விரைவில் பள்ளிகள் திறப்பு! ஏற்பாடுகள் தீவிரம்!

0
52

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கான ஏற்பாடுகளை மிகத் தீவிரமாக நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் காரணமாக, பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு வகுப்புகள் இணையதளம் மூலமாக நடந்து வருகிறது. சென்ற இரண்டாண்டு காலமாக வீட்டிற்குள்ளேயே இருப்பதால் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, பணிகளை விரைவாக திறக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை திறப்பது தொடர்பாக சென்ற வாரம் முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. அதன் அடிப்படையில் செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் 9 மற்றும் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் செயல்படும். ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி முதல் மருத்துவ கல்லூரிகள் செயல்படத் தொடங்கும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பள்ளிகள் திறப்பது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் நேற்றைய தினம் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை செய்து இருக்கிறார்கள். அதனடிப்படையில் சுழற்சி முறையில் 50 சதவீத மாணவர்கள் மற்றும் பள்ளிக்கு வரவழைத்து வகுப்பு எடுப்பது மற்றும் வகுப்பு இடைவேளையின் போது அனைத்து மாணவர்களுக்கும் ஒரே சமயத்தில் ஒரே இடத்தில் கூட்டமாக வருவதை தடுக்கும் விதத்தில் இடைவேளை நேரமும் மாணவர்களுக்கு ஏற்றவாறு மாற்றி அமைக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

உணவு இடைவேளையின் போது மாணவர்கள் ஒருவருடன் ஒருவர் கூட்டமாக அமர்ந்து உணவு உண்பதற்கு அனுமதி இல்லை. பள்ளி வளாகங்களை தூய்மையாக வைத்திருக்கவேண்டும், பள்ளிகளுக்கு வருகைதரும் மாணவர்களுக்கு நுழைவாயிலில் வெப்பநிலை பரிசோதனை செய்தல் மற்றும் கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்தல், போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதோடு பள்ளிகளுக்கு வரும் அனைத்து மாணவ மாணவிகளும் கட்டாயம் முக கவசம் மற்றும் கையுறைகள் போன்றவற்றை அணிந்து வரவேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுரை கூற தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.பள்ளிகளை திறப்பதற்கு இன்னுமும் 20 தினங்களே இருப்பதால் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் வழிகாட்டு நெறிமுறைகளை தயாரிக்கும் வேலையில் தங்களை மும்முரமாக ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார்கள்.