அமித்ஷாவிற்கு சவால் விட்ட நாராயணசாமி!

0
78

புதுவையில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியை கலைப்பதற்கு முன்னாள் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ஒத்துழைக்கவில்லை என்று தகவல் கிடைத்திருக்கிறது. இருந்தாலும் அதனை உறுதிப்படுத்துவதற்கு இயலவில்லை என்று புதுச்சேரியின் முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமி தெரிவித்திருக்கிறார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி புதுச்சேரி தேர்தல் பிரச்சாரத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித்ஷா ஆகியோர் உரையாற்றியது முழுக்க முழுக்க பொய் எனவும், தேர்தல் சமயத்தில் மக்களை திசை திருப்புவதற்காக விதம் விதமாக அவர்கள் பொய்யுரைத்து வருகிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

சுமார் 98 சதவீதம் தமிழ்நாட்டில் இருக்கின்ற திட்டங்களை புதுவையில் ஆரம்பித்து வைத்திருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி, அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், கோவா, கர்நாடகா, மத்திய பிரதேசம் மற்றும் புதுச்சேரியில் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் காங்கிரஸ் ஆட்சியை பாஜக கலைத்து இருக்கின்றது என்றும் குற்றம் சாட்டி இருக்கிறார். மத்திய அரசு 15 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை புதுவை அரசுக்கு கொடுத்தது எனவும், இந்த பணத்தை டெல்லியில் இருக்கின்ற சோனியாகாந்தி குடும்பத்திற்கு கொடுத்து இருக்கின்றேன் என்று அமித்ஷா பொய்யான ஒரு குற்றச்சாட்டை தெரிவித்திருக்கிறார் எனவும் தெரிவித்தார் நாராயணசாமி.

வருமானவரித்துறை, சிபிஐ போன்றவற்றை கையில் வைத்து இருக்கின்ற அமித்ஷா இந்த குற்றச்சாட்டை நிரூபிக்க இயலுமா என்றும் நாராயணசாமி சவால் விடுத்து இருக்கிறார். அதோடு அமித்ஷாவின் குற்றச்சாட்டை நிரூபிக்கவில்லை என்றால் அவதூறு வழக்கு போடுவேன் என்று தெரிவித்திருக்கிறார்.