பேருந்து ஓட்டுனராக பணிபுரியும் சி.எஸ்.கே அணியின் முன்னாள் வீரர்

0
67

பேருந்து ஓட்டுனராக பணிபுரியும் சி.எஸ்.கே அணியின் முன்னாள் வீரர்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளரான சுராஜ் ரன்தீவ் ஆஸ்திரேலியாவில் பேருந்து ஓட்டுனராக பணியாற்றி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த 2011 முதல் 2012 வரை சுழல் பந்துவீச்சாளரான சுராஜ் ரன்தீவ் ஐபிஎல் லீக் தொடரில் சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியிருக்கிறார். இலங்கையை சேர்ந்தவரான இவர் கடந்த 2009 முதல் 2016 ஆம் ஆண்டு வரை சர்வதேச கிரிக்கெட் ஆட்டங்களில் அந்நாட்டுக்காக விளையாடி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தான் இவர் தற்போது ஆஸ்திரேலிய நாட்டில் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

image

இது குறித்து தேடியதில் அவர் இதனை வாழ்வாதாரம் ஈட்டும் நோக்கில் செய்து வருவதாக தெரிவித்துள்ளதாக தெரிகிறது. ஆப்-ஸ்பின்னரான இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை இறுதி போட்டியிலும் இந்தியாவுக்கு எதிராக விளையாடி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர் மட்டுமல்லாமல் ஜிம்பாப்வே அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான வெடிங்டன் வாயெங்கா மற்றும் இலங்கை அணியின் முன்னாள் வீரர் சிந்தக நமஸ்தே ஆகியோரும் ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருவது குறித்து ஏற்கனவே தகவல்கள் வெளியாகியுள்ளது.

சுழல் பந்துவீச்சாளரான சுராஜ் ரன்தீவ் 36 வயதை நிறைவு செய்துள்ளார்.இவர் இலங்கை அணிக்காக 12 டெஸ்ட், 31 ஒருநாள் மற்றும் 7 டி 20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதன் மூலமாக அவர் டெஸ்டில் 43 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டிகளில் 36 விக்கெட்டுகளையும், டி 20 போட்டிகளில் 7 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

image

இவ்வாறு அவர் பேருந்து ஓட்டுநராக பணியாற்றும் நேரம் போக மீதியுள்ள நேரங்களில்  உள்ளூர் கிரிக்கெட் கிளப்பிலும் விளையாடி வருகிறார். இதுமட்டுமல்லாமல் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது வலைப்பயிற்சியில் பந்து வீச ஆஸ்திரேலிய அணி அவரை அழைத்திருந்ததாகவும் ஏற்கனவே தகவல் வெளியாகி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது