தமிழக அரசு எடுத்த தைரியமான முடிவு! தேவையற்ற மத்திய அரசின் தலையீட்டை கண்டிக்கும் மருத்துவர் ராமதாஸ்

0
74
PMK Leader Dr Ramadoss Issues Notice to DMK RS Bharathi-News4 Tamil Latest Political News in Tamil
PMK Leader Dr Ramadoss Issues Notice to DMK RS Bharathi-News4 Tamil Latest Political News in Tamil

தமிழக அரசு எடுத்த தைரியமான முடிவு! தேவையற்ற மத்திய அரசின் தலையீட்டை கண்டிக்கும் மருத்துவர் ராமதாஸ்

தமிழக அரசின் சார்பில் 7 தமிழர் விடுதலைக்காக எடுக்கப்பட்ட முடிவில் சம்பந்தமே இல்லாமல் மத்திய அரசு தலையிடுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

தொடர்ந்து தமிழர்களின் நலனிற்காக குரல் கொடுத்து வரும் மருத்துவர் ராமதாஸ் இது குறித்து இன்று அவர் “7 தமிழர் விடுதலை வழக்கு: மத்திய அரசின் குறுக்கீடு தேவையற்றது!” என்ற தலைப்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது.

தமிழ்நாடு அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று தம்மை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி தொடர்ந்துள்ள வழக்கில், 7 தமிழர்களையும் விடுதலை செய்யக் கூடாது என்று மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் முறையிட்டிருக்கிறார். 7 தமிழர்கள் விடுதலை குறித்த இந்த வழக்கில் மத்திய அரசின் தலையீடு சிறிதும் தேவையற்றது; அநீதியானது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 161-ஆவது பிரிவின்படி, பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்வதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்று கடந்த 2018-ஆம் ஆண்டு செப்டம்பர் 6-ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதனடிப்படையில் தான் தமிழக அமைச்சரவை 09.09.2018 அன்று கூடி 7 தமிழர்களை விடுதலை செய்வதற்கு பரிந்துரைக்கும் தீர்மானத்தை நிறைவேற்றி தமிழக ஆளுனருக்கு அனுப்பி வைத்தது. அதனடிப்படையில் தம்மை விடுதலை செய்யாதது சட்டவிரோதம் என்றும், தம்மை விடுதலை செய்யும்படி ஆணையிட வேண்டும் என்றும் கோரி தான் நளினி வழக்கு தொடர்ந்துள்ளார். ஆளுனரின் செயல்பாடின்மை குறித்த இந்த வழக்கில் மத்திய அரசு சேர்க்கப்படவில்லை; மத்திய அரசுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. இது முழுக்க முழுக்க தமிழக ஆளுனர், தமிழக அரசு, மனுதாரர் நளினி ஆகியோர் மட்டுமே சம்பந்தப்பட்ட வழக்கு ஆகும்.

இந்த வழக்கில் மத்திய அரசின் சார்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் எந்த அடிப்படையில், தமிழக தலைமைச் செயலாளருக்கு மத்திய உள்துறை செயலாளர் கடந்த 18.04.2018 அன்று எழுதிய கடிதத்தை தாக்கல் செய்தார் என்று தெரியவில்லை. மத்திய அரசின் ஆணைப்படியோ அல்லது அனுமதி பெற்றோ இந்தக் கடிதத்தை அவர் தாக்கல் செய்தாரா…. அல்லது தனிச்சையாக செயல்பட்டாரா? என்பதும் தெரியவில்லை. ஆனால், இந்த வழக்கில் தலையிட மத்திய அரசுக்கு எந்த உரிமையும் கிடையாது. இதற்கு முன் 7 தமிழர் விடுதலை குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திடம் ஆளுனர் விளக்கம் கேட்டிருப்பதாக செய்திகள் வெளியான போது, அதை மறுத்த ஆளுனர் மாளிகை, இந்த விஷயத்தில் ஆளுனரே இறுதி முடிவு எடுப்பார்; இதில் மததிய அரசு தலையிட முடியாது என்று விளக்கமளித்தது. அவ்வாறு இருக்கும் போது ஆளுனருக்கு எதிரான வழக்கில் மத்திய அரசு எவ்வாறு தலையிட முடியும்?

