கண்கலங்கி நிற்கும் விவசாயிகள்!..தண்ணீரில் மூழ்கி நெற்பயிர்கள் நாசம் ..அரசின் முடிவு என்ன?

0
92
Farmers standing in shock!.. Paddy crops submerged in water.. What is the government's decision?
Farmers standing in shock!.. Paddy crops submerged in water.. What is the government's decision?

கண்கலங்கி நிற்கும் விவசாயிகள்!..தண்ணீரில் மூழ்கி நெற்பயிர்கள் நாசம் ..அரசின் முடிவு என்ன?

கடந்த சில நாட்களாக தொடர்ந்து தமிழகத்தில் கன மழை பெய்து வருகிறது.இந்நிலையில் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த இரண்டு வாரங்களாக பகலில் வெயில் வாட்டி வதைக்கிறது.ஆனால் மாலை மற்றும் இரவு நேரம் வந்து விட்டால்  மழை பெய்வது ஆரம்பித்து விடுகிறது.

தஞ்சையில் மட்டும் நேற்று பகலில் வெயில் கொளுத்தியது. பின்னர் மாலை ஆறு மணியளவில் அங்கு மழை பெய்ய தொடங்கியது.நேரம் போக போக கனமழையாக விடாது  கொட்டியது.இந்த மழை தொடர்ந்து ஒரு  மணி நேரம் கொட்டியது.இதையடுத்து மீண்டும் ஒன்பது மணியளவில் மிதமான அளவில் மழை பெய்தது.

இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. குண்டும் குழியுமாக உள்ள தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. இதேபோல் வல்லம், திருக்காட்டுபள்ளி, குருங்குளம், பூதலூர், பாபநாசம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, குத்தாலம், மாப்படுகை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நள்ளிரவில் கனமழை பெய்தது. மாப்படுகை கிராமத்தில் நூறு ஏக்கருக்கு மேல் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி முளைக்க தொடங்கி விட்டன.மொத்த மாவட்டம் முழுவதும் உள்ள தொடர் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த எட்டு ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்து தண்ணீரில் மூழ்கியது.

இதனால் நெல்மணிகள் முளைக்க தொடங்கி உள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதே போல் திருவாரூர், நாகை மாவட்டங்களிலும் நள்ளிரவில் கனமழை பெய்தது. தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மாலை, இரவு நேரங்களில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் முன்பட்ட குறுவை அறுவடை பணிகள் இதனால் பாதிப்படைந்துள்ளது.

பல இடங்களில் வயல்களில் தண்ணீர் தேங்கி உள்ளதால் நெற்பயிர்களை அறுவடை செய்ய முடியாமல் அறுவடை எந்திரங்களை வயல்களிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீட்டு திட்டத்தை தமிழக அரசு அறிவிக்காததால் விவசாயிகள் கவலையில் மூழ்கியுள்ளார்கள்.

எனவே உடனடியாக பயிர் சேதங்களை கணக்கிட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். அரசு நேரடி கொள்முதல் நிலையங்களை அனைத்து பகுதிகளிலும் திறந்து ஈரப்பதத்தை கணக்கில் கொள்ளாமல் கொள்முதல் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.மேலும் விரைவில் இதனை செயல் படுத்த கேட்டுக்கொண்டனர்.

author avatar
Parthipan K