கிசான் நிதியுதவி திட்டத்தில் மோசடி: சிறப்பு அதிகாரிகள் விசாரணை..!!

0
75

பிரதமரின் கிசான் நிதி உதவி திட்டத்தில், கடலுார் மாவட்டத்தில் நடந்த முறைகேடு குறித்து வேளாண்மைத் துறை கூடுதல் இயக்குநா் காா்த்திகேயன் நேற்று விசாரணை நடத்தினாா்.

நாடு முழுவதும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில், பிரதமரின் விவசாய கிசான் நிதியுதவி திட்டம் 2018-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் நிதியுதவி 3 தவணைகளாக 4 மாதங்களுக்கு ஒரு முறை விவசாயிகளின் வங்கி கணக்கிலேயே செலுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் மூலம் விவசாயிகள் பயன் பெற வருவாய்த் துறையிடம் தங்கள் நிலத்திற்கான பட்டா-சிட்டா சான்றிதழ், ஆதார் எண், வங்கி கணக்கு எண்ணை பெற்றுக்கொண்டு வேளாண் அலுவலகத்தில் விண்ணப்பித்து இந்த உதவித்தொகையை பெற்று வந்தனர். இதன் மூலம் குறைந்த அளவே விவசாயிகள் பயன்பெறுவதால் அதிகளவு விவசாயிகள் பயன்பெறும் வகையில் விவசாயிகளே தானாக முன்வந்து ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மத்திய அரசின் விவசாய நிதியுதவி திட்டத்தில்  கடலூா் உள்பட 13 மாவட்டங்களில் மோசடி நடைபெற்றதாக புகாா் எழுந்தது. இதை தொடர்ந்து வேளாண்மைத் துறை முதன்மைச் செயலா் ககன்தீப் சிங் பேடி மாவட்ட ஆட்சியா்களுடன் அண்மையில் ஆலோசனை நடத்திய போது முறைகேடு குறித்து விசாரணை நடத்த தனி குழு அமைக்க உத்தரவிட்டாா்.

கடலூா் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் நடப்பாண்டு ஏப்ரல் மாதத்திற்கு பிறகு 80,752 பேர் பதிவு செய்துள்ளனா். இவ்வாறு பதிவு செய்தவா்களின் உண்மை தகவலை ஆய்வு செய்ய, சென்னையிலிருந்து வந்த வேளாண்மைத் துறை கூடுதல் இயக்குநா் காா்த்திகேயன் நேற்று விசாரணை நடத்தினா். அவா் கடலூா், குறிஞ்சிப்பாடி, புவனகிரி உள்ளிட்ட பகுதிகளில் கள ஆய்வு செய்தாா்.

கடலூா் மாவட்டத்தில் மட்டும் சுமாா் 37 ஆயிரம் பேர் போலியாக சேர்க்கப்பட்டிருப்பதாக தெரியவருகிறது. தகுதியான விவசாயிகள் விடுபடாமலும், தகுதியற்றவா்களின் விண்ணப்பங்களை தள்ளுபடி செய்யவும் குறுவட்ட அளவில் குழு அமைக்கப்பட்டு சரிபாா்க்கும் பணி நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தனா்.

author avatar
Parthipan K