் இருக்கும் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு தீபாவளிக்கு முந்தைய நாள் ஒரு கார் நின்று கொண்டு இருந்தது. அந்த கார் திடீரென்று வெடித்து சிதறியது. இதில் காரில் இருந்த ஜமிஷா முபின் என்பவர் உயிரிழந்தார். அவருடைய வீட்டிலிருந்து நாட்டு வெடி மருந்துகள் கைப்பற்றப்பட்டதுடன் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பிற்கு ஆதரவாக சில குறிப்புகள் கண்டெடுக்கப்பட்டிருந்தது. ஒற்றை ஓநாய் தாக்குதல் என்ற வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கலாம் என்று தகவல் வெளியானது.

அதற்கு முன்பாகவே கோவையில் பாஜகவின் நிர்வாகியின் இல்லம் மற்றும் பாஜக அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பெட்ரோல் குண்டு வீழ்ச்சி சம்பவம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இந்த கார் வெடிப்பு சம்பவத்தில் பலியான ஜமிஷா முபின் தீவிரவாதிகளின் பட்டியலில் இடம் பிடித்திருப்பவர் என்றும் சொல்லப்படுகிறது. அதோடு இவர் மீது தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தி வந்ததாகவும் அதோடு தேசிய புலனாய்வு முகமையால் அவர் கண்காணிக்கப்பட்டு வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

அதோடு இவரை கண்காணிக்க வேண்டும் என்று தமிழக காவல்துறைக்கு மத்திய அரசு அறிவுறுத்தியும், இந்த விவகாரத்தில் தமிழக காவல்துறை கோட்டை விட்டதாக தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்திருந்தார்.

இந்த நிலையில் தான் தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தார்.

அதன் அடிப்படையில் இந்த கார் வெடிப்பு சம்பவம் குறித்து தற்போது தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில், கோவை கோட்டைமேடு, உக்கடம், பொன்விழா நகர், ரத்தினபுரி உள்ளிட்ட இருவதற்கும் மேற்பட்ட பகுதிகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.

கார் வெடிப்பு குறித்தும், ஐஎஸ் தீவிரவாத அமைப்பு குறித்தும் தேசிய புலனாய்வு முகமை தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்ற நிலையில், சில பெயர்கள் அடங்கிய பட்டியலை வைத்து தேசிய புலனாய்வு முகமை சோதனையை நடத்தி வருவதாக தகவல் கிடைத்திருக்கிறது.

கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் தடை செய்யப்பட்ட இயக்கங்களின் ஆதரவாளர்கள் உள்ளிட்டோரின் வீடுகளில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. உக்கடம், கோட்டைமேடு பகுதியில் சனோபர் என்பவரின் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடத்தி வருகிறது.

தலைநகர் சென்னை, கொச்சின் போன்ற பகுதிகளில் இருந்து வந்துள்ள அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது.