சமீபத்தில் நடந்து முடிந்துள்ள 2026 சட்டமன்ற தேர்தலானது முன்பு எப்போதும் இல்லாத அள்வுக்கு அதிக எதிர்பார்ப்பை உருவாக்கும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக நடிகர் விஜய் அவர்களின் வருகை தேர்தல் களத்தில் யாருக்கு சாதகம் பாதகம் என்பதை கணிக்க முடியாத நிலையை உருவாக்கியுள்ளது. அதே நேரத்தில் முன்பு இல்லாத வகையில் வாக்கு பதிவு சதவீதம் அதிகரித்துள்ளது ஆட்சி மாற்றத்திற்கான அறிகுறியா அல்லது விஜய் அவர்களுக்கு கிடைத்த புதிய ஆதரவா என்ற குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக அமைத்துள்ள தேர்தல் கூட்டணியின் நம்பகத்தன்மை குறித்தும் விவாதங்கள் எழுந்துள்ளன. திமுக கூட்டணியை பொருந்தா கூட்டணி என்றும், அதிமுக கூட்டணியை டபுள் என்ஜின் கூட்டணி என்றும் விமர்சனங்கள் எழுந்தன.
இதில் குறிப்பாக தேர்தல் அறிவிக்கப்பட்ட நீண்ட நாட்களாகியும் திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வந்த காங்கிரஸ் தன்னுடைய கூட்டணி நிலைப்பாட்டை தெரிவிக்காமல் இருந்தது, தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது, காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர்கள் கட்டுப்பாடு இல்லாமல் திமுகவை விமர்சனம் செய்தது.இறுதியில் பல்வேறு கருத்து வேறுபாடுகளுடன் தேர்தல் நேர சமரசத்துடன் கூட்டணி உறுதியானது என பல்வேறு குழப்பங்களுடன் திமுக மற்றும் காங்கிரஸ் தேர்தலை சந்தித்தது.
அந்த வகையில் கொள்கை ஒற்றுமையோ அல்லது மக்கள் நலனோ இல்லாமல், வெறும் அதிகாரப் பசிக்காக திமுக – காங்கிரஸ் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளதாகவே தெரிகிறது. அக்கூட்டணி இன்று பல்வேறு முரண்பாடுகளால் சிதைந்து போய் நிற்பதை யாராலும் மறுக்க முடியாது. இரு கட்சிகளும் அளித்த பொருந்தாத வாக்குறுதிகள், முரண்பட்ட மேடைகள் என நிறைய முரண்கள் நிலவின. குறிப்பாக எந்தவொரு வலுவான கூட்டணியும் பொதுவான செயல்திட்டத்தையே முன்வைக்கும். ஆனால், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் சார்பில் வெளியிட்ட தேர்தல் அறிக்கைகள் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் தனித்தனியாக உள்ளன. தமிழக மக்களுக்காக ஒருமித்த ஒரு செயல் திட்டத்தை கூட உருவாக்க முடியாத இவர்களால் எப்படி ஒன்றிணைந்து பயணிக்க முடியும் என்ற சந்தேகமும் எழுகிறது. இன்றைய காகித அறிக்கையிலேயே இணைய முடியாத இவர்கள் நாளை ஆட்சியில் எப்படி இணைந்து செயல்படுவார்கள் என்ற கேள்வி எழுகிறது.
தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட தாமதம், இரு கட்சிகளுக்கிடையேயான நம்பிக்கையின்மையை வெளிப்படையாக காட்டுகிறது. அமைச்சரவையில் காங்கிரஸுக்கு இடமில்லை என்ற திமுகவின் தெளிவான நிலைப்பாடும் இந்த இடைவெளியை மேலும் பெரிதாக்கியுள்ளது. இதனால், இந்த அமைப்பு ஒரு உறுதியான கூட்டணியாக அல்லாமல், கட்டாயமாக இணைக்கப்பட்ட உறவாகவே தோன்றுகிறது.
