திமுக உள்நோக்கத்துடன் செயல்படுகிறது! முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு!

0
65

அதிமுக ஆட்சியில் நிதி ஒதுக்கிய திட்டங்களை திமுக அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து செயல்படுத்தாமலிருக்கிறது என முன்னாள் அமைச்சர் வேலுமணி குற்றம் சாட்டியுள்ளார்.

உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்திற்கு 1000 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் ஒவ்வொரு சட்டசபை தொகுதிகளும் வெகு நாட்களாக தீர்க்கப்படாமலிருக்கின்ற 10 பிரச்சனைகளை குறிப்பிட்டு மாவட்ட ஆட்சியரிடம் பரிந்துரை கடிதம் வழங்க சட்டசபை உறுப்பினர்களுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

அந்த வகையில் கோயமுத்தூர் மாவட்டத்தில் அதிமுகவின் சட்டசபை உறுப்பினர்கள் கோரிக்கைகளை தனித்தனி பட்டியலாக தயாரித்து முன்னாள் அமைச்சர் வேலுமணி தலைமையில் மாவட்ட ஆட்சியர் சமீரனை நேற்று சந்தித்து வழங்கினர். அதன்பிறகு வேலுமணி பத்திரிகையாளர்களிடம் சில விஷயங்களை குறிப்பிட்டு பேசினார்.

அதாவது, முதலமைச்சர்களாக ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் இருந்தபோது அறிவித்த திட்டங்கள் மற்றும் அவசியமான கோரிக்கைகளை கொடுத்திருக்கின்றோம்.

ஏற்கனவே ஒப்பந்தம் கோரப்பட்ட 500 சாலைகளை திமுக அரசு ரத்து செய்தது. தற்போது எந்த சாலையிலும், போக முடியாத அளவுக்கு படுமோசமாக இருந்து வருகிறது. பொதுமக்கள் சிரமப்பட்டு வருகிறார்கள். என கூறியிருக்கிறார் முன்னாள் அமைச்சர் வேலுமணி.

அதிமுக ஆட்சிக்காலத்தில் நிதி ஒதுக்கிய திட்டங்கள் தற்போது முடக்கப்பட்டுள்ளன. மேற்கு புறவழிச் சாலை, பொள்ளாச்சி செல்லும் பைபாஸ், வெள்ளலூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், மெட்ரோ ரயில் திட்டம், பில்லூர் 3வது குடிநீர் திட்ட பணிகளை மேகப்படுத்த வேண்டும் எனவும், அவர் கோரிக்கை வைத்திருக்கிறார்.

அத்திக்கடவு, அவினாசி, திட்டத்தில் தண்ணீர் பம்ப் செய்வதுடன் 2வது திட்டம் செயல்படுத்த வேண்டும் திமுக ஆட்சி காலத்தில் ஒன்றரை ஆண்டு காலத்தில் எதுவுமே செய்யவில்லை. கோயமுத்தூர் வெள்ளலூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டும் பணி 50% முடிவடைந்திருக்கிறது. ஏதோ உள்நோக்கத்துடன் நிறுத்தி வைத்திருக்கிறார்கள். தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்றும், அவர் கூறியிருக்கிறார்.

அந்த சமயத்தில் அவருடன் சட்டசபை உறுப்பினர்கள் பொள்ளாச்சி ஜெயராமன், தாமோதரன், செல்வராஜ், அம்மன் அர்ஜுனன், அருண்குமார், கந்தசாமி, அமுல் கந்தசாமி, ஜெயராம், உள்ளிட்டோர் உடனிருந்தார்கள்