ஏழுமலையான் கோவிலில் இன்று முதல் இலவச தரிசன டோக்கன்கள் விநியோகம்!! மகிழ்ச்சியில் பக்தர்கள்..!!

0
75

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று முதல் இலவச தரிசனத்திற்கான டோக்கன்கள் விநியோகிக்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக பக்தர்களுக்கு தரிசனம் ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம் முதல் சுவாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

அதன் விளைவாக கோவில் அர்ச்சகர்கள், தேவஸ்தான ஊழியர்கள் என பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில் அர்ச்சகர் ஒருவர் நோய்த் தொற்றால் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் சிறப்பு தரிசனத்திற்கு மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆனாலும் கோவிலில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போனதால் பக்தர்களுக்கு தரிசனம் ரத்து செய்யப்பட்டது.

இதனையடுத்து தற்போது 300 ரூபாய் சிறப்பு தரிசனத்தில் நாளொன்றுக்கு 9,000 பக்தர்களுக்கு மட்டும் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகன்றனர்.

இந்நிலையில், ஏழுமலையான் கோவிலில் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை, வருடாந்திர பிரம்மோஸ்சவ ஏகாந்த திருவிழா நடைபெற உள்ளது. இதற்காக தேவஸ்தான ஆலோசனைக் கூட்டம் திருமலையில் நடைபெற்றது.

இதில் பக்தர்கள் வேண்டுகோளை கருத்தில் கொண்டு இன்று முதல்  திருப்பதியில் 3,000 பக்தர்களுக்கு இலவச தரிசனத்திற்கான டோக்கன்கள் வழங்கப்படும் என்று தேவஸ்தானம்  அறிவித்துள்ளது. பக்தர்கள் ஆதார் கார்டை காண்பித்து வழக்கமாக வழங்கப்படும் இலவச தரிசன டிக்கெட்டுகள் அந்தந்த கவுண்டர்களில் கிடைக்கும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

author avatar
Parthipan K