மேலும், கூட்டணிக்கே ஒரு பெயரைத் தீர்மானிப்பதில்கூட ஒருமித்த கருத்து இல்லாத நிலை உருவாகியுள்ளது. ராகுல் காந்தி “இந்தியா (INDI) கூட்டணி” என்று குறிப்பிடுவதற்கு மாறாக, மு.க. ஸ்டாலின் “மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி (SPA)” என்றே வலியுறுத்துகிறார். அடிப்படை விஷயங்களிலேயே இவ்வளவு கருத்து வேறுபாடுகள் நிலவுகின்ற நிலையில், ஒருங்கிணைந்த எதிர்காலத்தை உருவாக்கும் திறன் குறித்து கேள்விகள் எழுகின்றன. மொத்தத்தில், இந்த கூட்டணி தெளிவின்மையும் குழப்பமும் நிறைந்த அமைப்பாகவே பார்க்கப்படுகிறது.
ஒரு கூட்டணியின் வலிமை அதன் தலைவர்கள் ஒன்றுபட்டு செயல்படுவதில்தான் உள்ளது. ஆனால், ராகுல் காந்தி மற்றும் மு.க. ஸ்டாலின் ஒரே மேடையில் தோன்றுவதில் தெளிவான இடைவெளி காணப்படுகிறது. இது திட்டமிட்ட தவிர்ப்பு போலத் தெரிகிறது என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
சமீபத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா தொடர்பான உரையில், மம்தா பானர்ஜிக்கு நன்றி தெரிவித்த ராகுல் காந்தி, ஸ்டாலினை குறிப்பிடாதது கவனத்தை ஈர்த்துள்ளது. இதுவே கூட்டணிக்குள் உள்ள ஒற்றுமை குறித்து சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
மேலும், இந்த இடைவெளி மேடை மொழிபெயர்ப்புகளிலும் பிரதிபலித்ததாக கூறப்படுகிறது. ராகுல் காந்தி ஸ்டாலினை “சகோதரர்” என குறிப்பிட்டபோதும், அதை தமிழில் மொழிபெயர்க்கும்போது அந்த வார்த்தை தவிர்க்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், இரு தரப்பினருக்கிடையேயான நெருக்கம் குறைந்து வருகிறதா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.
தன் கூட்டணிக்குள் உள்ள கட்சிகளுக்கே உரிய பாதுகாப்பும் நம்பிக்கையும் வழங்க முடியாத நிலையில் இருக்கும் அரசு, பொதுமக்களின் நலனை எவ்வாறு உறுதி செய்யும் என்ற கேள்வி எழுகிறது.
இந்த சூழ்நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) ஒருங்கிணைந்த மற்றும் கட்டுப்பாட்டான அணியாக செயல்படுகிறது என அதன் ஆதரவாளர்கள் வலியுறுத்துகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை, அன்புமணி ராமதாஸ், டி.டி.வி தினகரன், ஜி.கே. வாசன் உள்ளிட்ட தலைவர்கள் ஒரே நோக்கத்துடன் இணைந்து செயல்படுகின்றனர் என கூறப்படுகிறது.
இது வெறும் கட்சிகள் இணைந்த கூட்டணியாக அல்லாமல், மாநிலத்தின் முன்னேற்றத்தை இலக்காகக் கொண்ட ஒற்றுமையான முயற்சியாகவே பார்க்கப்படுகிறது. தற்போதைய அரசியல் சூழலில், மக்கள் முன்னிலையில் ஒரு முக்கியமான தேர்வு நிலவி வருகிறது — அதிகார நோக்கத்தில் இயங்கும் கூட்டணியா, அல்லது வளர்ச்சி நோக்கில் செயல்படும் கூட்டணியா என்பதைக் தீர்மானிக்க வேண்டிய நேரம் இது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
மொத்தத்தில், தமிழகத்தின் எதிர்காலம் குறித்து மக்கள் சிந்தித்து முடிவெடுக்க வேண்டிய கட்டத்தில் அரசியல் நிலைமை உள்ளது.