“தினேஷ் கார்த்திக் & ரிஷப் பண்ட் பேட்டிங் வரிசையை மாற்றியது ஏன்?” பயிற்சியாளர் டிராவிட் விளக்கம்

“தினேஷ் கார்த்திக் & ரிஷப் பண்ட் பேட்டிங் வரிசையை மாற்றியது ஏன்?” பயிற்சியாளர் டிராவிட் விளக்கம்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது போட்டியில் இந்திய வீரர்கள் ரிஷப் பண்ட் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் தங்கள் வழக்கமான இடத்துக்கு  முன்பாகவே இறக்கப்பட்டனர்.

நேற்றைய இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 3 விக்கெட்கள் இழப்புக்கு 227 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து ஆடிய இந்திய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 178 ரன்கள் மட்டுமே சேர்த்து ஆட்டமிழந்து தோல்வி அடைந்தது.

இந்த போட்டியில் வழக்கமாக ஐந்தாவது இடத்தில் இறக்கப்படும் ரிஷப் பண்ட் தொடக்க ஆட்டக்காரராகவும், தினேஷ் கார்த்திக் நான்காவது இடத்திலும் இறக்கப்பட்டனர். இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தாலும் நிலைத்து நிற்கவில்லை. ஆனால் இந்த தொடரில் இருவருக்கும் பேட்டிங்குக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்காத சூழலில் இந்த போட்டியில் வாய்ப்புக் கிடைத்தது.

இதுபற்றி பேசியுள்ள அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் “அவர்களுக்கு கொஞ்சம் பேட்டிங் கொடுக்க இன்று ஒரு வாய்ப்பு என்று நினைக்கிறேன். தினேஷ் மற்றும் ரிஷப் போன்றவர்களுக்கு நடுவில் அதிக வாய்ப்பு கிடைப்பது கடினம். அவர்கள் ஒரு கணத்தில் நன்றாக பேட்டிங் செய்வதாக உணர்ந்தேன், அவர்கள் நீண்ட நேரம் விளையாடியிருந்தால் நாங்கள் இலக்கை நெருங்கியிருக்கலாம். 6 ஆவது இடத்தில் பேட்டிங் செய்யும் போது, நீங்கள் 5-10 பந்துகள் மட்டுமே பேட் செய்ய வேண்டியிருக்கும். அது எப்போதும் கடினமாக இருக்கும், எனவே அவர்கள் இன்று செய்தது போல் சில பந்துகளை அவர்களின் எதிர்கொள்வது எப்போதும் நன்றாக இருக்கும்.” எனக் கூறியுள்ளார்.