சாகித்திய அகாதமி விருது பெற்ற பிரபல எழுத்தாளர் காலமானார் 

0
82

தமிழில் புகழ்பெற்ற எழுத்தாளர்களில் ஒருவரான சா.கந்தசாமி இன்று காலை காலமானார். அவருக்கு வயது 80 ஆகிறது.

இவர் 1940-ஆம் ஆண்டு நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் பிறந்தார். இவர் 1968ல் எழுதிய சாயாவனம் என்னும் நாவல் மூலம் எழுத்துலகில் பிரபலமானார். இந்த நாவலை தேசிய புத்தக அறக்கட்டளை நவீன இந்திய இலக்கியங்களில் சிறந்த ஒன்றாக அறிவித்தது.

தமிழக அரசின் லலித் கலா அகாதமியின் முன்னேற்றத்திற்காக இவர் ஆற்றிய பணியைப் பாராட்டும் வகையில் 1995ல் தமிழக அரசு இவருக்கு ஆய்வு உதவி ஊதியம் (fellowship) வழங்கி ஊக்குவித்தது.

மேலும், 1998ல் விசாரணைக் கமிசன் என்ற நாவலுக்காக இவருக்குத் தமிழுக்கான  சாகித்திய அகாதமி விருது  வழங்கப்பட்டது. இவர் எழுதிய “நிகழ் காலத்திற்கு முன்பு” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2006 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சுற்றுப்புறவியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

அண்மைக் காலமாக இவர் உடல்நலம் குறைந்து காணப்பட்டார். அதன் காரணமாக, சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

கடந்த 10 நாட்களுக்கும் மேலாக இதய நோயால் செயற்கை சுவாச கருவி உதவியுடன்  சிகிச்சையில் இருந்து வந்தார். இந்நிலையில், இன்று அதிகாலை 7 மணி அளவில் மருத்துவமனையிலேயே அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்தது.

author avatar
Parthipan K