இவ்வழக்கில் மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் தாக்கல் செய்துள்ள கடிதம் 2018&ஆம் ஆண்டு தமிழக தலைமைச் செயலாளருக்கு மத்திய உள்துறை செயலர் எழுதியதாகும். 7 தமிழர்கள் விடுதலைக்கு எதிராக மத்திய அரசு முன்வைக்கும் காரணங்கள் அந்தக் கடிதத்தில் இடம் பெற்றுள்ளன. அவை எதுவும் புதிதல்ல. அக்கடிதம் 2018&ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10&ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் இடம்பெற்றுள்ள அனைத்து அம்சங்கள் குறித்தும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், நவீன் சின்ஹா, கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் மிக விரிவாக விவாதிக்கப்பட்டது. அதன் முடிவில் அந்தக் காரணங்கள் அனைத்தையும் நிராகரித்து விட்டு தான் 7 தமிழர்களையும் விடுதலை செய்வது குறித்து தமிழக அரசும், ஆளுனரும் முடிவெடுக்கலாம் என்று நீதியரசர் ரஞ்சன் கோகாய் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு 06.09.2018 அன்று தீர்ப்பளித்தது.

7 தமிழர்கள் விடுதலை தொடர்பாக மத்திய அரசு கூறிய காரணங்கள் அனைத்தையும் உச்சநீதிமன்றம் நிராகரித்து விட்டு, அடுத்தக்கட்டத்துக்கு சென்று விட்டது. இந்த நிலையில், நிராகரிக்கப்பட்ட அம்சங்களை மீண்டும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து 7 தமிழர் விடுதலைக்கு எதிராக மத்திய அரசு வாதாடுவது நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிப்பதற்கும், விடுதலையை தாமதப்படுத்துவதற்கும் மட்டுமே பயன்படும். இது மனித உரிமைக்கும், இயற்கை நீதிக்கும் கூட எதிரான செயலாகும். எனவே, 7 தமிழர் விடுதலையில் மத்திய அரசு தேவையின்றி குறுக்கிடுவதை தவிர்த்து. அந்தக் கடிதத்தை திரும்பப்பெற வேண்டும்.

பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 தமிழர்கள் விடுதலை தொடர்பான விஷயத்தில் எந்த சர்ச்சையும் இல்லை. 7 தமிழர்களை விடுதலை செய்ய பரிந்துரை செய்து தமிழக அமைச்சரவை நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்தை ஏற்றுக் கொள்வதைத் தவிர தமிழக ஆளுனருக்கு வேறு வழியில்லை. இந்த விஷயத்தில் முடிவெடுப்பதில் கால அவகாசம் எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்பதை காரணம்காட்டி, காலவரையின்றி ஆளுனர் தாமதம் செய்வது அநீதியாகும். தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று 7 தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்ய ஆளுனர் ஆணையிட வேண்டும்; அவருக்கு ஏதேனும் மாற்றுக் கருத்து இருந்தால் பரிந்துரையை தமிழக அரசுக்கு திருப்பி அனுப்ப வேண்டும்.

அமைச்சரவையின் பரிந்துரையை ஆளுனர் திருப்பி அனுப்பும் பட்சத்தில், தாமதிக்காமல், அமைச்சரவை மீண்டும் கூடி, அதேபோன்ற மற்றொரு பரிந்துரையை நிறைவேற்றி அனுப்ப வேண்டும். அவ்வாறு அனுப்பும் பட்சத்தில் அதை ஏற்று அடுத்த சில நாட்களில் 7 தமிழர்களையும் ஆளுனர் விடுவித்தே ஆக வேண்டும் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.

author avatar
Ammasi Manickam